
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி விஜய் சேதுபதிக்கு ஒரு வித்தியாசமான படமாக கொடுக்க முயற்சி செய்து சற்றே சறுக்களை சந்தித்த ஆறுமுககுமார், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி உடன் கூட்டணி அமைத்து இந்த ஏஸ் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவர்களின் முந்தைய படம் போல் சொதப்பியதா..? அல்லது ரசிகர்களை கவர்ந்ததா..?
தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டு மலேசியாவுக்கு வரும் விஜய் சேதுபதி யோகி பாபுவின் உறவினர் என பொய் சொல்லி அவருடன் தங்கி கிடைக்கின்ற வேலைகளை செய்து வருகிறார். அவருக்கும் எதிர் வீட்டுப் பெண் ருக்மிணி வசந்துக்கும் காதல் ஏற்படுகிறது. ருக்மிணி வசந்த், அவரது வளர்ப்பு அப்பாவான பப்லு பிரித்திவிராஜிடம் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து விடுபட அவருக்கு 20 மில்லியன் மலேசியன் வெள்ளிகள் தேவைப்படுகிறது. இதற்காக விஜய் சேதுபதி திட்டமிட்டு வங்கியில் அந்த பணத்தை கொள்ளையடிக்கிறார். போலீஸ் அவரை வலை வீசி தேடுகிறது.

இதற்கு இடையே வில்லன் கே.ஜி.எஃப். அவினாஷிடம் விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் சூது ஆட சென்று தோற்று விட்டு அவர்களது பாஸ்போர்ட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இதைத் தொடர்ந்து வில்லன ஆட்களுக்கு இவர்களின் கொள்ளை விஷயம் தெரிய வருகிறது. தற்பொழுது வில்லன் ஆட்கள், போலீஸ், மற்றும் பப்லு பிரித்விராஜ் ஆகியோர் இந்த பணத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என எண்ணி விஜய் சேதுபதியை துரத்துகின்றனர். இவர்களிடமிருந்து விஜய் சேதுபதி தப்பித்தாரா, இல்லையா? நாயகி ருக்மிணியின் பிரச்சனை தீர்ந்ததா, இல்லையா? கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்ன ஆனது? என்பதே இப்படத்தின் மீதி கதை.
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திற்கு பிறகு இந்த படத்தை கையில் எடுத்திருக்கும் ஆறுமுககுமார் இந்த முறை வழக்கமான நாம் ஏற்கனவே பார்த்து பழகிய ஒரு கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். புதிய முயற்சியாக கதை களத்தை மற்றும் மலேசியாவில் அமைத்திருக்கிறார். மலேசியாவுக்கு ஏன் எதற்கு என தெரியாமலேயே வரும் விஜய் சேதுபதி வந்த இடத்தில் செய்யும் அட்ராசிட்டியே இந்த படத்தின் கதைக்களம். விஜய் சேதுபதியும் யோகி பாபுவும் இணைந்து படம் முழுவதும் பயணிக்கின்றனர். இவர்கள் இருவரை வைத்துக்கொண்டு நாம் ஏற்கனவே பார்த்து பழகிய ஒரு வங்கியை கொள்ளையடிக்கும் படியான ஒரு கதை களத்தை வைத்துக்கொண்டு அதன் மூலம் நாயகன் எப்படி எல்லாம் தன்னை எதிர்ப்பவர்களை டிமிக்கி கொடுத்து தன் பிரச்சனையை எப்படியெல்லாம் சமாளித்து தப்பிக்கிறார் என்பதை இந்த காலத்திற்கு ஏற்ப சில ஐடியாக்களை உட்பகுத்தி அதன்படி திரைக்கதை அமைத்து ஓரளவு ரசிக்கும்படியான படத்தையே கொடுத்திருக்கிறார்.

முதல் பாதி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கிளிஷேவான காட்சிகள் மூலம் படம் நகர்ந்தாலும் போகப்போக விறுவிறுப்பு கூடி இரண்டாம் பாதியில் இருந்து வேகம் எடுத்து இறுதியில் கலகலப்பான ஒரு ரசிக்கத் தக்க படமாக முடிந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. பணத்தை கொள்ளை அடித்து விட்டு அதை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வைப்பது மற்றும் அதை கொள்ளையடிக்க விஜய் சேதுபதி போடும் திட்டங்கள் என விறுவிறுப்பான காட்சிகளால் படம் ரசிகர்களை சீட்டில் கட்டி போட்டு வைக்கும்படி அமைந்திருப்பது படத்துக்கு பிளஸ். அதே சமயம் கதைக்களம் மட்டும் புதிது ஆனால் அதில் இருக்கும் கதையோ பழையது என்பதால் அடுத்தடுத்த காட்சிகள் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகிக்கும்படி இருப்பது சற்றே மைனஸ். இருந்தும் இரண்டரை மணி நேரம் படம் தொய்வில்லாமல் சரசரவென்று நகர்வது படத்தை காப்பாற்ற உதவி இருக்கிறது.
விஜய் சேதுபதி வழக்கம் போல் தன்னுடைய டிரேட் மார்க்க்கான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறார். இவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் காட்சிகளை என்ஹான்ஸ் செய்திருக்கிறது. படத்தின் இன்னொரு நாயகனாக படம் முழுவதும் விஜய் சேதுபதியுடன் வரும் யோகி பாபு, மாவீரன் படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு சிறப்பான காமெடி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இந்த முறை பார்ப்பவர்களுக்கு நன்றாகவே கிச்சு கிச்சு மூட்டி இருக்கிறார். இவரும் விஜய் சேதுபதியும் சேர்ந்தடிக்கும் லூட்டிகள் படம் முழுவதும் சிரிப்பலைகளை உண்டாக்கி படத்தையும் காத்து இருக்கிறது. நாயகி ருக்மிணி வசந்த் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் அழகான உணர்ச்சிகளை அளவாக வெளிப்படுத்தி கவர்ந்திருக்கிறார். கதாநாயகி வேடத்திற்கு அவர் ஒரு நல்ல தேர்வு. இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் நடிகையும் அழகாக இருக்கிறார், இவரும் அழகான நடிப்பை அளவாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவர் சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார்.

கே.ஜி.எஃப் அவினாஷ் வழக்கம்போல் வில்லத்தனம் காட்டி வழக்கமான பயத்தை காட்டி விட்டு சென்றிருக்கிறார். மிரட்டல் வில்லத்தனம் காட்டும் பப்லு பிரித்திவிராஜ் பல இடங்களில் எரிச்சல் ஊட்டும் படியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்று இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருக்கு ஒரு நல்ல வேடம் அதை சரியான முறையில் பயன்படுத்தி இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் சுமார். சாம் சி.எஸ். பின்னணி இசை வழக்கம்போல் சத்தமாக இல்லாமல் இந்த படத்தில் சற்றே சிறப்பாக அமைந்திருக்கிறது. கரண் ஒளிப்பதிவில் மலேசியா மற்றும் அதை சுற்றி உள்ள காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்சன் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
நாம் ஏற்கனவே பார்த்து பழகிய கதையை விஜய் சேதுபதியை வைத்துக்கொண்டு வழக்கமான நாயகர்கள் என்ன செய்வார்களோ அதையே அவரையும் செய்ய வைத்து அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் அதில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார். கதை பழையதாக இருந்தாலும் காட்சி அமைப்புகளும் திரைக்கதை வேகமும் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
ஏஸ் - காமெடி கிளப்!