Skip to main content

நல்ல விஷயங்களையெல்லாம் சேர்த்து ஒரு படம்... நல்ல படமா? கண்ணே கலைமானே - விமர்சனம் 

இயற்கை விவசாயம் செய்யும்... தனது கிராமத்து மக்களுக்கு முயற்சியெடுத்து வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்து வாழ்க்கைக்கு உதவும்... வெளிநாட்டு வேலைக்கு வாய்ப்பிருந்தாலும் செல்லாமல் தன் நிலத்தில் விவசாயம் செய்வதோடு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உழைக்கும்... அப்பா, பாட்டியின்  பேச்சை மீறாத இளைஞன் கமலக்கண்ணன். தன் உழைப்பால் இளம் வயதிலேயே வங்கி மேலாளராக உயர்ந்த, தன் நேர்மையால் அவ்வப்போது இடமாறுதல் பெறும் இளம் பெண் பாரதி. இப்படி, அறிவால் தெளிவான, குணத்தால் உயர்வான இருவருக்கும் மிக இயல்பாக செம்புலப் பெயல் நீர் போல அன்பு வளர்ந்து காதல் மலர்கிறது. இப்படிப்பட்ட இருவருக்குள் என்ன பிரச்சனை வந்துவிட முடியும்? முதலில் குடும்பம் காதலை ஏற்றுக்கொள்வதில் பிரச்சனை. ஏற்றுக்கொண்டபின் வருவதுதான் படத்தின் முக்கியமான பெரிய பிரச்சனை. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் கமலக்கண்ணனும் பாரதியும் என்பதுதான் கண்ணே கலைமானே.

 

udhayanidhi stalinஉதயநிதி, கமலக்கண்ணனாக மிக இயல்பாகப் பொருந்துகிறார். தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவேண்டுமென்ற எண்ணமும் தேடலும் இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்ததிலும் தெரிகிறது. பாரதியாக தமன்னா எளிமையான நாயகியாக மிளிர்கிறார். க்ளைமாக்ஸை நெருங்கும் காட்சிகளில் நம் மனதை நெருங்குகிறார். பாட்டியாக வடிவுக்கரசிக்கு நெடுநாளைக்குப் பிறகு ஒரு அழுத்தமான பாத்திரம். ஒரு இடத்தில் அனைவரையும் கண் கலங்க வைக்கிறார். 'பூ' ராமு, ஷாஜி, வசுந்தரா அனைவரும் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தீப்பெட்டி கணேசன் - அம்பானி சங்கர் கூட்டணியின் நகைச்சுவை ஓரிரு இடங்களில் மட்டுமே சுவையாக இருக்கிறது.

 

thamannaஇயக்குனர் சீனு ராமசாமியின் படங்கள் நேர்மறை எண்ணங்களை விதைப்பவை, சமூக அக்கறை உடையவை, உறவுகளின் ஆழத்தையும் சிக்கல்களையும் பேசுபவை. இதில் மற்ற இரண்டும் இரண்டாம் பாதிக்கு வந்துவிட முதல் பாதி முழுவதும் சமூக அக்கறை சார்ந்த காட்சிகள், அறிவுரைகளாக, வசனங்களாக நிறைந்திருக்கின்றன. அதுவே அவ்வப்போது ஓவர் டோஸாகிறது. படத்தின் ஆன்மா இரண்டாம் பாதியில் இருக்கிறது. இவ்வளவு அழுத்தமான விஷயத்தை இவ்வளவு தாமதமாகத் தொடங்க வேண்டுமா என்று படம் பார்பவர்களுக்குத் தோன்ற வைக்கிறது. கமலக்கண்ணன் - பாரதி இடையிலான உரையாடல்கள் பல விஷயங்களைப் பேசுகின்றன. எம்பதுகளின் சில நாவல்களில் வரும் புரட்சிகரமான நாயகன் - நாயகியின் சாரம் மிகுந்த உரையாடல்களை நினைவுபடுத்துகின்றன. இன்னொரு பக்கம் ஊரில் உள்ள மக்களுக்கெல்லாம் தெளிவாக வழிகாட்டும் கண்ணன், இரண்டாம் பாதியில் தன் கடன் பிரச்சனையை அணுகும் விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது போல இன்னும் சில தர்க்கரீதியான கேள்விகள் ஆங்காங்கே எழுகின்றன.

 

vadivukarasiஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு நம்மை கண்களுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் இறுக்கமாக இருந்திருக்கலாம். யுவன் இசையில் 'நீண்ட மலரே...' படம் முடிந்த பின்னும் மனதில் நீள்கிறது.

கர்ணன் வேஷம் போட்டு கூத்துக்கட்டப் போகும் ஒருவரிடம் கடனை வசூலிக்க வருபவர்கள் அவரை அடித்து அசிங்கப்படுத்துவார்கள். படத்தின் தொடக்கத்தில் வரும் இந்தக் காட்சியைப் போல இன்னும் சில அழுத்தமான காட்சிகள் முதல் பாதியில் இருந்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும். முதல் பாதியில் பொறுமையாக அமர்ந்து கிராமத்து அழகை ரசித்தோமென்றால் இரண்டாம் பாதியில் பாசமும் நெகிழ்வும் அன்பும் கொண்டு நமக்காகக் காத்திருக்கிறது கண்ணே கலைமானே.     

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...