புதுமுகங்கள் இணைந்து அவ்வப்போது புது கான்செப்டில் பல படங்கள் எடுத்து ரிலீஸ் செய்கின்றனர். அதில் சில படங்கள் மட்டும் வரவேற்பை பெற்று வெற்றி பெறுகின்றன. பல படங்கள் காணாமல் சென்று விடுகிறது. தற்போது இதே போன்ற ஒரு புது கான்செப்ட் வைத்துக்கொண்டு உருவாகி இருக்கும் இந்த யாதும் அறியான் எந்த வரிசையில் இணைந்திருக்கிறது? 

மிகவும் இன்னசண்டாக இருக்கும் நாயகன் தினேஷ் தனது காதலி பிரணாவை உண்மையாக காதலிக்கிறார். பிரணாவும் இவரை உண்மையாக காதலிக்கிறார். இருந்தாலும் மற்றவர்களைப் போல் இவர்கள் காதல் நெருக்கமாகவும் ரொமான்டிக்காகவும் இல்லாமல் இருப்பது தினேஷுக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. அதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் அவர் காதலி பிரணா உடன் அவர் நண்பர்களான ஆனந்த் பாண்டி ஷியாமல் தம்பதியினரை கூட்டிக்கொண்டு மலைப் பிரதேசத்திற்கு செல்கிறார். 

சென்ற இடத்தில் ஒரு ரிசார்ட்டில் ரூம் புக் செய்து நாயகன், நாயகி இருவரும் தங்குகின்றனர். அங்கு நாயகி பிரணாவை எப்படியாவது கரெக்ட் செய்து விட வேண்டும் என அருகில் நெருங்கும் தினேஷுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. மிகவும் ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த பிரனா அவரை அருகில் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்கிறார். இதனால் கடுப்பாகும் தினேஷ் எப்படியோ சமாதானம் செய்து பிரணாவுடன் ஒன்று சேர்ந்து விடுகிறார். இதைத்தொடர்ந்து அதிர்ச்சிகரமாக நாயகி பிரணா படுக்கையறையில் இறந்து கிடைக்கிறார். இதனால் பதட்டமாகும் தினேஷ் அருகில் இருக்கும் தன் நண்பர்களை அழைக்க அவர்களும் அதிர்ச்சியாகின்றனர். மிகவும் பதட்டத்தில் இருக்கும் தினேஷ் ஒரு கட்டத்தில் அவர்களையும் கொலை செய்து விடுகிறார். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சனைகளில் இருந்து அவர் தப்பிக்க முயற்சி செய்கிறார். பிறகு அவர் தப்பித்தாரா, இல்லையா? என்பதை இப்படத்தின் மீதி கதை. 

நாயகி ஏன் இறந்தார்? என கேள்வி உடன் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் இந்த திரைப்படம் போகப் போக எதிர்பாராத திருப்புமுனைகள் ஏற்பட்டு திரைக் கதையிலும் சுவாரசியம் கூடி கதை வேகமாக நகர்கிறது. பின் இறுதி கட்ட காட்சிகளில் வரும் எதிர்பாராத ஒரு விஷயம் பார்ப்பவர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும்படியாக இந்த படத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் எம்.கோபி. நாம் ஏற்கனவே பார்த்து பழகிய காட்சி அமைப்புகளை வைத்துக்கொண்டு புதுவிதமான ஒரு கதையை உருவாக்கி அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் அதில் சற்றே தடுமாறி பிறகு சுதாரித்துக் கொண்டு ஓரளவு சிறப்பான படமாக கொடுத்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்திருக்கிறார். குறிப்பாக படத்தை ஒன்றரை மணி நேர படமாக கொடுத்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. 

Advertisment

நாயகன் தினேஷ் மிகவும் இன்னசென்டான கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவரது தோற்றமும் நடை, உடை பாவணையும் வித்தியாசமாக அமைந்திருப்பது கதாபாத்திரத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. நாயகி பிரணா சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இவரது எதார்த்த நடிப்பு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற உணர்வை கொடுத்திருக்கிறது. நம் அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்கள் இந்த மாதிரி நிலைகளில் எப்படி தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள் என்பதை தன் நடிப்பின் மூலம் எதார்த்தமாக கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். 

இவர்களது நண்பர்களாக வரும் மற்றொரு தம்பதியினர் இன்றைய கால காதலர்களை அப்படியே பிரதிபலித்துக் காட்டி கவர்கின்றனர். இவரது நண்பராக வரும் விஜய் டிவி புகழ் ஆனந்த் பாண்டி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அப்பு குட்டி சிறப்பான பங்களிப்பை கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். இவரது எதார்த்தம் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. சில காட்சிகளை வந்தாலும் தம்பி ராமையா கலகலப்பாக நடித்துவிட்டு சென்று இருக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். 

தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் பின்னணி இசை ஓகே. எல் டி ஒளிப்பதிவில் கொலை மற்றும் அதை சுற்றி அமைக்கப்பட்ட காட்சிகள் சிறப்பு. வழக்கமான காட்சி அமைப்புகள் மூலம் படத்தை நகர்த்தி இருப்பதாலும் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய திரைக்கதை யுக்திகளை கையாண்டிருப்பதும் படத்திற்கு சற்றே மைனஸ் ஆக அமைந்திருந்தாலும் புதுமுக நடிகர்கள் ஒன்றிணைந்து பங்களிப்பு கொடுத்து, வித்தியாசமான கதை கருவை வைத்துக்கொண்டு இறுதி கட்ட காட்சிகள் எதிர்பாராத விதமாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் வரும் எதிர்பாராத திருப்பம் சிலருக்கு ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் பலருக்கு ஏமாற்றமே கொடுத்திருப்பதை இன்னும் கூட மாற்றி அமைத்திருக்கலாம். 

Advertisment

யாதும் அறியான் - பகல் கனவு!