Advertisment

’சூப்பர் ஹீரோ' சிவகார்த்திகேயன் வென்றாரா? ஹீரோ - விமர்சனம் 

தமிழ் திரையுலகில் காலந்தோறும் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் படங்கள் வெளிவருவது வழக்கமே. சமூக சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம், பிறகு கல்வி, விவசாயம் என பல்வேறு தளங்களில் நிகழ வேண்டிய சீர்திருத்தங்களை வலியுறுத்தி பல்வேறு படங்கள் வந்துள்ளன. சமீபமாக, விவசாயம், கல்வி, பெண்ணுரிமைஆகியவற்றை சார்ந்த சீர்திருத்த படங்கள் அதிகமாக வருகின்றன. 'இரும்புத்திரை'யில் இணைய குற்றங்கள் குறித்து மிக சுவாரஸ்யமாக கதையமைத்து கவனமீர்த்த மித்ரன், தனது 'ஹீரோ' சிவகார்த்திகேயன் மூலம் இந்திய கல்வி முறையில் நிகழ வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். கருத்தாகவும் சினிமாவாகவும் எப்படியிருக்கிறது 'ஹீரோ'?

Advertisment

sivakarthikeyan

சின்ன வயசுல ஒரு ஸ்டூடண்ட் கிட்ட, 'நீ என்னவாகப் போற?'ன்னு கேட்டா 'டாக்டர் ஆகி உயிரைகாப்பாத்துவேன், போலீஸாகி ஊர காப்பாத்துவேன், மிலிட்டரில போயி நாட்டை காப்பாத்துவேன்'னு சூப்பர் ஹீரோ மாதிரி பேசுவாங்க. ஆனா, படிச்சு முடிச்சதும் அதெல்லாம் மறந்துருவாங்க. அதுக்குக் காரணம் நம்ம கல்வி முறைதான்... - 'ஹீரோ' படத்தின் இரண்டு ஹீரோக்களாலும் இரண்டு முறை சொல்லப்படும் இந்த வசனம்தான் படத்தின் மையக்கருத்து. அந்தக் கல்விமுறையில் என்ன மாற்றங்கள் வரவேண்டும், எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், கல்வி வியாபாரம் தடுக்கப்பட வேண்டும்என்பதையெல்லாம் மிக விரிவாகவே பேசியிருக்கிறது 'ஹீரோ'. விரிவு சரி, ஆழம் இருக்கிறதா? 'சக்திமான்' ரசிகரான சிவகார்த்திகேயனுக்கு சிறு வயதிலேயே சூப்பர் ஹீரோ ஆகவேண்டுமென்பது ஆசை. நன்றாகப் படிக்கும் மாணவரான அவர், சந்தர்ப்ப சூழ்நிலையால் போலி சான்றிதழ் தயாரித்து விற்கும் வேலை செய்கிறார். கல்லூரிகளில் கமிஷன் வாங்கிக்கொண்டு மாணவர்களை சேர்த்துவிடும் வேலையும் செய்கிறார். இன்னொரு புறம், 'ஃபெயிலியர்கள்' என்று ஒதுக்கப்படும் மாணவர்களை சேர்த்து அவர்களுக்குப் பிடித்த, ஆர்வமுள்ள பாடத்தை, விஞ்ஞானத்தை கற்றுத்தந்து அவர்களை புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தச் செய்கிறார் அர்ஜுன். சிவகார்த்திகேயன், அர்ஜுனிடம் வந்து சேர்ந்தது எப்படி, சாதாரண மனிதன் சூப்பர் ஹீரோவானது எதற்கு, அதனால் சாதித்தது என்ன என்பதுதான் 'ஹீரோ'.

arjun

Advertisment

நமது கல்விமுறையின் குறைபாடுகள், தேர்வுகளை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு புறக்கணிக்கப்படும் திறமைமிகு மாணவர்களின் அவலநிலை, இவ்வளவு அறிவுவளம் இருந்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழாத காரணம் என தன்இரண்டாவது படத்தின் களத்தையும் கதையையும் சமூகம் சார்ந்து சிந்தித்த மித்ரனுக்கு வாழ்த்துகள். அந்த சிந்தனை ஒரு திரைப்படமாக, சுவாரசியமாக ரசிக்கத்தக்கதாக இருக்கிறதா? ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நாயகன் அந்த சூப்பர் ஹீரோ நிலையை அடைவதற்கான தேவை, காரணம், சாத்தியம் ஆகியவை முக்கியம். அந்த வகையில் முதல் பாதி முழுவதையும் ஹீரோ உருவாவதை விளக்க எடுத்துக்கொண்ட படம், தேவையில்லாத காதல், காமெடி காட்சிகளில் உழல்கிறது. படத்தில் பேசப்படும் பிரச்சனையான கல்வி வியாபாரம், உயர்கல்வி வாய்ப்பு ஆகியவற்றில் இயக்குனரின் (அ) படத்தின் நிலைப்பாடு என்ன என்ற குழப்பம் முதல் பாதியில் நமக்கு நேர்கிறது. சில இடங்களில் 'மருத்துவ, பொறியியல் படிப்புகளில் சேரதேவையான மதிப்பெண்கள் இல்லாததால்பணம் கட்டிப் படிக்கும் பணக்காரமாணவர்கள் பாவம், அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்' என்று மெசேஜ் சொல்ல வருகிறார்களோ என்ற பயம் வருமளவுக்கு காட்சிகள், வசனங்கள் இருக்கின்றன. பின்னர், மெல்லத் தெளிவாகும் திரைக்கதை, நாயகன் சூப்பர் ஹீரோவாகி தொடர்கிறது. சூப்பர் ஹீரோ சிவகார்த்திகேயன் புரியும் ஒரு சண்டைக் காட்சி சிறப்பு. மற்றபடி,சூப்பர் ஹீரோவாகி என்ன என்ன சாதிக்கவேண்டும் என்பதிலும் தெளிவில்லாதது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது படம்.

abhay deol

ஹீரோ ஒருபுறம் என்றால், வில்லனாக நடித்திருக்கும் அபய் தியோல், ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவன அதிபராக வருகிறார். எங்கு புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலும் அங்கு அவர் இருக்கிறார், அழிக்கிறார். இதற்கான தேவை என்ன? ஒரு கல்வி நிறுவன அதிபருக்கு இந்த நோக்கம் ஏன், இதனால் வரும் லாபம் என்ன என்று நூறு கேள்விகள் தோன்றுகின்றன. ஒரு கட்டத்தில் இந்தவில்லனுக்கு வேறு வேலையில்லையா என்று தோன்றுகிறது நமக்கு. இப்படி, நிஜத்திலிருந்து பல வகைகளில் வேறுபடும் திரைக்கதை படத்திலிருந்து நம்மை பிரித்தே வைக்கிறது. 'இதுக்கு ஜென்டில்மேன் போதாது, ஹீரோ வேணும்' என ஆங்காங்கே அர்ஜுனுக்கேற்ற ஜென்டில்மேன் ரெஃபரன்ஸ் சேர்க்கப்பட்டிருப்பது பிற குறைகளால்சரியாகப் பொருந்தவில்லை.

super hero

தொழில்நுட்ப கோணத்தில் படம் மிக நேர்த்தியாக இருக்கிறது.ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் ரூபனின் படத்தொகுப்பும் உயர்தரம். இதற்கு இணையாக யுவனின் பின்னணி இசையும் சேர்ந்து 'சூப்பர் ஹீரோ' காட்சிகளை மெருகேற்றியுள்ளது. பாடல்கள், எந்த விதத்திலும் ஈர்க்காமல் கடந்து செல்கின்றன. பின்னணி இசையில் கவனம் செலுத்திய யுவன் பாடல்களை கைவிட்டுவிட்டார் போல. சிவகார்த்திகேயன், 'கலகல' இளைஞனாகவும் கலக்கும் சூப்பர் ஹீரோவாகவும் தனது பங்கை முழுமையாக வழங்கியிருக்கிறார். கல்விமுறை குறித்தும் வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசும் வசனங்களில் உண்மையான ஆதங்கம் வெளிப்படுகிறது. அர்ஜுன், எத்தனை ஆண்டுகளானாலும் தான் 'ஆக்ஷன் கிங்'தான் என்று சொல்லியிருக்கிறார். ரோபோ ஷங்கர் வெகு சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். அபய் தியோல், என்ன ஏதென்று தெரியாமல் வந்து மாட்டிக்கொண்ட வடஇந்திய வில்லன்கள் லிஸ்ட்டில் சேருகிறார். பரிதவிப்பு மிக்கதந்தைகளாக அழகம்பெருமாளும் இளங்கோ குமரவேலும் பக்குவமான நடிப்பை தந்திருக்கிறார்கள். நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு பலமில்லாத பாத்திரம், ஆனால் அவரது நடிப்பில் குறைகளில்லை. இவானா, தனது நடிப்பால் மனதில் நிற்கிறார், 'அவரது தமிழால்' சற்று தள்ளியே நிற்கிறார்.

பி.எஸ்.மித்ரன், பொன்.பார்த்திபன் உள்பட நான்கு பேர் இணைந்து எழுதியுள்ள 'ஹீரோ' நல்ல கருத்தை சொல்கிறான்.இன்னும் கொஞ்சம் கள ஆய்வு செய்துதெளிவான நிலைப்பாட்டுடனும் அதை பிரதிபலிக்கும் சுவையான, சுவாரஸ்யமான திரைக்கதையுடனும் சொல்லியிருந்தால் இன்னும்சிறப்பாக இருந்திருக்கும்.

arjun actor sivakarthikeyan hero moviereview
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe