வடிவேலு பகத் பாசில் இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த கூட்டணி மறுபடியும் இணைந்து மாரிசன் என்ற படத்தில் நடிக்கிறார்கள் என்ற செய்தி வெளியானதுமே அதற்கான எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்தது. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் மாரிசன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா, இல்லையா?
பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகும் திருடன் ஃபகத் ஃபாசில், ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க செல்கிறார். அந்த வீட்டில் அல்சைமர் பேஷண்டான வடிவேலுவை சந்திக்க நேர்கிறது. இருவரும் அந்த வீட்டை விட்டு தப்பித்து வெளியே செல்கின்றனர். சென்ற இடத்தில் வடிவேலுவின் பேங்க் அக்கவுண்டில் 25 லட்ச ரூபாய் இருப்பதை ஃபகத் ஃபாசில் கண்டுபிடித்து விடுகிறார். அதை எப்படியாவது கொள்ளை அடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் வடிவேலுவை எங்கு செல்ல வேண்டுமோ, தானே அங்கு விட்டு விடுவதாக தன் வண்டியில் அழைத்துக் கொண்டு அவரது நண்பர் வீட்டிற்கு செல்கிறார். இவர்கள் இருவரும் செல்லும் வழியில் சந்திக்கும் நபர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை யார் செய்தது? அந்தக் கொலைகளுக்கும் இவர்கள் இருவருக்கும் என்ன சம்பந்தம்? வடிவேலுவின் பணத்தை ஃபகத் ஃபாசில் கொள்ளை அடித்தாரா, இல்லையா? என்பதே மாரிசன் படத்தின் மீதி கதை.
கிட்டத்தட்ட மெய்யழகன் பட பாணியில் ஆரம்பிக்கும் திரைப்படம் போகப்போக இன்டர்வல்வரை அதே பாணியில் பயணித்து இன்டர்வல்வளுக்குப் பிறகு எதிர்பாராத திருப்பங்களுடன் த்ரில்லர் படமாக மாறி பார்ப்பவர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. முதல் பாதி முழுவதும் ஃபகத் ஃபாசில் வடிவேலுவின் காம்பினேஷனில் இருவரும் சந்தித்துக் கொள்வது பேசிக் கொள்வது பழகிக் கொள்வது வண்டியில் ஒன்றாக ஒவ்வொரு இடமாக செல்வது என இருவருக்குள்ளேயும் இருக்கின்ற கெமிஸ்ட்ரியை வெளி கொண்டு வரும்படியான காட்சிகளை வைத்து நகர்கிறது. பின்பு இரண்டாம் பாதியில் இருந்து பல்வேறு திருப்பங்களுடன் மர்மமான கொலைகள் போலீஸ் வலை வீச்சு அதற்குப் பின் இருக்கும் பிளாஷ்பேக் என திருப்பங்கள் நிறைந்த விறுவிறுப்பான த்ரில்லர் படமாக மாறி பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு வர வைத்து ஃபீல் குட் த்ரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது.
முதல் பாதியில் ஃபகத் ஃபாசில் மற்றும் வடிவேலு, இருவருக்குள்ளும் நிறைய ஆர்டிபிசியலான நடிப்பு வெளிப்பட்டாலும் போகப்போக அவை மறக்கடிக்கப்பட செய்து கதைக்குள் நம்மை கூட்டி சென்று விறுவிறுப்பாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் முதல் பாதியிலும் இருந்திருந்தால் இந்த படம் நிச்சயம் பெரிதாக பேசப்பட்டிருக்கும்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மாமன்னன் போல் ஒரு அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் மின்னுகிறார் வடிவேலு. இவருக்கும் ஃபகத் ஃபாசிலுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. பகத் பாஸில் வழக்கம் போல் தனது துடுக்கான நடிப்பின் மூலம் கவனம் பெற்று இருக்கிறார். வழக்கம் போல் இவரது எதார்த்தமான நடிப்பு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது மட்டுமல்லாமல் காட்சிகளுக்கும் உயிர் கொடுத்திருக்கிறது. நண்பராக வரும் விவேக் பிரசன்னா வழக்கம் போல் கிரே ஷேடில் வருகிறார். இவர் நல்லவரா கெட்டவரா போன்ற கதாபாத்திரத்தில் மூலம் இறுதி காட்சி வரை சீட்டில் அமர வைத்து தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார்.
வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் குணச்சித்திரமாக நடித்திருக்கும் கோவை சரளா தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து கவனம் பெற்றிருக்கிறார். விண்டேஜ் வடிவேலு கோவை சரளா இல்லாமல் இந்த முறை வித்தியாசமான வடிவேலு கோவை சரளா இந்த படம் மூலம் தென்படுகின்றனர். அதுவே படத்திற்கு பிளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சித்தாரா சிறப்பு. மற்றபடி சின்ன சின்ன வேடங்கள் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு மலையாள படம் பார்த்த உணர்வை நமக்கு தருகிறது. பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பு. கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த மாதிரியான கதையில் யார் நடித்திருந்தாலும் அந்த படம் சிறப்பாகவே அமைந்திருக்கும், இருந்தும் வடிவேலு இது போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாகவே நடித்திருந்தாலும் ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய காமெடி மட்டுமே. அவருடைய விண்டேஜ் காமெடி மூலம் மீண்டும் அவர் கம்பேக் கொடுக்கும் பட்சத்தில் சினிமாவில் அடுத்த ரவுண்ட் வருவது உறுதி. இந்த மாதிரியான கதாபாத்திரங்களை செய்வதற்கு பல பேர் சினிமாவில் இருக்கின்ற நிலையில் வடிவேலு மீண்டும் காமெடி பாத்திரத்தை தேர்வு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மற்றபடி இந்த படத்தில் தனக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை சிறப்பாகவே செய்து முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்து மாரீசனை கரை சேர்த்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இருந்த திருப்பமும் விறுவிறுப்பும் முதல் பாதியிலும் இருந்திருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.
மாரிசன் - தமிழில் ஒரு மலையாள சினிமா!