ADVERTISEMENT

சுழலில் விட்டதா? சுருண்டதா? - வதந்தி விமர்சனம்

12:18 PM Dec 03, 2022 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுழல் வெப்சீரிஸ் மூலம் ரசிகர்களை ஓடிடியில் கட்டிப்போட்ட இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி மீண்டும் கூட்டணி அமைத்து அதே பாணியில் உருவாக்கி இருக்கும் வதந்தி வெப்சீரிஸ் சுழல் தந்த அதே பரவசத்தை கொடுத்ததா, இல்லையா?

கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்புக்காக ஒரு டீம் சென்ற இடத்தில், ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறாள். அந்த இறந்த பெண், படத்தில் நடிக்க வந்த கதாநாயகி என முதலில் உறுதிசெய்து விடுகின்றனர். இதையடுத்து இறந்ததாகக் கூறப்படும் படத்தின் நாயகி உயிரோடு இருப்பது தெரிய வர, இந்த கேசை துப்பு துலக்க சிறப்பு போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா நியமிக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தை எஸ்.ஜே.சூர்யா எப்படி துப்புத்துலக்கி, குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் என்பதே 8 எபிசோடுகள் கொண்ட இந்த நீண்ட வெப்சீரிஸின் மீதி கதை.

சுழல் வெப்சீரிஸிற்கு பிறகு மீண்டும் ஒரு மர்டர் மிஸ்டரி கதையை கையில் எடுத்துள்ளனர் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி. சுழலில் திரைக்கதை எழுதி தயாரித்திருந்த நிலையில், இந்த முறை வெறும் தயாரிப்பு மட்டுமே செய்து இருக்கின்றனர் புஷ்கர் மற்றும் காயத்ரி. படத்தின் கதையையும், திரைக்கதை இயக்கத்தையும் அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் செய்து இருக்கிறார். வெப்சீரிஸின் முதல் எபிசோடிலேயே இறந்தது யார் என ரிவீல் செய்து விடும் இயக்குநர், அதன்பிறகு எஸ்.ஜே.சூர்யா அறிமுகமானதிலிருந்து கொலையை இவர் செய்திருப்பாரா? அவர் செய்திருப்பாரா? இல்லை அவர்தான் செய்திருப்பாரோ? என கிளைமாக்ஸ் காட்சி வரை யூகிக்க முடியாத படி யோசிக்க வைத்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார்.

சுழல் வெப்சீரிஸை போல் இந்த வெப்சீரிஸும் ஒவ்வொரு எபிசோடுகளாக முடியும் தருவாயில் அடுத்தடுத்து எபிசோடுகளை பார்க்கும் வகையில் திருப்பங்களை வைத்து அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ். ஆனாலும், சுழல் வெப்சீரிஸில் இருந்த சுவாரசியமும் திருப்பங்களும் இதில் சற்று மிஸ்ஸிங். அதேபோல் இந்த கதையை 8 எபிசோடுகளாக பிரிப்பதற்கு சில வாலண்டரியான காட்சிகள் உள்ளே இருப்பதும் ஆங்காங்கே அயர்ச்சி கொடுக்கிறது. இருந்தும் காட்சிகளின் நேர்த்தியும், கதை நடக்கும் இடத்தின் போக்கும் கதையோடு பின்னிப் பிணைந்து செல்வது படத்தோடு நம்மை ஒட்ட வைக்கிறது. அதுவே படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. பொதுவாக மர்டர் மிஸ்டரி படம் என்று வந்துவிட்டால் ஒரு கொலையை யார் செய்திருப்பார்கள் என யூகிக்க முடியாதபடி இருப்பது தான் அதனுடைய வெற்றிக்கு மையப்புள்ளியாக இருக்கும். அந்த மையப்புள்ளி இந்த வெப்சீரிஸிலும் சரிவர அமைக்கப்பட்டு கடைசி வரை இந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடியாத படி இருந்து ஸ்மூத் அண்ட் ரிப்ரெஷிங்காகவும் அமைந்து படத்தை கரை சேர்ந்திருக்கிறது.

வெலோனி என்ற ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு அதை படம் முழுவதும் படர செய்து அதன் மூலம் காட்சிகளை விரிவுபடுத்தி, நேர்த்தியான துப்பு துலக்கும் காட்சிகளை சரியான இடங்களில் கோர்த்து அவைகளுக்கு அழகாக உயிர் கொடுத்த இயக்குநர், ஏனோ காட்சிகளை நீட்டிப்பதற்கும், விரிவாக சொல்வதற்கும் பல்வேறு கிளைக்காட்சிகளை வேண்டுமென்றே திணித்திருப்பது மட்டும் கொஞ்சம் இழுபறியாக இருப்பது போல் தோன்ற வைக்கிறது.

இதுவரை வெள்ளித்திரையில் இயக்குநர், தயாரிப்பாளர், வில்லன், குணச்சித்திரம், தற்போது நாயகன் என பல்வேறு அவதாரங்களை எடுத்து அதில் வெற்றியும் பெற்று வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வதந்தி மூலம் ஓடிடியில் கால் பதித்திருக்கிறார். இதிலும் அவர் வெற்றி கண்டு இருக்கிறாரா என்றால்? ஆம், என்று சொல்ல வைத்திருக்கிறார், ஆணித்தரமாக. இவரது அதிரிபுதிரியான நடிப்பும், டீப் சவுத்தில் பேசும் வசன உச்சரிப்பும் படத்துக்கு பக்கபலமாக அமைந்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது.

குறிப்பாக துப்பு துலக்கும் காட்சிகளிலும், குடும்பம் சம்பந்தப்பட்ட, மற்றும் போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப கலவையான நடிப்பை சரிவர பிரித்து காட்டி மீண்டும் ஒருமுறை கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவரது ஸ்கிரீன் ப்ரெசன்ஸ் இந்த வெப்சீரிஸ்க்கு மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி இருக்கிறது. வெலோணியாக நடித்திருக்கும் சஞ்சனா க்யூட்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவரது துரு துரு நடிப்பும், அழகான முகபாவனைகளும் பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிரவேசம் செய்து இருக்கும் லைலா, சின்ன சின்ன கதாபாத்திரங்களாக இருந்தாலும் மனதில் நிற்கும் படியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரமும் அதேபோல அமைந்து மனதில் பதியும்படி இருக்கிறது. இவரது அனுபவ நடிப்பும் அதற்கேற்ற முக பாவனைகளும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா உடன் பயணிக்கும் கதாபாத்திரத்தில் வரும் விவேக் பிரசன்னா கன்னியாகுமரி மாவட்ட வட்டார வழக்கை சிறப்பாக பேசி கவர்ந்துள்ளார். காட்சிகளுக்கும் கதைக்கும் நன்றாக ஒத்துப் போகக் கூடிய வகையில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். எழுத்தாளராக வரும் நாசர் எப்போதும் போல் தன் அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் மனதில் பதியும்படி நடித்து சென்று இருக்கிறார் ஹரிஷ் பெரொடி. எஸ்.ஜே.சூர்யா மனைவியாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட் அழகாக இருக்கிறார்; அளவாக நடித்திருக்கிறார்; பார்ப்பவர்களை கலங்க செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது இன்னசென்டான நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் அருவி பாலாஜி கதைக்கு ஒத்துப் போகும் வகையில் இருக்கும் கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லன் பலனாக நடித்திருக்கும் சைத்தான் பட இயக்குநர் பிரதீப் குமார் மிரட்டியிருக்கிறார். இவர்களுடன் இணைந்து நடித்துள்ள இன்ன பிற இதர நடிகர்களும் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் வலு சேர்த்து இருக்கின்றனர்.

சரவணன் ராமசாமி ஒளிப்பதிவில் கன்னியாகுமரி மற்றும் மலைக்காடு சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. சைமன் கே கிங் இசையில் எங்கு சைலன்ட் இருக்க வேண்டுமோ அங்கு அமைதியாகவும் எங்கு ஒலி தேவையோ அங்கு சிறப்பான பின்னணி இசையை கொடுத்து காட்சிகளுக்கு திகில் கூட்டி ரசிக்க வைத்துள்ளார்.

கொலையை துப்பு துலக்கும் போலீஸ் அதிகாரி என்ற ஒரு மர்டர் மிஸ்டரி கதையை மிகவும் நேர்த்தியாகவும் அதே சமயம் சுவாரசியமாகவும் சொல்ல முயற்சி செய்த இயக்குநர் அதை இன்னமும் டீடைலாக சொல்ல முயற்சித்து இருப்பது மட்டும் ஆங்காங்கே சற்று அயர்ச்சி கொடுத்திருப்பதை தவிர்க்க முடியவில்லை. 8 எபிசோடுகளாக இதை எடுப்பதற்கு பதிலாக 6 எபிசோடுகளாக குறைத்து இருந்தால் இந்த வெப்சீரிஸ் இன்னமும் வரவேற்பை பெற்று இருக்க கூடும்.

வதந்தி - ஸ்மூத் அன் ஸ்டெடி!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT