Skip to main content

’சூப்பர் ஹீரோ' சிவகார்த்திகேயன் வென்றாரா? ஹீரோ - விமர்சனம் 

Published on 20/12/2019 | Edited on 20/12/2019

தமிழ் திரையுலகில் காலந்தோறும் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் படங்கள் வெளிவருவது வழக்கமே. சமூக சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம், பிறகு கல்வி, விவசாயம் என பல்வேறு தளங்களில் நிகழ வேண்டிய சீர்திருத்தங்களை வலியுறுத்தி பல்வேறு படங்கள் வந்துள்ளன. சமீபமாக, விவசாயம், கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றை சார்ந்த சீர்திருத்த படங்கள் அதிகமாக வருகின்றன. 'இரும்புத்திரை'யில் இணைய குற்றங்கள் குறித்து மிக சுவாரஸ்யமாக கதையமைத்து கவனமீர்த்த மித்ரன், தனது 'ஹீரோ' சிவகார்த்திகேயன் மூலம் இந்திய கல்வி முறையில் நிகழ வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துப் பேசியிருக்கிறார். கருத்தாகவும் சினிமாவாகவும் எப்படியிருக்கிறது 'ஹீரோ'?

 

sivakarthikeyan



சின்ன வயசுல ஒரு ஸ்டூடண்ட் கிட்ட, 'நீ என்னவாகப் போற?'ன்னு கேட்டா 'டாக்டர் ஆகி உயிரை காப்பாத்துவேன், போலீஸாகி ஊர காப்பாத்துவேன், மிலிட்டரில போயி நாட்டை காப்பாத்துவேன்'னு சூப்பர் ஹீரோ மாதிரி பேசுவாங்க. ஆனா, படிச்சு முடிச்சதும் அதெல்லாம் மறந்துருவாங்க. அதுக்குக் காரணம் நம்ம கல்வி முறைதான்... - 'ஹீரோ' படத்தின் இரண்டு ஹீரோக்களாலும் இரண்டு முறை சொல்லப்படும் இந்த வசனம்தான் படத்தின் மையக்கருத்து. அந்தக் கல்விமுறையில் என்ன மாற்றங்கள் வரவேண்டும், எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், கல்வி வியாபாரம் தடுக்கப்பட வேண்டும்  என்பதையெல்லாம் மிக விரிவாகவே பேசியிருக்கிறது 'ஹீரோ'. விரிவு சரி, ஆழம் இருக்கிறதா? 'சக்திமான்' ரசிகரான சிவகார்த்திகேயனுக்கு சிறு வயதிலேயே சூப்பர் ஹீரோ ஆகவேண்டுமென்பது ஆசை. நன்றாகப் படிக்கும் மாணவரான அவர், சந்தர்ப்ப சூழ்நிலையால் போலி சான்றிதழ் தயாரித்து விற்கும் வேலை செய்கிறார். கல்லூரிகளில் கமிஷன் வாங்கிக்கொண்டு மாணவர்களை சேர்த்துவிடும் வேலையும் செய்கிறார். இன்னொரு புறம், 'ஃபெயிலியர்கள்' என்று ஒதுக்கப்படும் மாணவர்களை சேர்த்து அவர்களுக்குப் பிடித்த, ஆர்வமுள்ள பாடத்தை, விஞ்ஞானத்தை கற்றுத்தந்து அவர்களை புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தச் செய்கிறார் அர்ஜுன். சிவகார்த்திகேயன், அர்ஜுனிடம் வந்து சேர்ந்தது எப்படி, சாதாரண மனிதன் சூப்பர் ஹீரோவானது எதற்கு, அதனால் சாதித்தது என்ன என்பதுதான் 'ஹீரோ'.

 

arjun



நமது கல்விமுறையின் குறைபாடுகள், தேர்வுகளை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு புறக்கணிக்கப்படும் திறமைமிகு மாணவர்களின் அவலநிலை, இவ்வளவு அறிவுவளம் இருந்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழாத காரணம் என தன்  இரண்டாவது படத்தின் களத்தையும் கதையையும் சமூகம் சார்ந்து சிந்தித்த மித்ரனுக்கு வாழ்த்துகள். அந்த சிந்தனை ஒரு திரைப்படமாக, சுவாரசியமாக ரசிக்கத்தக்கதாக இருக்கிறதா? ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நாயகன் அந்த சூப்பர் ஹீரோ நிலையை அடைவதற்கான தேவை, காரணம், சாத்தியம் ஆகியவை முக்கியம். அந்த வகையில் முதல் பாதி முழுவதையும் ஹீரோ உருவாவதை விளக்க எடுத்துக்கொண்ட படம், தேவையில்லாத காதல், காமெடி காட்சிகளில் உழல்கிறது. படத்தில் பேசப்படும் பிரச்சனையான கல்வி வியாபாரம், உயர்கல்வி வாய்ப்பு ஆகியவற்றில் இயக்குனரின் (அ) படத்தின் நிலைப்பாடு என்ன என்ற குழப்பம் முதல் பாதியில் நமக்கு நேர்கிறது. சில இடங்களில் 'மருத்துவ, பொறியியல் படிப்புகளில் சேர தேவையான மதிப்பெண்கள் இல்லாததால் பணம் கட்டிப் படிக்கும் பணக்கார மாணவர்கள் பாவம், அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்' என்று மெசேஜ் சொல்ல வருகிறார்களோ என்ற பயம் வருமளவுக்கு காட்சிகள், வசனங்கள் இருக்கின்றன. பின்னர், மெல்லத் தெளிவாகும் திரைக்கதை, நாயகன் சூப்பர் ஹீரோவாகி தொடர்கிறது. சூப்பர் ஹீரோ சிவகார்த்திகேயன் புரியும் ஒரு சண்டைக் காட்சி சிறப்பு. மற்றபடி, சூப்பர் ஹீரோவாகி என்ன என்ன சாதிக்கவேண்டும் என்பதிலும் தெளிவில்லாதது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது படம்.

 

abhay deol



ஹீரோ ஒருபுறம் என்றால், வில்லனாக நடித்திருக்கும் அபய் தியோல், ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவன அதிபராக வருகிறார். எங்கு புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாலும் அங்கு அவர் இருக்கிறார், அழிக்கிறார். இதற்கான தேவை என்ன? ஒரு கல்வி நிறுவன அதிபருக்கு இந்த நோக்கம் ஏன், இதனால் வரும் லாபம் என்ன என்று நூறு கேள்விகள் தோன்றுகின்றன. ஒரு கட்டத்தில் இந்த  வில்லனுக்கு வேறு வேலையில்லையா என்று தோன்றுகிறது நமக்கு. இப்படி, நிஜத்திலிருந்து பல வகைகளில் வேறுபடும் திரைக்கதை படத்திலிருந்து நம்மை பிரித்தே வைக்கிறது. 'இதுக்கு ஜென்டில்மேன் போதாது, ஹீரோ வேணும்' என ஆங்காங்கே அர்ஜுனுக்கேற்ற ஜென்டில்மேன் ரெஃபரன்ஸ் சேர்க்கப்பட்டிருப்பது பிற குறைகளால் சரியாகப் பொருந்தவில்லை.

 

super hero



தொழில்நுட்ப கோணத்தில் படம் மிக நேர்த்தியாக இருக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் ரூபனின் படத்தொகுப்பும் உயர்தரம். இதற்கு இணையாக யுவனின் பின்னணி இசையும் சேர்ந்து 'சூப்பர் ஹீரோ' காட்சிகளை மெருகேற்றியுள்ளது. பாடல்கள், எந்த விதத்திலும் ஈர்க்காமல் கடந்து செல்கின்றன. பின்னணி இசையில் கவனம் செலுத்திய யுவன் பாடல்களை கைவிட்டுவிட்டார் போல. சிவகார்த்திகேயன், 'கலகல' இளைஞனாகவும் கலக்கும் சூப்பர் ஹீரோவாகவும் தனது பங்கை முழுமையாக வழங்கியிருக்கிறார். கல்விமுறை குறித்தும் வாய்ப்புகள் குறித்தும் அவர் பேசும் வசனங்களில் உண்மையான ஆதங்கம் வெளிப்படுகிறது. அர்ஜுன், எத்தனை ஆண்டுகளானாலும் தான் 'ஆக்ஷன் கிங்'தான் என்று சொல்லியிருக்கிறார். ரோபோ ஷங்கர் வெகு சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். அபய் தியோல், என்ன ஏதென்று தெரியாமல் வந்து மாட்டிக்கொண்ட வடஇந்திய வில்லன்கள் லிஸ்ட்டில் சேருகிறார். பரிதவிப்பு மிக்க தந்தைகளாக அழகம்பெருமாளும் இளங்கோ குமரவேலும் பக்குவமான நடிப்பை தந்திருக்கிறார்கள். நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு பலமில்லாத பாத்திரம், ஆனால் அவரது நடிப்பில் குறைகளில்லை. இவானா, தனது நடிப்பால் மனதில் நிற்கிறார், 'அவரது தமிழால்' சற்று தள்ளியே நிற்கிறார்.

பி.எஸ்.மித்ரன், பொன்.பார்த்திபன் உள்பட நான்கு பேர் இணைந்து எழுதியுள்ள 'ஹீரோ' நல்ல கருத்தை சொல்கிறான். இன்னும் கொஞ்சம் கள ஆய்வு செய்து தெளிவான நிலைப்பாட்டுடனும் அதை பிரதிபலிக்கும் சுவையான, சுவாரஸ்யமான திரைக்கதையுடனும் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.         


                                          

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.