Advertisment

விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ஆசை! சங்கத்தமிழன் - விமர்சனம்

நம் மனதிற்குஒருவரை பிடித்துவிட்டால் அவர் என்ன செய்தாலும் பிடிக்கும். தமிழ் சினிமா ரசிகர்களில் பெரும்பாலானவர்களுக்கு சமீபத்தில்அப்படியாகிவிட்டார் விஜய் சேதுபதி. அந்த அன்பையும் அபிமானத்தையும் எந்த அளவு நம்பலாம், பயன்படுத்தலாம்? விஜய் சேதுபதிக்கு உருவாகி, பெருகி வரும் மாஸ், ரசிகர் கூட்டத்தை முழுமையாக நம்பி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர். எப்படி இருக்கிறது 'சங்கத்தமிழன்'?

Advertisment

vijay sethupathi

சென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி வரும் விஜய் சேதுபதி (முருகன்), ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரை பெரும் பணக்காரரின் மகளான ராஷி கண்ணா காதல் செய்கிறார். இருவரும் ஒன்றாய் நேரம் கழிப்பதை அறியும் ராஷி கண்ணாவின் தந்தை இடைவேளைக்கு சற்று முன்விஜய் சேதுபதியை பார்க்க வருகிறார். விஜய் சேதுபதியை பார்த்து அதிர்ச்சியடையும் அவர், "இவன் முருகன் இல்லடா... சங்கத்தமிழன்டா..." என்கிறார். பிறகு என்ன? என்னவெல்லாம் வருமென்று நம் மனது சொல்கிறதோ அதெல்லாவற்றையும் ஏமாற்றாமல் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர்.

Advertisment

முதல் காட்சியில் ஒரு வில்லன் கும்பலால் பெண் ஒருவர் பலவந்தப்படுத்தப்படும்போது என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி, பெண்ணை காப்பாற்றி, "கீழ அத்தனை பேர் இருக்கும்போது எப்படிடா மேல வந்த?" என்று கேட்டவருக்கு, "அதை கீழ இருக்கவன்கிட்ட கேளுடா, நான்தான் மேல வந்துட்டேன்ல" என்று பன்ச் சொல்கிறார். திருமணத்திற்கு முன் கருவுற்று கருவை கலைக்கச் செல்லும் பெண்ணுக்கு அறிவுரை சொல்கிறார், அவரது தந்தைக்கு அறிவுரை சொல்கிறார், சினிமா முயற்சி செய்வோருக்கு அறிவுரை சொல்கிறார், கிராம மக்களுக்கு அறிவுரை,விவசாய அறிவுரை என பாசிட்டிவ் விஷயங்களை பாதையெங்கும் தூவிச் செல்கிறார் விஜய் சேதுபதி. வழியில் ஆங்காங்கே அரசியல் டச், காதல், சண்டை என ஒரு முழு மாஸ் நாயகனாக உருமாறி முழு மாஸ் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் போல... தவறான ஆசையில்லை. இத்தனையும் வெற்றி பெற அடித்தளமான நல்ல கதை, திரைக்கதைஇருக்கிறதா என்பதை உறுதி செய்திருக்கலாம்.

vijay sethupathi soori

விஜய் சேதுபதி, தனது ஸ்டைல் வசனம், மேனரிசம்களால் நாம் பார்த்துப் பழகிய நாயகன் பாத்திரத்தை வித்தியாசப்படுத்தி கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார். அவருடன் வரும் சூரி, சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். நாயகிகளில்ராஷி கண்ணா, ஹீரோவை லவ் பண்ணும் பணக்காரத் தந்தையின் மகளாக எந்த சிறப்புமில்லாத பாத்திரத்தில் உலா வருகிறார். இன்னொரு நாயகி நிவேதா பெத்துராஜ், தைரியமான கிராமத்துப் பெண்ணாக துடிப்பான பேச்சுடன் கவனம் ஈர்க்கிறார். நாசர், மைம் கோபி, ஸ்ரீமன், கல்லூரி வினோத், இன்னும் பலரென எக்கச்சக்க நடிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால், எந்த நடிகருக்கும்புதிதாக, பெரிதாக மனதில் நிற்கும் பாத்திரம் இல்லாததுகுறை. மிரட்டலான வில்லன்களாக வரும் இருவரையும் பார்த்து பயத்திற்கு பதில் பாவ உணர்வே வருகிறது.

அறிமுகக் காட்சியில் பெண்ணை காப்பாற்றும் ஹீரோ, திருவிழாவில் தீவைக்கும் வில்லன், ஹீரோவை பழிவாங்க ஊர் மக்களை தாக்கும் டெக்னிக், அடிக்கடி ஸ்லோ மோஷனில் நடை, அடிக்கு அடி ஸ்லோ மோஷன் என படத்தில் எங்கெங்கு காணினும் பார்த்துப்பழகிய விஷயங்களை நச்சு ஆலைக்கு எதிராகப் போராட நாயகன் தலைமையில்இணையும் கிராமம் என்ற சமீபத்திய ட்ரெண்டில் கலந்து கொடுத்திருக்கிறார் விஜய் சந்தர். ஆனால் அது சரியாகப் பொருந்தவில்லை என்றே சொல்லவேண்டும்.மக்கள் போராட்டங்களை 'ட்ரெண்ட்' என்று சொல்வது தவறுதான். ஆனால், அந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டன தொடர்ந்து அத்தகைய காட்சிகளை, கதையை கொண்டு வரும் படங்கள். குறிப்பிடத்தக்க அளவில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் நாயகன் மட்டுமே போதும், அவரை 'மாஸ்'ஸாகக் காட்டினால் போதுமென்று அவர் திருப்தியடைந்துவிட்டார் போல... படம் பார்த்தவர்கள் திருப்தியடையவில்லை. இந்தப் படத்தின் நோக்கத்திற்குத்தங்களால் இயன்ற அளவு உதவியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் வேல்ராஜும், இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இரட்டையர்களும். 'கமலா கலாசா' பாடல் கலகலப்பாகக் கடக்கிறது.

rashi kanna

2000ஆம் ஆண்டு தொடங்கி பல வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் வணிக ரீதியான பொழுதுபோக்குப்படங்களுக்கென ஒரு டெம்ப்லேட் உருவானது. தில், தூள், கில்லி, திருப்பாச்சி, ஏய், சாமி... இப்படி பல படங்களில் சில சில மாற்றங்கள் இருந்தாலும் நாயகனுக்கான தன்மை, பன்ச் வசனங்கள், சண்டை காட்சிகள், வில்லனின் தன்மைகள், பாடல்கள் உள்ளிட்ட பெரும்பாலான விஷயங்களில் ஒற்றுமையை உணரலாம். அந்த ஒற்றுமையை தாண்டி அந்தந்தப் படங்களின் சுவாரஸ்யங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, நகைச்சுவை, பாடல்கள் என பலவும் சேர்ந்து அந்தப் படங்களை வெற்றிப்படங்களாக்கின. பின்னர் இந்த டெம்ப்லேட் படங்கள் குறைந்துவிட்டன. அந்த டெம்ப்லேட்டை மட்டும் கொண்டு வந்திருக்கிறது'சங்கத்தமிழன்'. விஜய் சேதுபதி மீதான ரசிகர்களின் அன்பும் அபிமானமும் எப்படிப்பட்ட படங்களால், பாத்திரங்களால் உருவானது என்பதையும் அவர் திரும்பிப்பார்க்கவேண்டும்.

actor soori moviereview sangatamizhan vijaysethupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe