வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கும் இந்த பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் வெளியான முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனாலையே இந்த படத்திற்கு மிகப்பெரிய ஹைப் உருவாகியது. சென்சாரிலும் இந்த படம் தடை செய்யப்பட்டு பிறகு அப்பீலிங் கமிட்டிக்கு சென்று பல்வேறு வெட்டுகள் போடப்பட்ட பின் மீண்டும் சென்சார் செய்யப்பட்டு தற்பொழுது வெளியாகி இருக்கும் நிலையில் இந்த சர்ச்சைக்குரிய பேட் கேர்ள் எந்த அளவு வரவேற்பை பெற்று இருக்கிறாள்?
மிகவும் முன் தங்கிய வகுப்பை சேர்ந்த மிக மிக ஆர்த்தடாக்ஸ் குடும்பப் பின்னணியை சேர்ந்த அஞ்சலி சிவராமன் தனது பள்ளிப் பருவத்தில் டீன் ஏஜ் காதலில் விழுகிறார். அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அவரது தாய் சாந்தி பிரியாவின் ஸ்ட்ரிக்ட்டான நடத்தை காரணமாக அந்த காதல் அப்படியே பாதியிலேயே கட் ஆகிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்கும் அஞ்சலி சிவராமன் அடுத்தக்கட்டமான கல்லூரி படிப்பு மற்றும் அவருடைய கேரியரை வீட்டிலிருந்து வெளியே சென்று தனிமையில் எதிர்கொள்கிறார். தனக்கான சுதந்திரத்தை தேடிக்கொண்டு சென்ற அவர் தான் விரும்பிய படியான காதல் வாழ்க்கை அமைய ஒவ்வொரு காலகட்டமாக பயணிக்கிறார். அந்தப் பயணத்தில் அவர் ஆசைப்படி அவருக்கு வாழ்க்கை அமைந்ததா, இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதி கதை.
பதின் பருவ காதலில் ஆரம்பித்து கல்லூரி காதல் வரை தொடர்ந்து, அதில் ஏற்படும் சந்தோஷம், துக்கம், பரிதவிப்பு, அழுகை, ஏக்கம், துன்பம், நட்பு என அனைத்துவித உணர்வுகளையும் புரிந்து 30 வயது கடந்த பின்பு ஒரு மெச்சூரிட்டி ஏற்படுவது வரை, ஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் அனைத்து விஷயத்தையும் போற போக்கில் கிட்டத்தட்ட பெண்கள் பாயிண்ட் ஆஃப் வியூவில் இந்த பேட் கேர்ள் மூலம் கூறியிருக்கிறார் அறிமுக இயக்குநர் வர்ஷா பரத். ஒவ்வொரு பெண்ணின் அகப்போராட்டத்தையும் இந்த காலகட்டத்தில் இருக்கும் ஜென்-சி தலைமுறைக்கான படமாக மிக எதார்த்தமாக உருவாக்கி நிஜத்திற்கு மிக மிக அருகில் சென்று கிட்டத்தட்ட அர்ஜுன் ரெட்டி பாணியில் மிகவும் ராவாக பெண்ணின் உணர்ச்சிகளையும் அதை அவர் சந்திக்கும் உணர்வுகளையும் நேர்த்தியாக அதேசமயம் எதார்த்தமாகவும் படம் பிடித்துக் காட்டி பாராட்டைப் பெற்றிருக்கிறார். பெண் சுதந்திரம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றார் போல் எப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றது என்பதை போகிற போக்கில் ஒரு வசனம் மூலம் கூறி இருந்தாலும் அதை காட்சிக்கு காட்சி இந்த கால இளைஞர்களை கவரும் வகையில் காட்சிப்படுத்தி அதன்மூலம் பார்ப்பவர்கள் மனதுக்குள் புரியும்படி கடத்தியிருக்கிறார்.
கதைக்குள் பெண்ணியத்தை அவரவர் பாயிண்ட் ஆஃப் வியூவில் புகுத்தி அதற்கேற்ற நியாயம் செய்த இயக்குநர் காட்சிகளிலும் திரைக்கதை வேகத்திலும் இன்னும் கூட சுவாரசியத்தை கூட்டி இருக்கலாம். அதேபோல் பெண்கள் மற்றும் இக்கால ஜென்-சி பதின்பருவ பெண்கள் ரசிக்கும் வகையில் இப்படம் அமைந்தாலும் மற்றவர்களை சேட்டிஸ்ஃபை செய்ய சற்று தவறி இருக்கிறது. மற்றபடி கதையும் கதாபாத்திர தேர்வும் வாழ்வின் எதார்த்தத்தை தெள்ளத் தெளிவாக அப்படியே பிரதிபலித்து காட்டியிருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. இவ்வளவு ஒரு போல்டான அட்டம்டை செய்ததற்காகவே இந்த படத்தை காணலாம். பெண்களின் உள் உணர்வு மற்றும் அவர்களின் வாழ்வியல் முறையில் இருக்கும் முரண்களை எதார்த்தமாக காட்டி இருப்பதும் படத்திற்கு இன்னொரு பிளஸ்.
நாயகியாக வரும் அஞ்சலி சிவராமன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ஜஸ்ட் லைக் தட் போன்று அசால்ட்டாக ஹேண்டில் செய்திருக்கிறார். எந்தெந்த இடங்களுக்கு எந்த மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக மிக சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். இவரின் எதார்த்தமான அதே சமயம் இக்கால ஜென்-சிகளை அப்படியே கண்முன் கொண்டு வரும்படியான நடிப்பு மிக மிக சிறப்பாக அமைந்து இருப்பது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. முழு படத்தையும் இவர் தன் தோள் மேல் சுமந்து சென்று இருக்கிறார். இவருக்கு விருதுகள் நிச்சயம். இவரின் அம்மாவாக வரும் சாந்திப்பிரியா நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தலை காட்டியிருக்கிறார். இவரின் எதார்த்த அனுபவ நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. அது காட்சிகளுக்கும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.
நாயகியின் காதலனாக வரும் மலையாள நடிகர் ஹிருது அருண் சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பாகவே கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். நாயகியின் நண்பராக வரும் சரண்யா ரவிச்சந்திரன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இன்னொரு நாயகனாக வரும் டீஜே அருணாசலம் சில காட்சிகளை வந்தாலும் மனதை கவர்கிறார். கல்லூரி காலத்து காதலனாக வரும் சஷாங்க் அப்படியே டீன் ஏஜ் பருவக்காதலை இக்காலத்திற்கு ஏற்ப தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்றிருக்கின்றனர்.
அமித் திருவேதி இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. பாடல்கள் அந்த சமயத்தில் காட்சிகளுடன் ஒன்றி இருந்தாலும் மனதில் ஒட்ட மறுக்கிறது. பிரீத்தா ஜெயராமன், ஜெகதீஸ் ரவி, பிரின்ஸ் ஆண்ட்ரசன் ஆகியோரின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாழ்வியலுக்கு ஏற்றார் போல் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டு படத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றார் போல் இவர்கள் பயன்படுத்தி இருக்கும் நிறங்கள் இன்னொரு பிளஸ் ஆக மாறி இருக்கிறது.
படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எங்கு ஆரம்பித்து எங்கு சென்று முடிகிறது என்ற குழப்பம் படம் முழுவதும் ஒரு பக்கம் நிலவி இருக்க. இன்னொரு பக்கம் படத்தின் நாயகி ஒவ்வொரு காலகட்டத்தில் தான் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து சுலபமாக கடந்து விடுவது பார்ப்பவர்களுக்கு அவரது பரிதவிப்பை உணரவைக்க மறுக்கிறது. அதேபோல் பெண் சுதந்திரம் என்பதற்கான அளவுகோல் என்ன? அதற்காக ஒரு பெண் எந்த எக்ஸ்ட்ரீம் வரை செல்லலாம்? போன்ற கேள்விகளுக்கு சரியாக விடை அளிக்கவில்லை. இருந்தும் இப்படியாக படத்தில் பல்வேறு குறைகள் தென்பட்டாலும் ஒரு பெண்ணின் வாழ்வியலில் அவள் சந்திக்கும் ஒவ்வொரு காலகட்டத்திற்கான பிரச்சனைகளை எந்த சமரசமும் இன்றி பெண்கள் பாயிண்ட் ஆப் வியூவில் அப்படியே ராவாக அதேசமயம் எதார்த்தமாகவும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் இந்த பேட் கேர்ளை கண்டிப்பாக சென்று சந்திக்கலாம்.
பேட் கேர்ள் - துணிச்சலானவள்