Skip to main content

பொங்கல் ரேசில் வென்றது யார்? - 'துணிவு' விமர்சனம்!

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

Thunivu Movie Review

 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பொங்கல் விடுமுறையில் அஜித் விஜய் படங்கள் நேருக்கு நேர் மோதல். அஜித்துக்கு துணிவு, விஜய்க்கு வாரிசு. இதில் அஜித்தின் துணிவு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

 

சென்னையில் உள்ள பிரபல வங்கியில் 500 கோடி ரூபாய் கருப்பு பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு குரூப் திட்டமிட்டு அதை துப்பாக்கி முனையில் செயல்படுத்துகிறது. வங்கியில் உள்ள மக்களோடு சேர்த்து சர்வதேச கேங்ஸ்டரான அஜித்தும் வங்கிக்குள் சிக்குகிறார். சிறிது நேரத்திலேயே அஜித் இவர்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்து வங்கியைத் தான்தான் கொள்ளையடிக்க வந்துள்ளதாகக் கூறி மொத்த பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸ் கமிஷனர் சமுத்திரகனி தலைமையில் ஒரு பெரிய போலீஸ் படை அமைக்கப்பட்டு வங்கியைச் சுற்றி வளைத்து கொள்ளைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தப்படுகிறது. இதையடுத்து அஜித் ஏன் இந்த பேங்க்கை கொள்ளையடிக்க வர வேண்டும்? வங்கிக்குள் நுழைந்த மற்ற கொள்ளையர்கள் யார்? உண்மையில் மக்களின் பணத்தை யார் கொள்ளை அடிக்கிறார்கள்? என்பதே துணிவு படத்தின் மீதிக் கதை.

 

வலிமை படத்திற்கு எழுந்த பல்வேறு நெகடிவ் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுப்பது போல் ஒரு க்றிஸ்ப்பான சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து, நெகட்டிவ் விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்து, அதே சமயம் அஜித் ரசிகர்களுக்கு இனிப்பான பொங்கல் பரிசாகத் துணிவை கொடுத்துள்ளார் இயக்குநர் எச்.வினோத். அஜித்துக்கு என்னென்ன பிளஸ் இருக்கிறதோ அதை எல்லாம் சரியான இடத்தில் பிளேஸ் செய்து அதை ரசிகர்களுக்கும் சரியான இடத்தில் கனெக்ட் செய்து துணிவை பொங்கல் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர் எச். வினோத். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அஜித் என்ற ஒரே மனிதனை சுற்றியே நகர்ந்தாலும் அதில் மக்களிடம் உள்ள பணத்தை வங்கிகள் எப்படியெல்லாம் ஏமாற்றி கொள்ளையடிக்கிறார்கள் என்ற மெசேஜையும் உட்புகுத்தி அதை திறம்படக் கையாண்டு வேகமான திரைக்கதையோடு ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் எச்.வினோத். குறிப்பாக கிரெடிட் கார்ட், மினிமம் பேலன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற விஷயங்களால் மக்கள் படும் அவதிகள், அதேசமயம் இவைகளில் இருந்து மக்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இப்படம் கொடுத்திருக்கிறது. முதல் பாதி முழுவதும் ஆக்சன் காட்சிகள் நிறைந்து ஜெட் வேகத்தில் பயணித்து தெறிக்கவிடும் திரைப்படம் இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகள் தவிர்த்து மற்ற காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டு ஒரு நல்ல கமர்சியல் திரைப்படம் பார்த்த உணர்வை கொடுத்துள்ளது.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது சக்சஸ் ஃபார்முலாவான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருக்கிறார் அஜித். வசன உச்சரிப்பு, உடல் மொழி, ஆக்சன் காட்சிகள் என தனக்கு கிடைத்த அனைத்து ஸ்பேசிலும் அடித்து துவம்சம் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். குறிப்பாக பேங்க்கிற்குள் இவர் ஆடும் டான்ஸ் காட்சிகள் தியேட்டரை விசில் மற்றும் கைத்தட்டல்களால் அதிரச் செய்கிறது. அசுரன் படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றிருக்கிறார் நாயகி மஞ்சு வாரியர்.

 

ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையில் நாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மஞ்சு வாரியர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார். போலீஸ் கமிஷனராக நடித்திருக்கும் சமுத்திரகனி விரைப்பான போலீஸர் ஆபீஸராக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகாநதி சங்கர் அஜித்தோடு இணைந்து கலகலப்பான காட்சிகளில் நடித்து ரசிக்க வைத்துள்ளார். பத்திரிகையாளராக வரும் மோகனசுந்தரம் அடிக்கும் ஒவ்வொரு பன்ச் வசனங்களும் தியேட்டரை கைதட்டல்களால் அதிரச் செய்கிறது. இவரது மெல்லிய காமெடி காட்சிகள் அஜித்தை தாண்டி படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இவர்களுடன் பேங்க் மேனேஜர், ஜி.எம் சுந்தர், பேங்க் சேர்மேன் ஜான் கொகேன், டிவி சேனல் ஓனர் மமதி சாரி, விஜய் டிவி புகழ் பாவணி ஆமீர், இன்ஸ்பெக்டர் பகவதி பெருமாள், போலீஸ் பக்ஸ் ஆகியோர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பக்க பலமாக அமைந்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறார்கள்.

 

நீரவ் ஷா ஒளிப்பதிவில் படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆக்சஷன் காட்சிகள், கடல் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜிப்ரான் இசையில் கேங்ஸ்டா மற்றும் ‘சில்லா சில்லா’ பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. ஒரு பேங்க் ஹெய்ஸ்ட் திரைப்படத்திற்கு எந்த அளவு கிரிப்பிங் ஆகவும், மாசாகவும் பின்னணி இசை தேவையோ அதை சரியான இடங்களில் சரியான கலவையில் கொடுத்து ஒரு சூப்பர் ஹிட் படத்திற்கான பின்னணி இசையை சிறப்பாக கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான். இவரது பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறி இருக்கிறது. 

 

ஒரு அதிரடியான ஆக்சன் நிறைந்த ஹைஸ்ட் திரைப்படமாக ஆரம்பிக்கும் இப்படம் கடைசி வரை அதே அதிரடியுடன் முடிவடைந்து பார்ப்பவர்களுக்கு நிறைவான அனுபவத்தைக் கொடுத்து பொங்கல் ரேசில் வெற்றி பெற்றிருக்கிறது துணிவு திரைப்படம். படத்தில் வழக்கமாக ஆங்காங்கே வரும் லாஜிக் மீறல்கள் இப்படத்திலும் இருந்தாலும் அவை படத்தைப் பெரிதாக பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டுள்ளது அஜித்தின் ஒன் மேன் ஆர்மி ஷோ. அதேபோல் வங்கிகளில் கொடுக்கப்படும் எந்த ஒரு பாரத்தையும் முழுமையாகப் படிக்காமல் கையெழுத்துப் போடாதீர்கள் என்ற ஒற்றை வரி மெசேஜையும் சரியான விதத்தில் மக்களிடம் சென்று சேரும்படி கொடுத்து, தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்து விட்டு ஒரு ரேசி பேங்க் ஹெயிஸ்ட் திரில்லர் படமாக வெற்றி பெற்றுள்ளது துணிவு திரைப்படம். 

 

துணிவு - பொங்கல் ரேஸ் வின்னர்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.