Advertisment

விஜய்சேதுபதியின் அரசியல் சக்ஸசா, சறுக்கலா..? - ‘துக்ளக் தர்பார்’ விமர்சனம்

Tughlaq Durbar

முத்தையா முரளிதரன் பயோபிக், போஸ்டர் கிழிப்புஎன அரசியல் சர்ச்சைகளில் சிக்கிய விஜய்சேதுபதி நடிப்பில் முழு நீள அரசியல் திரைப்படமாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது ‘துக்ளக் தர்பார்’.

Advertisment

தாய் தந்தையை சிறு வயதிலேயே இழந்த விஜய்சேதுபதி, தங்கை மஞ்சிமா மோகனுடன் வாழ்ந்துவருகிறார். இவர் தன் குடும்பத்தைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் எப்படியாவது அரசியலில் பெரும்புள்ளியாக வர வேண்டும் என முயற்சி செய்கிறார். அதற்காக பார்த்திபன் எம்எல்ஏவாக இருக்கும் கட்சியில் இணைகிறார். போன இடத்தில் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து கவுன்சிலராக மாறுகிறார். பிறகு பார்த்திபனோடு சேர்ந்துகொண்டு தான் வசித்துக்கொண்டிருக்கும் குடியிருப்புகளைக் கார்ப்பரேட் கம்பெனிக்கு 50 கோடி ரூபாய்க்கு விற்றுவிடுகிறார். இந்த விஷயம் மீடியாவில் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்புகிறது. இதற்கிடையே விஜய்சேதுபதி தலையில் அடிபட்டு அவருக்கு ஸ்பிலிட் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் ஏற்படுகிறது. இதையடுத்து கார்ப்பரேட் கம்பெனி கொடுத்த ஐம்பது கோடி ரூபாய் பணம் காணாமல் போகிறது. இந்நிலையில் 50 கோடி ரூபாய் பிரச்சனை என்ன ஆனது, காணாமல் போன பணம் கிடைத்ததா இல்லையா, விஜய் சேதுபதியின் மனநிலை என்னவானது என்பதே ‘துக்ளக் தர்பார்’ படத்தின் மீதிக்கதை.

Advertisment

‘அமைதிப்படை’ அமாவாசை கதாபாத்திரத்தை சற்று ‘சகுனி’ படத்துடன் கலந்துகட்டி ‘துக்ளக் தர்பார்’ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன். நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய அரசியல் களத்தில் கிளிஷேவான காட்சிகளை ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதில் ஒரே ஒரு புதுமையான விஷயமாக ஸ்பிலிட் பர்சனாலிட்டியை உள்ளே நுழைத்து வெரைட்டி காட்ட முயற்சி செய்துள்ளார். அதற்குப் பலன் கிடைத்ததா என்றால் சந்தேகமே! இருந்தும் முதல் பாதி சற்று வேகமாகவும் இரண்டாம் பாதி அயர்ச்சியாகவும் நகர்ந்து க்ளைமாக்ஸில் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. மற்றபடி லாஜிக் பார்க்காமல் போய் அமர்ந்தால் ஓரளவு ரசிக்கும்படியான படமாகவே இது அமையும்.

ஒரே கேரக்டரில் நல்லவன், கெட்டவன் என இருவேறு முகங்களைக் காட்டி நடித்துள்ளார் விஜய் சேதுபதி. ஆனால் விஜய் சேதுபதியின் துள்ளலான நடிப்பு இதில் மிஸ்ஸிங்!இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இருக்கின்ற வித்தியாசத்தை தன் முகபாவனைகள் மூலம் மட்டுமே காட்டி காம்ப்ரமைஸ் செய்துள்ளார். எந்தெந்த காட்சியில்எந்த விஜய்சேதுபதி ஃப்ரேமில் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகவே இருக்கிறது. எல்லா சீன்களிலும் ஒரே மாதிரி நடித்துள்ளார்.

சம்பிரதாயத்திற்காக வைக்கப்பட்ட கதாநாயகி வேடத்தில் சம்பிரதாயமாக வந்து செல்கிறார் நடிகை ராஷி கண்ணா. விஜய் சேதுபதியின் தங்கையாக வரும் மஞ்சிமா மோகன் படம் முழுவதும் அமைதியாக மட்டுமே இருக்கிறார். ஹீரோவுடன் கடமைக்கு வரும் நண்பன் கேரக்டரில் நடித்துள்ள கருணாகரன், நடிப்பில் தன் கடமையை செய்துள்ளார். கார்ப்பரேட் கவர்ச்சி கன்னியாக வரும் ‘பிக்பாஸ் 4’ சம்யுக்தா, அமைதியாக வந்து செல்கிறார். ஒரே ஒரு காட்சியாக இருந்தாலும் கிளைமாக்ஸில் வந்து அதகளப்படுத்தியுள்ளார் நடிகர் சத்யராஜ். சிறிது நேரமே இவர் வந்தாலும் அப்லாசை அள்ளுகிறார். அரசியல்வாதியாக வரும் பார்த்திபன் எப்போதும் போல் தனக்கே உரித்தான நக்கல் நையாண்டியுடன் சிறப்பாக நடித்து படத்தை தாங்கிப் பிடித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் படத்திற்குப் பக்க பலமாக அமைந்துள்ளது.

கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் ஒகே. பின்னணி இசை படத்துக்கு வேகத்தைக் கூட்டியுள்ளது. மனோஜ் பரமஹம்சா மற்றும் மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளன.

சாதாரண அரசியல் கதையில் ஸ்பிலிட் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்ற ‘அந்நியன்’ கான்செப்டை கலந்து புதுமை காட்ட முயற்சி மட்டுமே செய்துள்ளது ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம்.

துக்ளக் தர்பார் - சறுக்கல்!

Tughlaq Durbar moviereview
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe