பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் ரோஹித் ஷெட்டி. குறிப்பாக ரீமேக் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தமிழில் சூர்யா நடித்த சிங்கம் படத்தை அங்கு அக்ஷய் குமாரை வைத்து இயக்கியிருந்தார். திரைப்படங்களைத் தாண்டி சின்னத்திரையிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் நடுவராகவும் இருந்துள்ளார்.
இவர் மும்பையில் உள்ள ஜூகு பகுதியில் 9 தளம் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இது அவரது சொந்த கட்டடமாகும். இந்தக் கட்டடத்தில் நேற்று மர்ம நபர்களால் நள்ளிரவு 12: 45 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஐந்து முறை சுடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு குண்டு கட்டடத்தில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தில் வெளியே போடப்பட்டிருந்த கண்ணாடியில் பட்டுள்ளது. இதனால் கண்ணாடி சேதம் அடைந்துள்ளது. மற்ற நான்கு குண்டுகள் பில்டிங்கில் பட்டுள்ளது. ஆனால் பெரிதாக சேதம் அடையவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு நடந்த சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த ஹரி பாக்சர் மட்டும் ஹர்மன் ஷந்து ஆகியோரின் பெயர்களில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதில், “எங்கள் பணியில் தலையிட வேண்டாம் என நாங்கள் அவருக்கு பலமுறை மெசேஜ் அனுப்பி இருந்தோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இது வெறும் டிரைலர் தான். இதையும் மீறி அவர் எங்கள் வேலைகளில் தலையிட்டால் வீட்டில் பட்ட குண்டுகள் அடுத்து அவரது பெட்ரூமில் படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவத்துக்கு பின்னால் பிஷ்னாய் கும்பலைச் சேர்ந்த இன்னொரு நபரான சுபம் லாங்கர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவர் கடந்த 2024ஆம் ஆண்டு கொல்லப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கினர். பின்பு மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்பு சந்தேகத்தின் பெயரில் ஐந்து நபர்களை கைது செய்து அவர்களை மும்பை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் சுபம் லோன்கருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல், சல்மான் கானுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தும் அவரது வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us