அமரன் திரைப்படத்திற்கு பிறகு ஆக்சன் ஹீரோவாக வெற்றி கண்ட சிவகார்த்திகேயன் சமீபத்தில் விஜயிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றி இருந்தார். அதன் பிறகு சமீப காலங்களாக தோல்வி படங்களை கொடுத்து பின்னடைவில் இருக்கும் ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி அமைத்து முழுநீள ஆக்ஷன் கதை களத்தில் மீண்டும் வெற்றிப்படம் கொடுக்கும் முனைப்பில் இறங்கியிருக்கிறார். இருவரது காம்பினேஷனில் உருவாகி இருக்கும் மதராஸி திரைப்படம் முருகதாஸுக்கு கம்பேக்காகவும், சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஒரு வெற்றி மகுடமாக அமைந்ததா, இல்லையா?

Advertisment

வடக்கில் இருந்து பல்வேறு கண்டெய்னர்கள் மூலம் தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை உண்டாக்க பல ரக துப்பாக்கிகளை ஆந்திரா வழியாக சென்னைக்கு எடுத்து வருகிறார் வில்லன் வித்யூத் ஜமால். அதை தடுக்க நினைக்கும் பிஜுமேனன், விக்ராந்த் உள்ளிட்ட என் ஐ ஏ அதிகாரிகளை மீறி, வித்யூத் சென்னைக்குள் கொண்டு சென்று மறைத்து விடுகிறார். அதை எப்படியாவது கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் போலீஸ் பி ஜி மேனன், தற்கொலை எண்ணத்துடன் இருக்கும் மனநோயாளியான சிவகார்த்திகேயனை வைத்து கண்டெய்னரை கண்டுபிடித்து அழிக்கும் ஆபரேஷனை அரங்கேற்றுகிறார். அதில் சிவகார்த்திகேயனின் காதலியான ருக்மிணி வசந்த் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாட்டிக் கொள்கிறார். இதைத்தொடர்ந்து வில்லன்களிடம் மாட்டிக் கொண்ட ருக்மணியை காப்பாற்றி கண்டெய்னரையும் அழித்து வில்லன்களையும் துவம்சம் செய்ய புறப்படும் மனநோயாளியான சிவகார்த்திகேயன் தான் எடுத்த முயற்சியில் வெற்றி கண்டாரா, இல்லையா? என்பதை இப்படத்தின் மீதி கதை.

396

பல்வேறு தோல்வி படங்களை கொடுத்து மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் முருகதாஸ் இந்த முறை வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சிவகார்த்திகேயனோடு கூட்டணி அமைத்து உருவாக்கி இருக்கும் இந்த மதராஸி படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்து தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். முந்தைய படத்துக்கும் இந்த படத்துக்கும் அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு கதையை உருவாக்கி இருக்கும் ஏ ஆர் முருகதாஸ் இந்த முறை மிகவும் கவனமாக திரைக்கதை அமைத்து அதே சமயம் இந்த கால ட்ரெண்டுக்கு ஏற்ப ஆக்ஷன் காட்சிகளையும் சிறப்பாக உருவாக்கி அதற்கேற்றார் போல் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து அதன் உள் காதல் காட்சிகளையும் அழகாக புகுத்தி அதையே அடிநாதமாக படத்திற்கு கொடுத்து முழு நீள ஒரு தரமான ஆக்ஷன் படத்தை கொடுத்திருக்கிறார். 

Advertisment

வழக்கமான கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும் ஆரம்பத்தில் சற்றே மெதுவாக நகர்ந்து போகப்போக வேகம் எடுத்து பின் ஜெட் வேகத்தில் பயணித்து இண்டர்வலில் சூடு பிடித்து பின் விவேகமாக மறுபடியும் பயணிக்கிறது. இறுதியில் பரபரப்பான காட்சி அமைப்புகளும் ஆக்ஷன் காட்சிகளும் நிறைவான ஆக்ஷன் படம் பார்த்த உணர்வை கொடுக்கிறது. படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஆங்காங்கே பல்வேறு லாஜிக் மீறல்கள் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல் கதை போகிற போக்கும் அடுத்தடுத்து நடக்கப் போகும் காட்சி அமைப்புகளும் யூகிக்கும்படியாகவும் இருக்கிறது. பல இடங்களில் க்ளிஷேவான காட்சிகள் இருக்கிறது, இருந்தும் கதை மாந்தர்களின் ஈடுபாடான நடிப்பும், அவர்களின் உழைப்பும் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என சிறப்பான முறையில் ரசிக்கும்படியாக அமைந்து படத்தை காப்பாற்றி இருக்கிறது. 

394

நடிகர் சிவகார்த்திகேயன் படத்துக்கு படம் தன் நடிப்பை மெருகேற்றி வருகிறார். அமரன் படத்திற்கு பிறகு தன் உடல் அமைப்பையும் கட்டுக்கோப்பாக மாற்றி அசர வைத்த அவர் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். அதேசமயம் மன நோயாளியாக மிகவும் இன்னசென்டான ஒரு நபராக நடித்திருக்கும் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறி பார்ப்பவர்களுக்கு அனுதாபத்தை கொடுத்திருக்கிறார். அதே வேளையில் ஆக்ஷன் காட்சிகளிலும் அதகலப்படுத்தி ரசிகர்களுக்கும் விருந்து அளித்திருக்கிறார். நாயகி ருக்மிணி வசந்த் தனக்கு கொடுத்த ஸ்பேசில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அழகாக இருக்கிறார் அளவாக நடித்திருக்கிறார் தேவையான இடங்களில் தேவையான அளவு வசனம் பேசி கவர்ந்திருக்கிறார். அவருக்கு என்ன வருமோ அதை சிறப்பாகவே செய்து இருக்கிறார்.

Advertisment

படத்தின் இன்னொரு நாயகனாக போலீஸ் பிஜு மேனன் நடிப்பு மிளிர்கிறது. இவர் தன் அனுபவம் நிறைந்த நடிப்பின் மூலம் காட்சிகளுக்கு காட்சி சிறப்பான முறையில் தன் நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வலு சேர்த்து இருக்கிறார். சின்ன சின்ன முகபாவனைகள் மற்றும் வசன உச்சரிப்புகள் மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் நடிகர் விக்ராந்த் மனதில் பதிகிறார். வில்லன் வித்யூத் ஜமால், படம் ஆரம்பத்தில் ஒரு அமர்க்களமும், இறுதி கட்டத்தில் ஒரு அதகளமும் செய்து மிரட்டி இருக்கிறார். குறிப்பாக இவருக்கும் சிவகார்த்திகேயனுக்குமான ஆக்ஷன் காட்சிகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சண்டையிட்டு இருக்கின்றனர். வித்யுத்தின் நண்பராக வரும் டான்சிங் ரோஸ், மிரட்டி இருக்கிறார். கொடூரமான வில்லனாக வரும் அவர் தனக்கு கொடுத்த வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி தலைவாசல் விஜய் உட்பட பல முக்கிய வேடத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கின்றனர். 

393

இந்த படத்திற்கு அனிருத்தா இசையமைத்திருக்கிறார் என்று கேட்கும் அளவிற்கு பாடல்கள் சுமார் ரகம். ஆனால் பின்னணி இசையில் ஓரளவு இழுத்து பிடித்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்தெந்த காட்சிகளுக்கு எந்த மாதிரியான இசை வேண்டுமோ அதை சிறப்பான முறையில் கொடுத்து படத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். இருந்தும் இன்னமும் சிறப்பான முறையில் இசையை கொடுத்திருக்கலாம். சுதீப் ஒளிப்பதிவில் காட்சிகள் ஹாலிவுட் தரம். குறிப்பாக இரவு நேர காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் மற்றும் அதை ஒட்டிய ஆக்ஷன் காட்சிகள் மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு படத்தையும் கேமரா கோணத்தில் உலகத்தரம் வாய்ந்த படமாக மாற்றி இருக்கிறது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பான முறையில் கோரியோகிராப் செய்யப்பட்டுள்ளன. அதுவே படத்திற்கு மிகப்பெரிய பலமாக மாறி இருக்கிறது. ஸ்டண்ட் இயக்குநர்களுக்கு பாராட்டுக்கள்.

முந்தைய முருகதாஸ் வெற்றி படங்கள் போல் இந்த மதராஸி திரைப்படம் இல்லாமல் இருந்தாலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்பவர்களுக்கு நிச்சயமாக ஏமாற்றம் அளிக்காமல் நல்ல ஆக்ஷன் படம் பார்த்த உணர்வை இந்த மதராஸி கொடுத்திருக்கிறார்.

மதராஸி - ப்ளாஸ்ட்!