Skip to main content

ஹெச்.வினோத்துக்கு என்னதான் ஆச்சு? வலிமை - விமர்சனம்

Published on 24/02/2022 | Edited on 25/02/2022

 

ajith valimai


'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' என மிக புதிய களங்களில், உண்மை சம்பவங்களின் அடிப்படையில், ஆழ்ந்த ஆய்வுக்குப்பின் எழுதப்பட்ட திரைக்கதைகளை மிக சுவாரசியமாக, விறுவிறுப்பாக படமாக்கி வணிக ரீதியாகவும் வெற்றி பெறச் செய்து கவனமீர்த்தவர் இயக்குனர் ஹெச்.வினோத். இவர் அஜித் என்ற மிகப்பெரிய மாஸ் ஹீரோவுடன் இணைகிறார் எனும்போதே அந்தப் படத்தின் மீது இயல்பாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. இந்தக் கூட்டணியின் முதல் படமான 'நேர்கொண்ட பார்வை' (பிங்க் ரீமேக்) வெற்றி பெற, ஹெச்.வினோத்தின் கதையுடன் அடுத்த படமும் உடனே தொடங்கப்பட்டது. கரோனா உள்பட பல காரணங்களால் தாமதமாகி தற்போது வெளியாகியுள்ளது 'வலிமை'. 'வலிமை அப்டேட்' கேட்டு நடந்த சம்பவங்கள் எல்லாம் நினைவிருக்கும். அஜித் ரசிகர்களின்  காத்திருப்பை அர்த்தமாக்கியதா, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இந்த 'வலிமை'?

 

சென்னையில் செயின் பறிப்பு, கொலை என இரு சக்கர வாகனங்களில் வந்து நடத்தப்படும் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இந்தக் குற்றங்களை துப்பறிய மக்கள் மீது அக்கறை கொண்ட ஒரு அதிகாரிக்காகக் காத்திருக்கிறார் சென்னை கமிஷனர். மதுரையிலிருந்து வருகிறார் அஸிஸ்டண்ட் கமிஷனர் அர்ஜுன். தான் கைது செய்யும் குற்றவாளிகளின் குடும்பம் கஷ்டப்படக்கூடாது என்று உதவும் மனம் கொண்ட, குற்றவாளி என்றாலும் உயிரை எடுக்கும் உரிமை நமக்கில்லை என்று நம்பும் 'வேற மாரி' போலீஸ் அர்ஜுன், சென்னையில் நடக்கும் பைக் குற்றங்களை துப்பறிந்து தடுத்தாரா என்பதே 'வலிமை' படத்தின் கதை. 'சாத்தான் ஸ்லேவ்ஸ்' என்னும் பைக்கர்ஸ்களால் ஆன குற்ற அமைப்பு, அவர்கள் இயங்கும் முறை, குற்றச்செயல்களுக்கும் துப்பறிதலுக்கும் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படும் முறை என தன் பாணியில் சுவாரசியமான கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர். மிகச் சிறப்பான திரைக்கதைக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் வாய்ப்புள்ள இந்தக் கதையில் சண்டைக் காட்சிகளை மிகச் சிறப்பாக அமைத்துவிட்டு திரைக்கதையில் சமரசமாகிவிட்டது போலத் தோன்றுகிறது.

 

karthikeya valimai

 

நாயகன் - நாயகி இருவரும் நண்பர்களாக மட்டும் இருப்பது, பெண் பாத்திரங்களுக்குமான வலிமை, நேர்மறை கருத்துகளை சொல்ல வேண்டுமென்ற சமூக அக்கறை என இயக்குனரின் பாசிட்டிவ் அம்சங்கள் படத்தில் உள்ளன. இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் அழுத்தம், அவர்கள் தவறான பாதையில் செல்லக்கூடிய வாய்ப்புகள் என இயக்குனரின் சமூக அக்கறை படத்தில் வெளிப்படுகிறது. ஆனாலும், படத்தின் முக்கிய பிரச்சனையான குற்றம், துப்பறிதல், குற்றவாளியை பிடித்தல், சண்டைக்காட்சிகள் என அந்த நேர்க்கோடு ஒரு பக்கமிருக்க கூடுதலாக நாயகனின் குடும்பம், அதில் உள்ள சிக்கல்கள், தாய்ப்பாசம் என கூடுதல் பாரத்தை சுமக்கிறது. அதுவே நேரத்தை அதிகமாக்கி அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. 'தீரன்...' படத்திலும் இதே சிக்கல் இருந்தாலும் அக்காட்சிகள் கதையோடு இயல்பாகப் பொருந்திப்போய் படத்தை தொல்லை செய்யாமல் இருந்தன. ஆனால் 'வலிமை'க்கு அந்த அதிர்ஷ்டம் அமையவில்லை. காட்சிகளாய் நகரும் பல இடங்களில் தேவையற்ற வசனங்கள் இருக்கின்றன. பல காட்சிகள் எளிதில் கணிக்கக் கூடியதாக, பழகியவையாக இருக்கின்றன. 

 

அஜித்... கண்ணியமான, ஹேண்ட்ஸம் போலீசாகப் பொருந்துகிறார். பைக்கை முறுக்கும் ஒவ்வொரு மொமெண்ட்டும் 'கூஸ்பம்ப்ஸ்' மொமெண்ட் ஆகிறது. அவருடைய இருப்பு படத்திற்கு வலிமை. அவரை தவிர மனதில் நிற்பது ஹூமா மற்றும் தினேஷ் பிரபாகர் போன்ற வெகு சிலரே. வில்லன் கார்த்திகேயா சிறப்பாகப் பணியாற்றினாலும் அவரது பாத்திர வடிவமைப்பு பற்றாக்குறையாக இருக்கிறது. யுவனின் இசையில் பாடல்கள் 'ஓகே' ரகம். பின்னணி இசையில் ஜிப்ரானின் பங்கும் உண்டு என்பது தெரியவருகிறது. பைக் சேசிங் மற்றும் இதர சண்டைக்காட்சிகள் படத்தின் பெரியபலம். அந்தக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் - படத்தொகுப்பாளர் - இசையமைப்பாளர் கூட்டணி மிக சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு உயர்தரம். அந்த சண்டைக் காட்சிகளை வடிவமைத்த திலீப் சுப்புராயனுக்கு ஒரு சல்யூட்.              

                  

அஜித் - ஹெச்.வினோத் மீண்டும் அடுத்த படம் தொடங்குகிறார்கள். இந்தக் குறைகள் நீங்கிய முழுமையான சிறப்பான படமாக அந்தப் படத்தை எதிர்பார்க்கிறோம்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

 நடிகர் அஜித் வீட்டின் தடுப்புச்சுவர் முற்றிலுமாக இடிப்பு

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Actor Ajith house barrier completely demolished

 

சென்னையில் நடிகர் அஜித் வசித்து வரும் ஈஞ்சம்பாக்கம் வீட்டின் முகப்பு மற்றும் தடுப்புச் சுவரை நெடுஞ்சாலைத் துறை இடித்துள்ளது. 

 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில்  சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  அக்கரை முதல் ஈஞ்சம்பாக்கம் வரை உள்ள நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிறிது தூரம் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

அதில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நடிகர் அஜீத் வசித்து வரும்  வீட்டின் முன்பு உள்ள முகப்பு மற்றும் தடுப்புச் சுவர் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிக்காக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் மதில் சுவர்கள் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நெடுஞ்சாலைத் துறை தரப்பிலிருந்து சுவர்கள் இடிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு நெடுஞ்சாலைத்துறை தரப்பிலிருந்து புதியதாகத்  தடுப்புச் சுவர் கட்டி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

 

 

Next Story

அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் காலமானர்!

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

producer ss chakravarthy passed away

 

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி காலமானார்.

 

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான நிக் ஆட்ர்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி சிட்டிசன், ரேணிகுண்டா, காளை உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். நடிகர் அஜித்தை மட்டும் வைத்து ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய பல படங்களைத் தயாரித்துள்ளார். இவர் கடைசியாக சிம்பு - நெல்சன் கூட்டணியில் உருவாகி பின்பு கைவிடப்பட்ட வேட்டை மன்னன் படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

புற்றுநோய் காரணமாக கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.