/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/162_9.jpg)
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கிறது?
சாதாரண நடுத்தர குடும்பத்து பையனான தனுஷ் உணவு டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இவர் தந்தை பிரகாஷ்ராஜ், தாத்தா பாரதிராஜா ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது தோழியான நித்யாமேனன் கீழ் வீட்டில் வசிக்கிறார். தனுஷூம் நித்யா மேனனும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். பிரகாஷ் ராஜ் மேல் இருக்கும் வெறுப்பு காரணமாக தனுஷ் அவரிடம் பேசிக் கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிக்கிறார். தனுஷுக்கு உறுதுணையாக தாத்தா பாரதிராஜாவும் தோழி நித்யா மேனனும் இருக்கின்றனர். மிகுந்த பயந்த சுபாவம் கொண்ட தனுஷ் முதல் பாதியில் அவருடைய பள்ளித் தோழியான நகரத்து பெண் ராஷி கண்ணாவை காதலிக்கிறார். இரண்டாம்பாதியில் கிராமத்து பிரியா பவானி சங்கர் காதலிக்கிறார். இந்த இரு காதல்களும் புட்டு கொள்கிறது. இதையடுத்து அவர் வாழ்க்கை என்னவானது? அவரது காதல் ஆசை நிறைவேறியதா, இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒரு கதையாக பார்க்கும்பொழுது என்னடா ஒன்றுமே இல்லையே என்று தோன்றினாலும் இந்தக் கதையை படமாக்கிய விதத்திலும், திரைக்கதையை அமைத்து காட்சிப்படுத்திய விதத்தை ரசிக்கும்படி புதிய வடிவத்தில் அமைத்து இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றி உள்ளார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். படம் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களை ஞாபகப் படுத்தினாலும் காட்சிகளும், அதில் நடித்த நடிகர்களின் நடிப்பும் ஃப்ரஷ்ஷாக அதேசமயம் உணர்வுபூர்வமாக அமைந்து படத்தை கரை சேர்த்துள்ளது. அதேபோல் படத்தை எடுத்த விதத்தில் பிரம்மாண்டத்தை காட்டாமல், காட்சிகளுக்குள் இருக்கும் உணர்வுகளை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி பார்ப்பவர்களை நெகிழச் செய்து ஒரு ஃபீல் குட் படமாக இப்படத்தை கொடுத்துள்ளனர். குறிப்பாக பாரதிராஜா, நித்யாமேனன், தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் கலகலப்பாகவும் அதேசமயம் மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் அமைந்து பார்ப்பவர்களுக்கு பல்வேறு உணர்ச்சிகளை சரி சமமாக கடத்தி ஒரு நல்ல பொழுதுபோக்கு குடும்ப காதல் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுத்துள்ளது. இருந்தும் படத்தில் சின்ன சின்ன மைனஸ் விஷயங்களாக பார்க்கப்படுவது, தனுஷின் முந்தைய குடும்ப காதல் படங்களின் திரைக்கதை சாயல்கள் ஆங்காங்கே தென்படுவது. ஆனாலும் படத்தை பெரிதாக பாதிக்கவில்லை.
இப்படத்தின் முதல் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது கதாபாத்திர தேர்வு. இப்படத்தில் நடித்த எந்த ஒரு கதாபாத்திரமும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அவரவருக்கான ஸ்பேசில் புகுந்து விளையாடி இருக்கின்றனர். குறிப்பாக தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோரின் நடிப்பு மிக மிக யதார்த்தமாக அமைந்து திரைக்கதைக்கு வேகமும், காட்சிகளுக்கு உயிரும் ஊட்டி உள்ளது. நடிகர் தனுஷ் எப்பவும் போல் எந்த இடத்தில் நடிக்கிறார், எந்த இடத்தில் நடிக்கவில்லை என்பதே தெரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வழக்கம்போல் அழகாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார். தாத்தாவிடம் அடாவடியாக பேசும் காட்சிகளிலும் சரி, அப்பாவிடம் முறைத்துக்கொண்டு மல்லுக்கட்டும் காட்சிகளிலும் சரி, நித்யா மேனனிடம் மாட்டிக்கொண்டு அடிவாங்கும் காட்சிகளிலும் சரி, எங்கெங்கு எந்தெந்த அளவு நடிப்பு தேவையோ அந்தந்த இடத்தில் அளவான நடிப்பை நேர்த்தியாகவும் அழகாகவும் வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றுள்ளார்.
படத்தின் இன்னொரு நாயகனாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். தனுஷுக்கு சரிசம போட்டியாக சரியான டப் கொடுத்து உலகத்தரம் வாய்ந்த நடிப்பை மிக அசால்டாக செய்து ரசிகர்களிடம் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று கைதட்டல்களை அள்ளி உள்ளார். குறிப்பாக இவருக்கும் தனுஷுக்கும் ஆன கெமிஸ்ட்ரி வேற லெவலில் அமைந்து பார்ப்பவர்களுக்கு ஒரு சேர கலகலப்பும், நெகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. கூடுதல் முத்தாய்ப்பாக நித்யா மேனனின் அழகான தமிழ் உச்சரிப்பும், அவருடைய சொந்த குரலும் கதாபாத்திரத்திற்கு இன்னமும் அழகு சேர்த்துள்ளது. நித்யா மேனனுக்கு விருதுகள் நிச்சயம்.
எப்போதும் உர்ர்ர் என நடித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் தனது இன்னொரு முகத்தை காட்டியுள்ளார். இப்படத்தின் பல காமெடி காட்சிகளை தன் மேல் சுமந்து கொண்ட பாரதிராஜா அதை சிறப்பாகவும் கலகலப்பாகவும் செய்து அசத்தியுள்ளார். குறிப்பாக இவருக்கும் தனுஷுக்கும், நித்யா மேனனுக்குமான கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்து எங்கெங்கு கலகலப்பு தேவையோ அங்கெல்லாம் கலகலப்பு கொடுத்து, எங்கெங்கு நெகிழ்ச்சி தேவையோ அங்கெல்லாம் நெகிழ்ச்சி கொடுத்து பார்ப்பவர்களை ஒரு சேர சிரிக்கவும், கலங்கவும் வைத்து மாஸ் காட்டியுள்ளார். இவரும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து பிளஸ் ஆக மாறி உள்ளார். தனுஷ் தந்தையாக வரும் பிரகாஷ்ராஜ் ஆரம்பத்தில் சற்று வில்லத்தனம் காட்டி போகப்போக பாசமான அப்பாவாக மாறி நெகிழ்ச்சி கொடுத்துள்ளார். இவரும் தனது அனுபவ நடிப்பால் காட்சிகளுக்கு உயிரூட்டி திரைக்கதைக்கு பக்கபலமாக அமைந்துள்ளார். சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ள நாயகி ராஷி கண்ணா, நாயகி பிரியா பவானி சங்கர் ஆகியோர் அவரவருக்கான வேலையை அழகாகவும், க்யூட்டாகவும் செய்து விட்டு சென்றுள்ளனர். முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள ஸ்ரீரஞ்சனி, பப்பு, முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்துவிட்டு சென்றுள்ளனர்.
படத்தின் மற்றொரு நாயகன் ராக்ஸ்டார் அனிருத். பொதுவாக அனிருத் படங்கள் என்றாலே படத்தை காட்டிலும் அவரது இசை ஓவர்டேக் செய்யும். ஆனால் இந்தப்படத்தில் சற்றே அடக்கி வாசித்திருக்கிறார். ஆனாலும் இவரது இசையில் உருவான மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே, தாய் கெழவி ஆகிய பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட். அதேபோல் எந்தெந்த காட்சிகளுக்கு என்னென்ன இசை வேண்டுமோ, எந்த இடத்தில் சைலண்ட் வேண்டுமோ அந்த இடங்களில் அந்தந்த விஷயங்களை மிக சரியாக வெளிப்படுத்தி அளவான பின்னணி இசை மூலம் அழகான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்படி காட்சிகளுக்கு உயிரூட்டி படத்தை கரை சேர்க்க உதவியுள்ளார். ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகளும், இன்டீரியர் காட்சிகளும், இரவு நேரத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல் காட்சியும் சிறப்பாக அமைந்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் படம், தனுஷின் லவ் படம், தனுஷின் குடும்பப் படம் போன்ற பல காரணங்களுக்காக இப்படத்தை பார்க்க தோன்றினாலும் அதையெல்லாம் தாண்டி ஒரு தரமான கலகலப்பு நிறைந்த குடும்ப காதல் படமாக இப்படம் அமைந்துள்ளதற்காகவே திருச்சிற்றம்பலத்தை காண கூட்டமாக செல்லலாம்.
திருச்சிற்றம்பலம் - பேமிலி பிளாக் பஸ்டர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)