இன்றைய காலகட்டத்தில் பல்வேறு இன்ப்ளூயன்சர்கள் சோசியல் மீடியாவில் வலம் வருவது வாடிக்கையாக இருக்கின்றது. குறிப்பாக கணவன், மனைவி இணைந்து கொண்டு குடும்பமாக சேர்ந்து இன்ப்ளூயன்சர்கள் தம்பதிகளாக வலம் வருவது மிகவும் ஃபேஷனாக பார்க்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு வருமானத்தையும் ஈட்டி கொடுப்பது இந்த காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக இருக்கிறது. இப்படி இருக்கும் ஒரு தம்பதி பணத்திற்காக எந்த  எல்லை வரை செல்கிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த ட்ரெண்டிங் திரைப்படம் எந்த அளவு டிரெண்டில் இருக்கிறது? 

Advertisment

கலையரசன், பிரியாலயா தம்பதியினர் சோசியல் மீடியாவில் வீடியோ போட்டு இன்ப்ளூயன்சர்கள் வலம் வருகின்றனர். அதை வைத்துக்கொண்டு நன்றாக சம்பாரித்து மிகப்பெரிய வீடு வாங்கி சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நேரத்தில். இவர்களது யூடியூப் ஐடி ஹேக் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு விடுகிறது. இதனால் அவர்களால் வருமானம் ஈட்ட முடியாத சூழல் ஏற்பட கடன் தொல்லையால் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு மர்மமான முறையில் ஒரு கால் வருகிறது. அந்த காலில் பிக் பாஸ் முறையில் வீட்டிலிருந்து கொண்டே சில பல கேம்களை விளையாடினால் நிறைய பணம் கிடைக்கும் என கூறுகின்றனர். அதைக் கேட்டு ஆசை கொள்ளும் கலையரசன் தம்பதியினர் எப்படியாவது கடனை அடைத்து விட வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் அந்த கேமை விளையாட ஆரம்பிக்கின்றனர். அந்த கேமால் அவர்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்பட்டாலும் பல தீமைகளும் ஏற்படுகிறது. 

இதைத்தொடர்ந்து அந்த கேமில் இவர்கள் நீடித்தார்கள், இல்லையா? அந்த கேமால் இவர்களுக்கு கிடைத்தது என்ன? இதற்காக அவர்கள் அந்த எல்லை வரை சென்றார்கள்? இவர்களது வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்ததா, இல்லையா? என்பதே இந்த ட்ரெண்டிங் படத்தின் மீதி கதை. 

309

Advertisment

இன்றைய காலகட்ட தம்பதியினர் இந்த சோசியல் மீடியா யுகத்தில் மாட்டிக் கொண்டு எப்படி வீடியோ போட்டு டிரெண்டாக வேண்டும் என்ற அடிக்ஷனில் மாட்டி தவிக்கிறார்கள் என்பதை எதார்த்தமாக காட்சிப்படுத்தி காட்டியிருக்கிறார் இயக்குநர் சிவராஜ். இந்த சோசியல் மீடியா காலகட்டத்தில் கப்பில் வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கும் தம்பதியினர் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்துக் கொண்டு அதன் மூலம் ஒரு மர்மமான கேமில் இவர்கள் போய் மாட்டிக் கொண்டால் எந்த அளவு குடும்பத்திற்குள் குழப்பமும், பிரச்சனைகளும் ஏற்படும் என்பதை கலையரசன், ப்ரியாலயா தம்பதியினரை வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் சிவராஜ். 

படம் ஆரம்பித்து முதல் பாதி மெதுவாகவும் போகப்போக வேகம் எடுத்து பின் பிற்பாதியில் பல்வேறு திருப்பங்கள் இடையே கேமுக்குள் நுழைந்து இறுதி கட்டத்தில் எதிர்பாராத விதமாக படம் முடிந்து பார்ப்பவர்களுக்கு இந்த சோசியல் மீடியா ட்ரெண்டிங் என்ற மாயவலை எப்படி குடும்பங்களை சீர்குலைக்கிறது என்பதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள். கதைக்குள் கொடுத்திருக்கும் டாஸ்க்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் திரைக்கதைக்கும் அதே போல் முக்கியத்துவம் கொடுத்து இன்னும் கூட விறுவிறுப்பாக கூறி இருந்தால் இந்த ட்ரெண்டிங் இன்னமும் ட்ரெண்டாக அமைந்திருக்கும். 

கலையரசன் ட்ரெண்டிங் மோகம் கொண்ட இளைஞராக இந்த படத்தில் வருகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் சிறப்பான நடிப்பை கொடுத்து அதற்கு நியாயம் செய்திருக்கிறார். இவரது மனைவியாக வரும் பிரியாலயா. வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான விஷயங்களை செய்து, கேமுக்குள் நுழைந்தவுடன் சிறப்பான முறையில் இந்த படத்திற்கு பங்களிப்பு செய்து கவனம் பெற்று இருக்கிறார். இங்க நான் தான் கிங்கு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இந்த படத்தில் நடிப்பில் அடுத்த கட்டம் சென்று இருக்கிறார். படம் முழுவதும் இவர்கள் இரண்டு பேரே அதிகமாக வருகிறார்கள் ஒரே வீட்டுக்குள் படம் நடப்பதாலும் கேம் குறித்து பிக் பாஸ் போல் ஒரு முகமூடி அணிந்த நபர் படம் முழுவதும் வருவதாலும் இவர்களுக்குள்ளேயே படம் நகர்கிறது. அவ்வப்போது சில கேரக்டர்கள் மட்டும் உள்ளே வந்து செல்கின்றன அவர்கள் அனைவருமே அவரவருக்கான பங்களிப்பை சிறப்பாக செய்து விட்டு சென்று இருக்கின்றனர். வழக்கம்போல் சாம் சி எஸ் பின்னணி இசை காதை கிழிக்கிறது. பாடல்கள் சுமார் டாஸ்க்களுக்கு ஏற்ற பின்னணி இசை மட்டும் சிறப்பாக அமைந்திருக்கிறது. பிரவீன் பாலு ஒளிப்பதிவில் வீட்டுக்குள்ளேயே படம் நடப்பதாலும் அதே சமயம் டாஸ்க் கொடுத்த கேம்முக்கான காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

Advertisment

தமிழ் சினிமாவில் இந்த படம் புதிதாக ஒரு கதைக்களத்தை வைத்துக்கொண்டு உருவாகி இருந்தாலும் படம் முழுவதும் ஒரே வீட்டில் நடப்பதாலும், கலையரசன் பிரியாலயா தம்பதியினர் படம் முழுவதும் வருவதாலும் பார்ப்பவர்களுக்கு சற்று அயர்ச்சி ஏற்படும் படி இருந்தாலும் படத்தில் வரும் கேம் ஷோ காட்சிகள் ஆரம்பித்ததற்கு பிறகு அவர்களுக்கு கொடுக்கும் டாஸ்க்குகள் வித்தியாசமாக இருப்பது பல இடங்களில் ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் அவை ஓவர் டோஸ் ஆக அமைந்து தேவையில்லாத டாஸ்க் கொடுப்பது நம்மை சோதிக்கவும் வைத்திருக்கிறது. இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் ட்ரெண்டிங் மோகம் ஒரு குடும்பத்தை எந்த அளவு சீரழிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருப்பது பாராட்டத்தக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவே இந்த படத்திற்கு பிளஸ் ஆகவும் அமைந்திருக்கிறது. 

ட்ரெண்டிங் - முதலிடம் இல்லை!