இரும்புத்திரை - விமர்சனம்
நமது ஃபோனைப் பயன்படுத்தி ஊருக்கு செல்ல பேருந்து இருக்கை முன்பதிவு செய்கிறோம். அடுத்து நாம் ஃபேஸ்புக் பயன்படுத்தினால் நாம் செல்லும் ஊரில் இருக்கும் ஹோட்டல் விளம்பரங்கள் நம்மை அழைக்கின்றன.
தினமும் காலையில் நாம் அலுவலகம் செல்லும் முன், டிராஃபிக் எப்படியிருக்கிறது என்று செக் செய்ய கூகுள் மேப் பயன்படுத்துகிறோம். சில நாட்களில் நாம் ஆஃபிசுக்குக் கிளம்ப தாமதமானால், 'டைம் டு ஸ்டார்ட்' என்று கூகுள் நம் மேனேஜரைப் போல் நமக்கு உத்தரவிடுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் அதன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை இன்னொரு இன்னொரு நிறுவனத்துக்குக் கொடுத்து அது தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது வெளிவந்து அதிர்ச்சியளித்தது.
மும்பையில், பூனேவில் என பல ஊர்களில் அக்கௌன்ட் வைத்திருப்பவருக்கே தெரியாமல் பணம் பறிபோகும் செய்திகள் வருகின்றன.
இப்படி நம் தகவல்கள் பிறரின் வணிகமாக இருப்பது மெல்ல வெளியே வருகிறது. இதன் அடுத்த கட்டம் எப்படியிருக்கும், அதன் ஆபத்து எந்த அளவு இருக்கும் என நம் மொபைல் திரை, ATM இயந்திர திரை ஆகிய நம் வாழ்வின் திரைகளுக்குப் பின் நடக்கக் கூடிய குற்றங்களைக் காட்டுகிறது இயக்குனர் பி.எஸ்.மித்ரனின் 'இரும்புத்திரை'.
ராணுவத்தில் மேஜராக இருக்கும் விஷால் மிகுந்த கோபக்காரர். அவரது அதீத கோபம் பல துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு செல்ல, 'ஆங்க்ரி மேனேஜ்மென்ட்' எனப்படும் கோபத்தை மேலாண்மை செய்யும் வகுப்புக்கு அனுப்பப்படுகிறார். அங்கு, சமந்தாதான் ஆலோசகர். அவர், இவருக்கு ஒரு அசைன்மென்ட் கொடுக்க, அதற்காக 12 வயதிலேயே விலகி வந்த தன் குடும்பத்திடம் மீண்டும் செல்கிறார் விஷால். பாசம், பணத்தேவை, அதற்காக தவறான வழியில் செல்ல வேண்டிய நிலை, அதற்குக் கொடுக்கும் விலை, மீண்டும் போராடி வென்றாரா என்பதுதான் இரும்புத்திரை. படத்தின் முக்கிய பிரச்சனைக்கு முன் கொடுக்கப்பட்டுள்ள பலமான இந்த அடித்தளமே பலமும் பலவீனமும். கடன் வாங்குவதன் மேல் விஷாலுக்கு உள்ள வெறுப்பு, ராணுவ வீரருக்கு கடன் கிடைப்பதில் உள்ள சிக்கல், பணத் தேவை உள்ளவர்களுக்கு விரிக்கப்படும் நவீன டிஜிட்டல் வலை, அந்த குற்றத்தில் உள்ள அடுக்குகள், தொழில்நுட்ப விவரங்கள் என விலாவரியாக பேசும் படம் இடைவேளையில்தான் முக்கிய கட்டத்திற்கு நகர்கிறது. அதன் பின் விறு விறு 'டெக்' போர்தான். அனைவருக்கும் புரியும் வகையில் தொழில்நுட்ப விஷயங்களைப் பேசியிருப்பது சிறப்பு.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விஷால், கம்பீரமான கோபக்கார ராணுவ வீரர். ஏற்றுக் கொள்ளும்படியான இயல்பான நடிப்பு. சமந்தா, அழகான ஆலோசகர். முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகி பாத்திரங்கள் வணிக ரீதியான படத்தில் இருப்பது ஆறுதல். ஆனால், எல்லா வசனங்களையும் அவ்வளவு மென்மையாகத்தான் பேச வேண்டுமா? ரோபோ ஷங்கர், விஷாலுக்கு அளவான நகைச்சுவை இணை. இந்தப் புதிய கூட்டணி ரசிக்க வைக்கிறது. நடிப்பில் டெல்லி கணேஷ் மிகச் சிறப்பு. கடன் வாங்குபவரின் தடுமாற்றம், குற்ற உணர்வற்ற கிறுக்குத்தனம் என அனைத்தையும் தன் அனுபவத்தால் அழகாகக் கடத்துகிறார். விஷாலின் தங்கை பாத்திரம் மட்டும் சற்று விலகி தெரிகிறது.
ஹைடெக் வில்லனாக அர்ஜுன். பெரிய பிரயத்தனமெல்லாம் இல்லாமலேயே தன் தோற்றத்தாலும், ஸ்டைலாலும்அசத்துகிறார். இப்படிப்பட்ட வில்லன் பாத்திரத்துக்கு 'தனி ஒருவன்' சித்தார்த் அபிமன்யு ஒரு பெஞ்ச் மார்க் செட் செய்துவிட்டதால் ஒப்பீடைத் தவிர்க்க முடியவில்லை. அதற்கேற்ப ஜீனியஸ் வில்லன், மாணவர்கள் முன் உரை, மினிஸ்டர் வரை மிரட்டல் என இவர்களும் 'தனி ஒருவ'னை நினைவுபடுத்தும் பல விஷயங்களை வைத்திருக்கிறார்கள். அதையும் தாண்டி ஈர்ப்பது அர்ஜுன்- விஷால் சண்டைக் காட்சி. திலீப் சுப்பாராயனின் அடி ஒவ்வொன்றும் அழுத்தமாய் விழுகிறது. பல நாட்கள் கழித்து, பார்ப்பவர்களையும் உணர வைக்கும் சண்டை அமைப்பு.
மித்ரன்-சவரிமுத்து-ஆண்டனி பாக்யராஜ் கூட்டணியின் வசனம் எளிமையாக ஈர்க்கிறது. கடன் கொடுத்து வசூல் செய்யும் வங்கிகள், விவசாயிகளுக்கு எதிராக பேசும் தனியார் வங்கிகளை வெளுத்து வாங்குகிறார்கள், கைதட்டல் கிடைக்கும் என்பது தெரிந்து. ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் ரூபனின் படத்தொகுப்பும் முதல் தரம். படத்திற்கு ரிச் லுக் தருகின்றன. வெகு நாள் கழித்து பின்னணி இசையில் உண்மையிலேயே 'யுவன் இஸ் பேக்'. ஆம், படத்தின் பதற்றத்தை நமக்குள் பற்ற வைக்கிறது யுவன் இசை.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
கோபக்கார ராணுவ வீரர் அதற்கான பயிற்சிக்கு அனுப்பப்படுவது என்னும் ஒரு விஷயம் மட்டும் சமீபத்தில் வெளிவந்த 'என் பேர் சூர்யா, என் வீடு இந்தியா' படத்தை நினைவுபடுத்துகிறது. 'டெக்னிக்கல் த்ரில்லர்' படங்களுக்கே உரிய இன்னொரு பிரச்சனையும் இதில் இருக்கிறது. போற போக்கில் எல்லாத்தையும் ஹேக் செய்வது, எல்லா பழிவாங்கலையும் டெக்னிகலாகவே செய்வது போன்ற விஷயங்கள் சற்று அயர்ச்சி. நாம் அனுதினமும் பயன்படுத்தும் செல்போனில் அலட்சியமாக செய்யும் விஷயங்களாலும், அரசு நம்மிடம் பெறும் தகவல்களைக் கொண்டும் கூட இவ்வளவு பெரிய மோசடிகள் நடக்க முடியுமென்று நமக்கு அபாய மணி அடித்திருக்கிறது படம்.
அத்தனையும் தாண்டி, படம் முடிந்ததும், 'தேவையில்லாமல் நாம் இன்ஸ்டால் செய்திருக்கும் 'ஆப்'களை (app) அழிக்க வேண்டும், நமக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் கவனமாகப் பேசவேண்டும்' என்று நம் மனதில் எழும் விழிப்புணர்வே இரும்புத்திரையின் வெற்றி.