கே .ஆர். வினோத் இயக்கத்தில் ரெவ்ஜென் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடிக்க,தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, இயக்குநர்கள் எழில், வசந்தபாலன், மித்ரன் ஜவஹர், நடன இயக்குனர் ஸ்ரீதர், அனுமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், “முதலில் இந்தத் தலைப்பை நான் பாராட்டுகிறேன். நல்ல அழகான தலைப்பு. தயாரிப்பாளர் லெனினை முதலில் பாராட்டுகிறேன். நான் கோயம்புத்தூர் காரனாக இருந்தாலும் எந்த கோயம்புத்தூர்க்காரரும் எனக்கு வாய்ப்பு கொடுத்ததில்லை. இவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். என்னிடம் வந்ததுமே முதலில் படம் தயாரிக்கிறாயா? யோசனை செய் , எச்சரிக்கையாக இரு என்றுதான் நான் சொன்னேன். முதலில் அவர் நடித்த 'உன் கூடவே' என்கிற பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு கொடுத்த உந்துதலில் தயாரிப்பாளராக வந்து விட்டார். கதாநாயகன் ஆகிவிட்டார். ஒத்த மனநிலை கொண்டவர்களுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். எனவே இந்த படப்பிடிப்பு இனிமையாக இருந்தது.
ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது படங்களைப் பார்த்த விட்டு வந்தால் படங்களைப் பற்றி திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள்.படம் நன்றாக இருந்தால் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கொண்டு தியேட்டருக்குச் சென்ற காலம் அது. இப்போது அப்படி இல்லை.அனைவரும் பார்க்கும் படி படம் எடுக்கிறார்களா? ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள். மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? திரையரங்குகளில் ஏன் ஆள் வரவில்லை என்று கேட்கிறார்கள். அனைவரும் பார்க்கும் படியான வாழ்வியல் கதைகளை வைத்து படமாக எடுக்க வேண்டும். அப்படி இன்று படங்கள் வருவதில்லை. புதியவர்கள் முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.
Follow Us