தமிழ் சினிமாவில் வழக்கமாக சீரியல் கில்லர் வகை படங்கள் பெரும்பான்மை நல்ல வரவேற்பை பெற தவறியதில்லை. அந்த வகையில் அவ்வப்போது ரெகுலர் இன்டர்வெலில் மர்டர் மிஸ்டரி திரைப்படங்கள் வெளியாகி பல படங்கள் வரவேற்பையும் சில படங்கள் தோல்வியையும் அடைகின்றன. தற்பொழுது அந்த வரிசையில் அதே பாணியை சார்ந்த சீரியல் கில்லர் மர்டர் மிஸ்டரி திரைப்படமான ‘இந்திரா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. வசந்த் ரவி நாயகனாக நடித்திருக்கும் இந்திரா எந்த அளவு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்..?
ஒரு நகரில் மர்மமான முறையில் பல்வேறு கொலைகள் அரங்கேறுகின்றன. அதில் இறந்தவர்களின் ஒரு கையில் இருக்கும் உள்ளங்கையை மட்டும் வெட்டி விட்டு அதை தனியாக போட்டுவிட்டு கொலை நடக்கிறது. இப்படி ஒரே பேட்டர்னில் கொலைகளை செய்து வருகிறார் சைக்கோ கொலைகாரனாக வரும் தெலுங்கு நடிகர் சுனில். இதற்கிடையே திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்து குடிப்பழக்கத்தால் வேலையை இழந்து கண்பார்வையும் இழந்த வசந்த் ரவியின் மனைவி மெஹரின் பெர்சாடா இதேபோன்று உள்ளங்கை வெட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பார்வையற்ற வசந்த் ரவி கண்பார்வை இல்லாமலே அந்த கொலைகாரனை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். பின்பு அந்த கொலை செய்தது யார்? அந்த கொலைக்கும் சைக்கோ கொலைகாரன் சுனிலுக்கும் என்ன சம்பந்தம்? கொலையாளியை கண்டுபிடித்து வசந்த் ரவி தண்டித்தாரா, இல்லையா? மெஹரின் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பதே இந்திரா படத்தின் மீதி கதை.
வழக்கமான சீரியல் கில்லர் கதையை வைத்துக்கொண்டு விறுவிறுப்பாக கதை சொல்ல முயற்சித்து இருக்கும் இயக்குநர் சபரீஷ் நந்தா, அதை ஓரளவு சிறப்பான முறையில் கொடுத்து வரவேற்பை பெற்று இருக்கிறார். படத்தின் முதல் பாதி, கொலைகள், அதை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் போலீஸ், கொலையாளியின் ருத்ர தாண்டவம், கண்ணை இழந்து மனைவியும் இழந்து தவிக்கும் கணவன் என பல்வேறு பரிணாமங்களுக்கிடையே திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக கதை சொல்லி இருக்கிறார். இரண்டாம் பாதியில் வேறொரு திசையில் திருப்புமுனையை கொடுத்து, இறுதிக்கட்டத்தில் பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்து விறுவிறுப்பான மர்டர் மிஸ்டரி திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுக்கிறார்.
இரண்டாம் பாதியை காட்டிலும் முதல் பாதி நல்ல விறுவிறுப்பாக நகர்ந்து பார்ப்பவர்களுக்கு அயற்சி இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. ஏனோ இரண்டாம் பாதியில் கதை வேறு ஒரு கோணத்தில் பயணிப்பதாலும் அதனுள் இருக்கும் கொலைக்கான காரணமும் அழுத்தம் இல்லாமல் இருப்பதாலும் சற்றே படத்தில் இருந்து நம்மை பிரித்து வைத்துவிடுகிறது. இருந்தாலும் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளை யூகிக்க முடியாத படிக்கு ஓரளவு சுவாரசியமாக கொடுத்திருப்பது படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் இன்னும் கூட சுவாரசியமாக திரைக்கதை அமைத்திருக்கலாம்.
பார்வையற்ற இளைஞராக நடித்திருக்கும் வசந்த் ரவி தனக்கு என்ன வருமோ அதை இந்த படத்தில் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவரது பெக்யுலியரான நடிப்பு கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான நடிப்பை கொடுத்து விட்டு சென்றிருக்கிறார் நடிகை மெஹரின் பிர்சாடா. சைக்கோ கொலைகாரனாக வரும் சுனில் வழக்கம்போல் தன் வித்தியாசமான நடிப்பால் பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறார். வசனத்தை காட்டிலும் உடல் மொழியில் பார்ப்பவர்களை பயமுறுத்தி இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அனிகா, பாத்திரம் அறிந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இவருடைய காதலனாக நடித்திருக்கும் நடிகர் சுமேஷ் மூரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாது உடல் மொழி என ஆக்ஷனிலும் கலக்கி இருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் கல்யாண் சிறப்பான தேர்வு. தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். மற்றபடி உடனடித்த நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.
பிரபு ராகவ் ஒளிப்பதிவில் இன்டீரியர் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அஜ்மல் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பு. ஒரு திரில்லர் படங்களுக்கே உரித்தான இசையை நிறைவாக கொடுத்திருக்கிறார். சீரியல் கில்லர் வகை மர்டர் மிஸ்டரி திரில்லர் படங்கள் வரிசையில் இணைந்திருக்கும் இந்த இந்திரா திரைப்படம் இந்த மாதிரியான படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு இது ஓரளவு நல்ல படமாகவே அமைந்திருக்கிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும் நேர்த்தியும் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் இன்னமும் இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கும். இருந்தும் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
இந்திரா - மர்மமானவள்!