Advertisment

'வீட்ல விசேஷம்' சிறப்பா, வெறுப்பா - விமர்சனம் !

veetla vishesham movie review

மூக்குத்தி அம்மன் படத்திற்கு பிறகு ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்துள்ள படம் வீட்ல விசேஷம். இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியாகியுள்ளது இப்படம். இந்தியில் இப்படத்திற்கு கிடைத்த அதே வரவேற்பு தமிழிலும் கிடைத்ததா..?

Advertisment

ரயில்வேயில் டிடிஇ ஆக இருக்கும் 50 வயது நிறைந்த சத்யராஜ் மனைவி ஊர்வசி, பள்ளியில் ஆசிரியராக இருக்கும் தன் மகன் ஆர்ஜே பாலாஜி, டீன் ஏஜ் பருவத்தில் மற்றொரு மகன் மற்றும் அவரது தாய் கே பி எஸ் சி லலிதாவுடன் ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த வயதிலும் சத்யராஜும் ஊர்வசியும் மிகவும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கின்றனர். இதனால் ஊர்வசி கர்ப்பம் அடைகிறார். அந்த கர்ப்பத்தை கலைக்க முன்வராத ஊர்வசி குழந்தையை பெற்றெடுக்க முடிவெடுக்கிறார். இந்த செய்தியை சத்யராஜ் தன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தெரியவைக்க செய்யும் முயற்சி மற்றும் அதை இச்சமூகம் எப்படி பார்க்கிறது, இதனால் ஏற்படும் பிரச்சனை, இதனை எப்படி இக்குடும்பம் சமாளித்தது என்பதே வீட்ல விசேஷம் படத்தின் மீதி கதை.

Advertisment

முதிர் பருவகாலத்தில் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு ஏற்படும் சவால்களையும், எதிர்ப்புகளையும் சரியான கோணத்தில் காட்சிப்படுத்தி அதை நகைச்சுவையாகவும், நையாண்டியாகவும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கொடுத்து ரசிக்க வைத்துள்ளனர் இயக்குநர்கள் ஆர் ஜே பாலாஜி மற்றும் ஆர் என் ஜே சரவணன். அதேபோல் 50 வயதை கடந்தும் கணவன் மனைவியிடையே இருக்கும் புரிதல்களும் காதலும் எந்த அளவு முக்கியம் என்பதை நிறைவாக காட்சிப்படுத்தி உள்ளது இப்படம். 25 வயதுக்குள் கர்ப்பம் அடையாவிட்டாலும் தவறு, 50 வயதிற்கு மேல் கர்ப்பம் அடைந்தாலும் தவறு என்ற ஸ்டீரியோ டைப் மனப்பான்மையை கிழித்தெறியும் வகையில் வசனங்களும் அதற்கேற்றார் போல் அமைந்த காட்சியமைப்பும் தியேட்டரில் கைத்தட்டல் பெற்றுள்ளது. அதேபோல் இந்த அளவு சீரியஸான ஒரு விஷயத்தை நகைச்சுவையுடன் கூடிய ஜனரஞ்சகமான காட்சி அமைப்பும், குடும்பங்கள் ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள திரைக்கதையும் படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது.

படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர் ஜே பாலாஜி நெகிழ்ச்சியான காட்சிகளிலும், காமெடி காட்சிகளிலும் சிறப்பான நடிப்பும் காதல் காட்சிகளில் சுமாரான நடிப்பையும் வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கும் நாயகி அபர்ணா பாலமுரளிக்குமான கெமிஸ்ட்ரி ஆங்காங்கே சோதித்தாலும் அபர்ணா பாலமுரளியின் தனித்தன்மை வாய்ந்த நடிப்பு அந்த காட்சிகளைக் காப்பாற்றிக் கரை சேர்த்துள்ளது. தனக்கு ஏற்றாற்போல் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கும் அபர்ணா பாலமுரளி, அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கையாண்டு அழகான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அது நன்றாக தென்பட்டுள்ளது. குறிப்பாக சில முக்கியமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளார்.

படத்தின் உண்மையான நாயகன், நாயகி என்றால் அது சத்யராஜ் ஊர்வசிதான். இவர்கள் இருவருக்குமான காட்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்து படத்திற்கு மிகப் பெரிய பலத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக ஊர்வசியை பார்த்து சத்யராஜ் பம்மும் காட்சிகளும், ஊர்வசி சத்யராஜை பார்த்து ஆம்பள தடியா என்று கூறும் கணவன் மனைவி உறவை வெளிப்படுத்தும் படியான எதார்த்த காட்சிகளும் படத்திற்கு தூணாக அமைந்து காத்துள்ளது. இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்தும் நெகிழ்ச்சியாகவும் அதேசமயம் கலகலப்பாகவும் அமைந்து படத்தை வேகப்படுத்தி உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் குழந்தை பெற்றெடுக்கும் காட்சியில் இருவரும் காமெடியில் அதகளம் செய்துள்ளனர். இதனாலேயே சத்யராஜ் ஊர்வசியின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளது.

சத்யராஜின் தாயாக நடித்திருக்கும் கேபிசி லலிதா பல காட்சிகளில் சோதித்தாலும் ஊர்வசியை பாராட்டும் காட்சியில் நெகிழ்ச்சி ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர் கண்களை குளமாக்கி உள்ளார். மேலும் சில காட்சிகளில் இருவரும் சேர்ந்துகொண்டு நகைச்சுவை செய்துள்ளார்.

கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் பாடல்கள் ஆங்காங்கே மனதை வருடுகின்றன. பின்னணி இசையை இன்னும் கூட சிறப்பாக அமைந்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் இன்டீரியர் காட்சிகளை சிறப்பாக கையாண்டுள்ளார். அதேபோல் எடிட்டர் செல்வா ஆர்கே சரியான இடங்களில் கத்திரியை உபயோகித்து காட்சிகளுக்கு வேகம் கூட்டி உள்ளார். ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து இயக்கியுள்ள இயக்குநர் எம் ஜே சரவணன் ஆர் ஜே பாலாஜி திரையில் தோன்றும் காட்சிகளை பல இடங்களில் சிறப்பாக கையாண்டு தன் பணியை நிறைவாக செய்துள்ளார்.

பதாய் ஹோ படத்தில் கர்ப்பத்தை கலைப்பது என்பது மிகப்பெரிய பாவம் என்ற மெசேஜை அழுத்தமாக கூறியிருப்பார்கள். ஆனால் இந்தப்படத்தில் ஒரு பெண் தான் விரும்பிய வகையில் எந்த வயதிலும் கர்ப்பம் தரிக்கலாம் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் அதில் எந்த தவறும் இல்லை என்ற கருத்தை அழுத்தமாக கூறியுள்ளனர். இரண்டு கருத்துமே ஏற்றுக் கொள்ளும் வகையில் புரட்சிகரமாக இருந்தாலும் பதாய் ஹோ படத்தை காட்டிலும் இப்படம் கொஞ்சம் ஆங்காங்கே அயர்ச்சி ஏற்படும்படி அமைந்து சற்று பின்தங்கி உள்ளதையும் தவிர்க்க முடியாது. இந்தி படத்தை காட்டிலும் இதில் சில மாற்றங்கள் செய்து இருப்பதால் ஆங்காங்கே படம் சற்று சீரியல் போல் அமைந்துள்ளது. மற்றபடி இந்தி படத்தை பார்க்காதவர்கள் இப்படத்தைப் பார்க்கும் பட்சத்தில் நல்ல கருத்துள்ள ரசிக்கக்கூடிய படமாகவே இருக்கும்.

வீட்ல விசேஷம் - குடும்பத்துடன் விசேஷத்திற்கு செல்லலாம்

moviereview
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe