மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி 2’. இதில் ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் 14ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட போசளர்ககளைப் பற்றி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

முன்னதாக இப்படத்தில் இருந்து வெளியான ‘எம்கோனே’ பாடல் சர்ச்சையில் சிக்கியது. அதாவது இப்பாடலை பாடிய சின்மயி என்னுடைய கொள்கைக்கும் இதற்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது எனவும் அதற்காக வருந்துகிறேன் எனவும் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மோகன் ஜி, பொதுவெளியில் எந்த முகாந்திரமும் இல்லாமல் கலங்கம் ஏற்படுத்தியிருப்பதாக கூறி இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து அப்பாடலில் சின்மயி குரலை நீக்கிவிட்டு வேறொரு பாடகியின் குரலை பயன்படுத்தியுள்ளார். 
 
இப்படம் முதலில் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்பு திடீரென பொங்கலை முன்னிடு ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்பு மீண்டும் ஜன.23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது. இதனையொட்டி படத்திற்கு பாமக அன்புமணி, பாஜக முன்னாள் தமிழக தலைவர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மோகன் ஜி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisment

இந்த நிலையில் ரிச்சர்ட் ரிஷி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “திரௌபதி 2 பட வெளியீட்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய வந்திருக்கேன். படம் அருமையாக வந்திருக்கிறது. நீங்கள் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும். அடுத்து மூணு படங்கள் நடிக்கிறேன்” என்றார். இடையில் அவரிடம் அஜித் கார் ரேஸில் கலந்து கொள்வது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர் அவரு வேலையில இருக்கார்” என்றார். இவர் அஜித்தின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.