
மலையாளத்தில் உண்மை சம்பவங்களை தழுவி பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுகின்றன. அதனாலையே அங்கு இந்த மாதிரியான உண்மை சம்பவ படங்கள் அதிகம் உருவாகின்றன. தற்போது அந்த வரிசையில் 2003 ஆம் ஆண்டு வயநாடு மாவட்டம் முத்தங்காவில் நடந்த பழங்குடியினருக்கு எதிராக கேரள அரசு செய்த வன்முறையை தழுவி வெளியாகி இருக்கும் இந்த ‘நரி வேட்டை’ படம் எந்த அளவு வரவேற்பை பெற்று உள்ளது..?
ஆலப்புழாவில் வேலை வெட்டி இல்லாமல் மிகவும் அஜாக்கிரதை மிக்க மனிதராக வலம் வரும் டொவினோ தாமஸ் நாயகி பிரியம்வதா கிருஷ்ணனை காதலிக்கிறார். நாயகன் வேலை வெட்டி இல்லாமல் இருப்பதால் இவர்களது காதலுக்கு நாயகியின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். இன்னொரு புறம் தந்தையை இழந்த டொவினோ தாமஸை ஒற்றையாலாக காப்பாற்றிக் கொண்டிருக்கும் அவரது தாய், தன் குடும்பத்தை காப்பாற்ற ஏதாவது ஒரு வேலைக்கு செல்லும்படி டொவினோவை வற்புறுத்துகிறார். ஒரு பக்கம் காதல் இன்னொரு பக்கம் குடும்பம் என நெருக்கடிக்கு மத்தியில் சிக்கும் டொவினோ தாமஸ் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்கு சேருகிறார். அவருக்கு ரிசர்வ் போலீசில் பயிற்சி காவலராக வேலை கிடைக்கிறது. அங்கு வேண்டா விருப்பமாக மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்து வருகிறார்.

இதற்கிடையே வயநாட்டில் அங்கு வாழும் பழங்குடியின மக்கள் தங்களது நில உரிமை போராட்டத்தை கையில் எடுக்கின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகும் சூழலில் அந்தப் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர சேரன் தலைமையில் சூரஜ் வெஞ்சரமுடு மற்றும் டொவினோ தாமஸ் அடங்கிய ரிசர்வ் போலீஸ் குழுவை கேரளா அரசு அங்கு அனுப்புகிறது. சென்ற இடத்தில் போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகும் சூழலில் அரசும் மத்திய துணை ராணுவப் படையினரும் சேர்ந்து கொண்டு சூழ்ச்சி செய்து எப்படியாவது போராட்டத்தை முறியடிக்க திட்டமிடுகின்றனர். அந்தத் திட்டத்தில் பலிகடாவாகிய சூரஜ் வெஞ்சரமுடுவை கொன்று விடுகின்றனர். இதனால் அங்கு கலவரம் வெடிக்கிறது. போராட்டத்தை ஒடுக்க ரிசர்வ் போலீஸ் குழு பழங்குடியினரை கண்டபடி தாக்கி வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையே தனக்கு நண்பனுக்கு நண்பனாகவும் தந்தைக்கு தந்தையாகவும் இருக்கின்ற சூரஜ்ஜை யார் கொலை செய்தது என துப்பத் துலக்குகிறார் டோவினோ தாமஸ். அதில் அவர் கொலையாளியை கண்டுபிடித்தாரா இல்லையா? போலீஸும் அரசாங்கமும் செய்த சதி வெட்ட வெளிச்சம் ஆனதா, இல்லையா? கலவரத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு நியாயம் கிடைத்ததா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
ஒரு உண்மை சம்பவத்தை வைத்துக் கொண்டு அதன் மூலம் ஒரு த்ரில்லிங்கான போலீஸ் படமாக கொடுத்து அதை ரசிக்க வைக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர் அனுராஜ் மனோகர். பொதுவாக மலையாள படங்கள் என்றாலே படம் ஆரம்பித்து கதைக்குள் போகும் முன் ஸ்டேஜிங்கில் அதிக நேரம் எடுத்து கொள்வர். அந்த வகையில் இந்த படமும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் போதிய நேரம் தாண்டி அதிக நேரம் ஸ்டேஜிங்குக்கு எடுத்துக் கொள்கிறது. அதுவே படம் பார்ப்பவர்களுக்கு சற்று அயர்ச்சியை கொடுத்திருக்கிறது. பின் இதைத் தொடர்ந்து கதைக்குள் செல்லும் திரைப்படம் போகப் போக வேகம் எடுத்து இரண்டாம் பாதிக்கு மேல் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்பு வேகம் எடுத்து அதன் பின் ஜெட் வேகத்தில் பயணித்து பல்வேறு திருப்புமுனைகளுக்கிடையே நல்ல த்ரில்லிங்கான உண்மை சம்பவ படமாக இது அமைந்திருக்கிறது.

வயநாடு பகுதிகள் ஆரம்பிக்கும் காட்சிகளில் கதை ஆரம்பிக்கும் திரைப்படம் போலீஸுகளுக்குள் இருக்கும் உள்ளடிகளை மிகத் தெள்ளத் தெளிவாகவும் ஓபனாகவும் காண்பித்து சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் அதே சமயம் பழங்குடியின மக்களின் பிரச்சனைகளையும் அதில் இருக்கும் ஆழத்தையும் இன்னும் கூட தெளிவாக காட்டி இருக்கலாம். அதே போல் போலீஸுக்கு வில்லன் போலீஸே என்ற புது விதமாக நடந்த உண்மை சம்பவத்தை சுவாரசியமாக காட்டும் முயற்சியில் சற்றே பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். படத்தின் டைட்டிலுக்கும் கதைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் தான் சொல்ல வந்த விஷயத்தை எந்த ஒரு சமரசமும் இன்றி உண்மைத் தன்மையாக காட்டியதற்கு இந்த படத்திற்கு ஒரு சபாஷ் போடலாம்.
டொவினோ தாமஸ் இளமையான மெடுக்கான இளைஞராக படத்தில் ஆரம்ப காட்சிகளில் தோன்றி போகப் போக பொறுப்பான இளைஞராக மாறி நல்ல போலீஸாக தன்னால் என்ன முடியுமோ அதை திறன் பட செய்யும் உண்மைக்கு மிக நெருக்கமான கதாபாத்திரமாக தன் நடிப்பின் மூலம் கைதட்டல் பெற்று இருக்கிறார். இவருடன் நாயகியாக வரும் பிரியம் வதா கிருஷ்ணன் வழக்கமான நாயகியாக வந்து சென்றாலும் நடிப்பில் பல்வேறு நுணுக்கங்களை அழகாக காண்பித்து கவனம் பெற்று இருக்கிறார். இவர் ஹீரோயினுக்கு தகுந்த முகம் இல்லாமல் இருந்தாலும் நடிப்பில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி முகத்துக்கும் நடிப்புக்கும் எந்த ஒரு விதமான சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சூரஜ் வெஞ்சரமுடு வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளுக்கு உயிரூட்டி உள்ளார். இவருக்கும் டொவினோ வுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

சர்ப்ரைஸ் கதாபாத்திரமாக வரும் சேரன் அதை திறன் பட செய்து கைதட்டல் பெற்று இருக்கிறார். முதல் முறையாக கிரே ஷேடில் நடித்திருக்கும் அவர் அதை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். போலீஸுக்கு போலீஸாகவும் வில்லனுக்கு வில்லனாகவும் மாறி மாறி தனது உணர்வுகளை சிறப்பாக காண்பித்து கைதட்டல் பெற்றிருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே தன் உடல் பொருள் ஆவி என உயிரை கொடுத்து சிறப்பாக நடித்து படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பு அளித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் விஜய் காட்சி அமைப்பில் கேரளா காட்டுப்பகுதி மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக போராட்டம் சண்டை சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு உயிர் ஊட்டியிருக்கிறது. ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் சுமார், பின்னணி இசை சிறப்பு.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் உண்மைக்கு மிக நெருக்கமாக இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக இருந்தாலும் அதையும் சற்றே சுவாரஸ்யம் கலந்து கொடுத்தால் அந்த படம் மிகப்பெரும் வெற்றி பெறும். அந்த வகையில் உண்மையை உரக்க சொன்ன இந்த திரைப்படம் திரைக் கதையில் ஏனோ சற்றே தடுமாறி சுவாரஸ்யம் குறைந்து காணப்படுகிறது. இருந்தும் எளிய மக்களுக்கு எதிராக அரசு நடத்திய அதிகார துஷ்பிரயோக வன்முறையை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்ததற்காகவே இந்த படத்தை கண்டிப்பாக காணலாம்.
நரி வேட்டை - குறி தப்பவில்லை!