
தொடர்ந்து தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நல்ல நடிப்பையும் கொடுத்து ரசிகர்களிடையே நல்ல பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்கும் சூரி இந்த முறை மாமன் படம் மூலம் குடும்ப ரசிகர்களை இழுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா?
பெரிய கூட்டு குடும்பத்தை சேர்ந்த சூரி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் அக்கா சுவாசிக்காவுக்கு தம்பியாகவும், அப்பாவாகவும் இருந்து அவரது பிரச்சனைகளுக்கு அரணாக இருந்து காக்கிறார். பத்து ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக அக்கா சுவாசிக்கா கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். அந்த ஆண் குழந்தைக்கு தாய் மாமனாகவும் கூடுதல் பொறுப்புடன் பாசமழை பொழிகிறார். இதனால் அந்த குழந்தையான பிரகித் சிவன், எந்நேரமும் சூரி உடனையே வளர்கிறான். இதற்கிடையே சூரி, அக்காவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவரான ஐஸ்வர்யா லெக்ஷ்மியுடன் காதல் வயப்பட பின்பு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களது திருமணம் அடுத்த கட்டத்திற்கு செல்ல விடாமல் சிறுவன் பிரகித் சிவன் முட்டுக்கட்டையாக இருக்கிறான். எந்த நேரமும் சூரி உடனையே நேரத்தை கழிப்பதும் அவருடனே தூங்குவதும் என இருப்பதால் சூரியும் ஐஸ்வர்யா லெக்ஷ்மியும் ஒன்று சேர முடியவில்லை. இதனால் இவர்களுக்கிடையே விரிசல் ஏற்பட குடும்பம் இரண்டாகப் பிரிகிறது.

இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஒரு வழியாக கர்ப்பம் ஆகிறார். அப்பொழுது ஒரு பிரச்சனை வெடிக்க சூரி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் அக்கா குடும்பத்தார் இடையே பிரச்சனை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் பிரிந்து விடுகின்றனர். இதைத் தொடர்ந்து அக்கா தம்பி அக்கா மகன் மனைவி என அனைவருக்கும் நடக்கும் பாச போராட்டத்தில் குடும்பம் ஒன்று சேர்ந்ததா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. இந்த கால 2கே கிட்ஸ்களுக்கு அறியப்படாத கூட்டுக் குடும்ப உறவுமுறை பாசப்பிணைப்பையும், தாய்மாமன் பாசத்தையும் மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் மனதில் பதியும்படி பாசமலர் பாணியில் பாசப் போராட்டமாக இந்த படத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சி அமைப்பையும் நம்முடைய குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் போல் நமக்குள் கனெக்ட் செய்யும்படி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் படம் பார்ப்பவர்களை உருக வைத்திருக்கிறார்.
படம் ஆரம்பித்து முதல் பாதி சற்றே கலகலப்பாகவும் பாசமாகவும் இருக்கும் திரைப்படம் இரண்டாம் பாதியில் போகப் போக மிகவும் எமோஷனலாக பார்ப்பவர் கண்களை கலங்கடிக்கும்படி கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறது. அது படம் பார்ப்பவர்களை கனத்த இதயத்துடன் பார்க்கும்படி மிகவும் ஒரு எமோஷனல் படமாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. தாய்மாமன் உறவை மிகவும் அழகாகவும் அதேசமயம் எமோஷனலாகவும் சொல்லி இருப்பது பார்ப்பவர் கண்களை கணமாக்குவது மட்டுமல்லாமல் படத்தையும் வெற்றி பெற செய்திருக்கிறது.

குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கும் இயக்குநர் அதை சரிவர கொடுத்து பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் எமோஷனலான காட்சிகள் தொடர்ந்து படை எடுத்து வருவது மட்டும் சற்றே நெஞ்சை நக்குவது போல் இருக்கிறது. அதை மட்டும் கொஞ்சம் தவிர்த்து விட்டு எமோஷனல் காட்சிக்கு பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு மீண்டும் எமோஷனல் காட்சிகளை கொடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். தொடர்ந்து வரும் எமோஷனல் காட்சிகளால் அழுது கொண்டே இருக்க முடியவில்லை. அதை இயக்குநர் சற்றே தவிர்த்து விட்டு படத்தை இன்னமும் கூட கிறிஸ்பாக கொடுத்திருக்கலாம்.
கதையின் நாயகனாக நடிக்கும் சூரி நல்ல கதையம்சம் கொண்ட படங்களை சமீப காலங்களாக தேர்ந்தெடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல பெயரை எடுத்து வருகிறார். இவர் படங்கள் வரிசையில் இந்த படமும் அவருக்கு ஒரு முத்தாய்ப்பாக அமைந்து வெற்றி படமாக அமைந்திருக்கிறது. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கும் அவர் குறிப்பாக தாய்மாமன் அக்கா மகன் பாச பிணைப்பை மிகவும் சிறப்பாக கையாண்டு நடிப்பையும் சிறப்பாக வழங்கி இருக்கிறார். இவருடன் இணைந்து சிறுவன் பிரகித் சிவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நம் கண்களை குளமாக்குகிறார். இவருக்கும் சூரிக்குமான கெமிஸ்ட்ரி மிகவும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த சிறுவனே படத்தின் ஆணிவேராக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறார். ராஜ்கிரண் விஜி தம்பதியினர் வரும் காட்சிகள் அவரவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கின்றனர். படத்தில் இவர்களது பங்களிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது.

நாயகி ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஒரு காமெடி நாயகனுக்கு நாயகியாக நடிப்பதற்கு தனி தைரியம் வேண்டும். தமிழ் சினிமாவில் அவ்வளவு சீக்கிரம் யாரும் அதை செய்து விட மாட்டார்கள். ஆனால் ஐஸ்வர்யா லெக்ஷ்மி தைரியமாக நடித்து அதை சிறப்பாகவும் நடித்து கைதட்டல் பெற்று இருக்கிறார். இவரைப் போன்று மற்ற நடிகைகளும் தயங்காமல் அனைவருடனும் கதை சரியாக இருக்கும் பட்சத்தில் நடித்தால் தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். சூரி உடனும் குடும்ப உறவுகளுடன் இவரது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி கதாபாத்திரத்தனுடன் நன்றாக ஒன்றி நடித்திருக்கிறார். குறிப்பாக சூரிக்கும் இவருக்கும் அனைத்து கெமிஸ்ட்ரி காட்சிகளும் படுஜோராக இருக்கிறது. பால சரவணன் அவ்வப்போது வந்து சிரிக்க வைக்க முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கிறார். படத்தின் இன்னொரு ஆணி வேராக இருப்பது அக்கா சுவாசிகா. இவரது முதிர்ச்சியான நடிப்பும் நேர்த்தியான முகபாவனைகளும் கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. அதேசமயம் இவரது பங்களிப்பு படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. சூரியடன் இவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று இருக்கிறார்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் படம் பிரம்மாண்டமாக தெரிகிறது. குடும்ப உறவுகளை மிகவும் பிரம்மாண்டமாகவும் தரமாகவும் காட்சிப்படுத்தி படத்துடன் நம்மை ஒன்ற வைத்திருக்கிறார். சேஷம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. அதேபோல் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்து நம் கண்களை கலங்க வைக்கும்படி இருக்கிறது. குடும்ப உறவுகளை முக்கியத்துவம் கொடுத்து பாச போராட்டத்தை சிறப்பாக கையாண்டு ஒரு நல்ல குடும்ப படமாக வெளியாகி இருக்கும் இந்த மாமன் திரைப்படம் சென்டிமென்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கதாக இருந்தாலும் அதையே ஓவர் டோஸ் ஆக கொடுத்திருப்பதை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
மாமன் - பாசக்காரன்!