ராணுவங்கள், நாடுகளுக்குள் நடக்கும் போர், போரால் நடக்கும் அழிவு, ராணுவங்கள் நடத்தும் அத்துமீறல்கள், ராணுவங்கள் தேவையா, ராணுவங்கள் வழியாக ஊட்டப்படும் தீவிர தேசப்பற்று சரியா... இப்படி பல்வேறு வகையான கேள்விகள் விவாதிக்கப்படக் கூடிய ஒன்று. இதையும் தாண்டி இன்றுள்ள சர்வதேச அரசியல் சூழலில் பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு ராணுவங்கள் மிக முக்கியமான பாதுகாப்பாக இருக்கின்றன. ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும் தங்கள் பணியில் மாற்றமில்லாமல் தொடரும் ராணுவ வீரர்களின் தியாகம் எந்த வகையிலும் நிராகரித்துவிட முடியாதது. அப்படி, தனது உயிரை இந்திய ராணுவ பணியில் தியாகம் செய்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை சொல்லும் 'பயோ பிக்' தான் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள 'அமரன்'. கமல்ஹாசன், சோனி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
பள்ளி வயதிலிருந்தே ஒரு ராணுவ வீரராக வேண்டும் என்பதே முகுந்தின் கனவு, லட்சியம் எல்லாம். அந்தக் குறிக்கோளை நோக்கியே பயணம் செய்யும் அவரை புரிந்துகொண்டு அவருடன் வாழத் தயாராகும் காதலி, கல்லூரி ஜுனியர் இந்து ரெபேக்கா வர்கீஸ். எதிர்ப்புகள் இருந்தாலும் இருவரின் உறுதியும் நாகரிகமும், பெற்றோரிடம் அனுமதி பெற்றுத்தருகிறது. குடும்ப வாழ்க்கையிலும் ராணுவ வாழ்க்கையிலும் தான் விரும்பிய இடத்தை அடைந்த முகுந்த், இந்தியாவின் மிக முக்கிய படைக்குழுவான 'ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ்' குழுவின் கமாண்டராக பொறுப்பேற்கிறார். உற்சாகத்தோடும் தலைமை பண்போடும் செயல்பட்டு வரும் முகுந்த்திற்கு காஷ்மீரில் வரும் சவாலான பணி, அதில் அவர் சாதித்தது, இறுதியில் வீரமரணம் அடைந்தது என அவரது வரலாறுதான் 'அமரன்'.
படத்தின் சிறப்பு ராணுவ வாழ்க்கையை சொல்லும் 'வார் மூவி'யாக மட்டுமில்லாமல் ராணுவத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை, போர் - சண்டைக்கான அரசியல் காரணம், ராணுவ வீரர்களின் குடும்பம், ராணுவத்துக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் என பல விஷயங்களை தொட்டுச் செல்வதுதான். இவற்றை தொட்டுச் செல்லும் படம், முகுந்த் - இந்துவின் காதலையும் இந்துவின் உறுதியையும் ஆழமாக சொல்லியிருக்கிறது. படத்தின் நடிகர்கள் அனைவருமே தேவையான நடிப்பை குறையில்லாமல் கொடுத்திருந்தாலும் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இருவரும் அனைவரையும் மிஞ்சி ஈர்க்கிறார்கள். சிவகார்த்திகேயன், தனது ஆரம்ப திரைப்படங்களில் இருந்து பயணித்து வந்திருக்கும் தூரமும் உயரமும் அதிகம். கதை தேர்வாகவும், நடிப்பாகவும் அமரன் அவருக்கு ஒரு மைல் கல். சாய் பல்லவி, இந்துவாகவே நம் மனதில் பதிகிறார். ஜி.வி.பிரகாஷின் இசை, காதலை அழகாகவும், பிரிவை ஆழமாகவும், வீரத்தை அழுத்தமாகவும் நமக்குக் கடத்துகிறது.
காஷ்மீரின் நிலப்பரப்புக்குள் நம்மை உலவவிடும் சாயின் ஒளிப்பதிவு, குறைந்த வெளிச்சத்தில் அதிரடியான வேகத்தில் சண்டைக் காட்சிகளை பதிவு செய்து விறுவிறுப்பை கூட்டுகிறது. கலைவாணனின் படத்தொகுப்பு ராணுவ நடவடிக்கை காட்சிகளை நல்ல அனுபவமாக்குகிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எடுத்துக்கொண்டு இருப்பது தமிழில் நாம் அடிக்கடி காணாத களம். அதிலும் உண்மையாக வாழ்ந்து மறைந்த ஒரு வீரரின் கதை. இந்த இரண்டிலுமிருந்து ஒரு நேர்த்தியான, அழுத்தமான, அதே நேரம் சுவாரசியமான திரைப்படத்தை எழுதிப் படைத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
அமரன் - மரணத்தை வென்ற மாவீரன்