இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான அதியன் ஆதிரை அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் தண்டக்காரண்யம். பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சுற்று வட்டார பகுதிகளில், காடுகளை தண்டக்காரண்ய காடுகளாக பார்க்கப்படுகிறது. அப்படி தண்டகாரண்ய காடுகள் என்றால் என்ன? அதற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? போன்ற கேள்விகளுக்கு விடையாக வந்திருக்கிறது தண்டக்காரண்யம். இந்த புதுமையான கதை கரு மக்களை கவர்ந்ததா, இல்லையா?
காட்டுப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களில் ஒருவரான கலையரசன் வனத்துறை அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிகிறார். எப்படியாவது நிரந்தர பணியாளராக பதவி உயர்வு பெற வேண்டும் என கடுமையாக போராடுகிறார். அரசு அதிகாரிகள் சொல்லும் வேலைகளை தட்டாமல் செய்து அவர்களை எப்படியாவது கைக்குள் போட்டுக்கொள்ள முயற்சி செய்கிறார். இதற்கிடையே காட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்து, அதன் மூலம் பணம் பார்க்கும் முத்துக்குமாரையும் அவருக்கு உடந்தையாக இருக்கும் கலையரசனின் மேல் அதிகாரியையும் கலையரசன் காட்டிக் கொடுக்கிறார். இதனால் அவரின் வேலை பறிபோகிறது. இதனால் கலையரசனின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. அதேபோல் அவர் காதலிக்கும் வின்சு சாமையும் திருமணம் செய்ய முடியாமல் போகிறது. எப்படியாவது நிரந்தர வேலை வாங்கி வின் சுவை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் இருக்கும் கலையரசனை தன் நிலத்தை விற்று ராணுவத்தில் சேர கலையரசனை ஜார்க்கண்டுக்கு அனுப்பி வைக்கிறார் அவருடைய அண்ணன் கெத்து தினேஷ்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/22/215-2025-09-22-11-11-02.jpg)
ஐ எஸ் ஜி எஸ் என்று இருக்கும் ஒரு ராணுவ பிரிவில் சேர கலையரசன் ராணுவ முகாமுக்கு செல்கிறார். ஐ எஸ் ஜி எஸ் படையில் இருப்பவர்கள் நக்சல்களை கண்டுபிடித்து ஒழிக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதற்காக அவர்களுக்கு ராணுவ பயிற்சி கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே நக்சலாக இருக்கும் நபர்கள் மனம் திருந்தி இதில் சேர்ந்து கொண்டால் அவர்களையும் ராணுவ அதிகாரிகளாக மாற்றி நக்சல்களுக்கு எதிராக அவர்களை களத்தில் இறக்கி விடுவது இந்த வேலையின் சிறப்பு அம்சமாகும். இப்படி இருக்கும் இந்த அரசு வேலையில் சேர கலையரசன் வந்து சேரும் அந்த ராணுவ கேம்பில் அவருக்கு என்ன நடந்தது? உண்மையில் அந்த ராணுவ கேம்ப் நடத்தும் நோக்கம் என்ன? கலையரசன் சென்ற பிறகு அண்ணன் கெத்து தினேஷ் வாழ்க்கை என்னவானது? உண்மையில் நக்சல்கள் எப்படி உருவாகிறார்கள்? என்பதே தண்டகாரண்யம் படத்தின் மீதி கதை.
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் வலி வேதனைகளை கமர்சியலாக சொன்ன இயக்குநர் அதியன் ஆதிரை, இந்த முறை தண்டக்காரண்யம் படம் மூலம் நக்சல்கள் குறித்த படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு காதல் கலந்த அதிரடி ஆக்சன் சென்டிமென்ட் படமாக கொடுத்து இருக்கிறார். இந்தப் படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் படும் பாடு, அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் அதிகாரத்தின் ஒடுக்குமுறை போன்றவைகளால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அதிலிருந்து மீள அவர்கள் எந்த எக்ஸ்ட்ரீமுக்கு செல்கின்றனர், குறிப்பாக ராணுவ தளவாடங்களில் நடக்கும் ஊழல்கள் என்னென்ன போன்றவைகளை மையமாக வைத்து வித்தியாசமான கதை கருவை கொண்டு உருவாகி இருக்கும் இந்த தண்டக்காரண்யம் திரைப்படத்தை எளிய மக்களும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/22/213-2025-09-22-11-11-34.jpg)
தன் முதல் படத்தில் விறுவிறுப்பாக கதை சொன்ன இயக்குநர் இதில் ஏனோ நிறுத்தி நிதானமாக கதை சொல்லி இருக்கிறார். மக்களின் வலி மற்றும் வேதனைகளுக்கு முன்னுரிமை அளித்திருக்கும் இயக்குநர் திரைக்கதை வேகத்தை இன்னமும் கூட கூட்டி இருக்கலாம். படம் முழுவதும் அழுத்தம் நிறைந்த காட்சிகள் அதிகம் இருப்பது சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. இருந்தும் சொல்ல வந்த விஷயம் அதில் கூறி இருக்கும் கருத்துக்கள் இன்றைய சமூகத்திற்கு அவசியமான கருத்தாக இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. கதை கருவில் இன்னுமும் கூட தெளிவு இருந்திருக்கலாம். அதேபோல் திரைக்கதையிலும் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம்.
கலையரசன் வழக்கம்போல் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ராணுவ கேம்பில் அவர் தன் உடலை வருத்தி நடித்து கைதட்டல் பெற்றிருக்கிறார். இவருடன் அதே கேம்பில் வரும் டான்ஸிங் ரோஸ் சபீர், போட்டி போட்டு கொண்டு நடித்து கவனம் பெற்று இருக்கிறார். ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டி போக போக நண்பராக மாறி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அண்ணனாக வரும் கெத்து தினேஷ் வழக்கம் போல் தனக்கு என்ன வருமா அதை சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார். இவரின் மனைவியாக வரும் ரித்விகா வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/22/214-2025-09-22-11-11-14.jpg)
மற்றொரு நாயகியாக வரும் வின்சு ஷாம் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த மாதிரியான எதார்த்த கதாபாத்திரங்களில் அவர் நடிக்கும் பட்சத்தில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கலையரசன் நண்பராக வரும் பால சரவணன் தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் வில்லனாக வரும் முத்துக்குமார் அண்ட் கேங் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். மற்றபடி படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்கு வலு சேர்த்து இருக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. பிரதீப் கலை ராஜா ஒளிப்பதிவில் காடு சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பு. செல்வா ஆர் கே படத்தொகுப்பு படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது.
படத்தின் கதைக்கரு வித்தியாசமாக இருந்தாலும் நக்சல்களை ஒழிக்க அரசு தரப்பில் இருக்கும் போலி அரசியல்வாதிகள் இந்த அளவு எக்ஸ்ட்ரீமுக்கு செல்வார்களா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இருந்தும் இந்த மாதிரியான படத்தில் பல்வேறு லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படம் எடுத்த விதத்திற்கும் அதை காட்சிப்படுத்திய விதத்துக்கும் பாராட்டுக்கள். இருந்தும் கதையில் இன்னும் கூட தெளிவு இருந்திருக்கலாம். திரைக்கதையில் வேகம் கூட்டி இருக்கலாம். மற்றபடி சொல்ல வந்த விஷயத்தை ஓரளவு நேர்த்தியாக கூறியிருப்பது பாஸ் மார்க் வாங்க வைத்திருக்கிறது.
தண்டக்காரண்யம் - போராளி!
Follow Us