பல வருடங்களுக்குப் பிறகு சரத்குமார் தேவயானி கூட்டணியில் சித்தார்த்தும் இணைந்து ஒரு படம் உருவாகி வெளியாகிறது என்றதுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது. சமீப காலங்களாக இந்த மாதிரியான குடும்ப படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்தப் படத்திற்கும் அதே போன்ற ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட அந்த எதிர்பார்ப்பை இந்த ‘3 பிஹெச்கே’(3 BHK) நிறைவேற்றியதா, இல்லையா?
சரத்குமார் தேவயானி தம்பதியருக்கு சித்தார்த் மற்றும் மீத்தா ரகுநாத் ஆகியோர் மகன் மகள்களாக இருக்கின்றனர். மிகவும் மிடில் கிளாஸ் குடும்பமான இவர்கள் வாடகை வீட்டிலேயே வசிப்பதால் எப்படியாவது ஒரு 3 பிஹெச்கே சொந்த வீடு வாங்க வேண்டும் என முயற்சி செய்கின்றனர். இதற்காக சரத்குமார் கொஞ்சம் கொஞ்சமாக குருவி சேர்த்தார் போல் பணம் சேகரிக்கிறார். இதற்கிடையே மகன் படிப்பு செலவு, தங்கை திருமணம், சரத்குமார் உடல் நல பாதிப்பு என இவர்கள் என்னதான் விழுந்து விழுந்து பணம் சேர்த்தாலும் அவை ஏதோ ஒரு வகையில் கரைந்து விடுகிறது. இதனால் வீடு வாங்கும் கனவு அப்படியே அந்தரத்தில் தொங்க சரத்குமாரும் தேவயானியும் வயது ஆவதற்குள் சொந்த வீடு கட்டி குடி பெயர்ந்தனரா, இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதி கதை.
எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஒரு நடுத்தர குடும்பத்தாரின் கஷ்ட நஷ்டங்களையும், தன் கை கால்களை ஊன்றி எப்படி அவர்கள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றனர் என்பதையும், அதில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, அதை அவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்ற இந்த கால நிதர்சனமான உண்மையை அப்படியே வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகையில் கனெக்ட் செய்யும்படியான அழுத்தமான நெகிழ்ச்சியான ஒரு படத்தை கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வாடகை வீட்டில் வசிக்கும் பொழுது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், ஹவுஸ் ஓனர் தொல்லை, அடிக்கடி வீடு மாற்றும் அவலம், அதனால் அவர்கள் பட்ஜெட்டில் விழும் அடி என அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அப்படியே எதார்த்தமான முறையில் கண்முன் காட்டி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். அதற்கு முத்தாய்ப்பாக சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ஆகியோர் சிறப்பான முறையில் நடித்து படத்தையும் கரை சேர்த்திருக்கின்றனர்.
முதல் பாதி முழுவதும் நடுத்தர குடும்பம் சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சனை மற்றும் அதனால் அடிபடும் படிப்பு, குடும்ப செலவுகள் என அடிப்படை விஷயங்கள் மூலம் அழகாக நகர்ந்து இரண்டாம் பாதியில் ஐடி கம்பெனி வேலை, பெண் அடிமைத்தனம், பெற்றோர்களின் உடல்நலத்தால் ஏற்படும் மன அழுத்தங்கள் என அழுத்தமான காட்சிகளால் நகர்ந்து இறுதி கட்டத்தில் நிறைவான ஒரு குடும்ப படமாக இப்படம் அமைந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் அனைவரையும் கண்கலங்க வைத்து கைத்தட்டல் பெற்றிருக்கிறது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சென்டிமென்ட் நிறைந்த காட்சிகளாக நகர்ந்து பார்ப்பவர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் தன் வாழ்க்கையில் கனெக்ட் செய்யும்படியாக அமைந்திருக்கிறது. இது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரைசேர்த்து இருக்கிறது.
சூரியவம்சம் படத்தில் வரும் சரத்குமார், தேவயானியை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்கநர் ஸ்ரீ கணேஷ். மிகவும் சத்து இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர்கள் அமைதியாக அழகான குடும்பமாக அப்படியே கண்முன் தெரிகின்றனர். அதற்கேற்றார் போல் இவர்களின் அடக்கி வாசித்திருக்கும் நடிப்பும் சிறப்பாக அமைந்து காட்சிகளை அழுத்தமான காட்சிகளாக மாற்றி இருக்கிறது. பெரும்பாலான தந்தைகளை தாயையும் அப்படியே இவர்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றனர். நம் அம்மா அப்பா படும் கஷ்டத்தை எப்படி அருகில் இருந்து பார்ப்போமோ அப்படி இருக்கிறது இந்த திரைப்படம். இவர்களின் மகனாக வரும் சித்தார்த் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சுமாராக படிக்கும் மாணவனை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். தான் முயற்சி செய்யும் ஒவ்வொரு விஷயமும் தோல்வியே அடையும் பொழுது ஒருவன் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து எப்படி அதிலிருந்து மீண்டு வெற்றி பாதையை நோக்கி நகருகிறான் என்பதை தன் நடிப்பின் மூலம் சிறப்பாக பார்ப்பவர்களுக்குள் கடத்தி இருக்கிறார். சித்தா படத்திற்கு பின் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது.
தங்கை மீதா ரகுநாத் குட் நைட் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நன்றாக படிக்கும் பெண்மணியின் குணாதிசயங்களை அழகாக தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி கைதட்டல் பெற்று இருக்கிறார். படத்தின் நாயகி சைத்ரா மிக அழகாக இருக்கிறார். குறிப்பாக அவரது மச்சம் அழகு. நடிப்பு அதைவிட மிக மிக அழகு. இவருக்கும் சித்தார்த்துக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருக்கிறது. சில காட்சிகளே வந்தாலும் யோகி பாபு இந்த முறை சிரிக்க வைக்க தவறவில்லை. மற்றபடி படத்தில் நடித்திருக்கும் இன்ன பிற இதர நடிகர்கள் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர்.
அம்ரித் ராம்நாத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டேனீஸ் லாஸ் ஒளிப்பதிவில் நடுத்தர குடும்பத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றனர். இவர்களின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ்.
படம் பார்ப்பதற்கு பழைய தவமாய் தவமிருந்து படத்தை பல இடங்களில் ஞாபகப்படுத்தி இருந்தாலும் வாடகை வீடு அதனுள் நடக்கும் குடும்ப பிரச்சினைகள், பொருளாதார தடங்கல்கள் அதைத் தாண்டி சொந்த வீடு வாங்கும் முயற்சி என இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற சமூகத்தில் நடக்கும் பிரச்சனையை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருப்பதும், அதேபோல் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் ஏதோ ஒரு வகையில் பார்ப்போர் அனைவருக்கும் தங்கள் வாழ்வில் கனெக்ட் செய்யும்படி இருப்பதும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து அதேசமயம் படம் முடியும் வரை அனைவரின் கண்களையும் குலமாக்கி நிறைவான படமாக இந்த படத்தை கொடுத்திருப்பதும் படத்திற்கு மிகப்பெரிய பிளசாக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. படத்தின் நீளத்தில் இன்னும் கூட கவனமாக இருந்திருக்கலாம்.
‘3 பிஹெச்கே’ - அழகான வீடு