வழக்கறிஞர்களையும், நீதி அரசர்களையும் மையப்படுத்தி பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி அதில் பெரும்பாலானவை ஹிட் அடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. பொதுவாக இந்த மாதிரியான கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம். நீதிமன்றத்திற்குள் நடக்கும் அனல் பறக்கும் விவாதங்கள், அதற்கு கொடுக்கப்படும் பரபரப்பான புரட்சிகரமான தீர்ப்புகள் என எப்பொழுதுமே இந்த மாதிரியான கதைகளுக்கு ரசிகர்களிடையே நல்ல மவுசு உண்டு. அந்த வரிசையில் இந்த முறை முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவை மையப்படுத்தி ஒரு திரைப்படம் அல்லாத மாறாக ஒரு வெப் சீரிஸ் உருவாகி பிரபல ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழில் முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவை மையப்படுத்தி வெளியாகும் முதல் வெப் சீரிஸாக கருதப்படும் இந்த சட்டமும் நீதியும் வெப் சீரிஸ் திரைப்படங்களுக்கு நிகராக வரவேற்பை பெற்றதா, இல்லையா?

தன் இளம் வயதில் நடந்த சம்பவத்தினால் மனதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வழக்கை புத்திசாலித்தனமாக நுட்பமாக கையாளும் தன்மை இருந்தும் கோர்ட்டுக்கு வெளியே வெறும் நோட்டரி பப்ளிக்காக அமர்ந்து கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் வழக்கறிஞர் சரவணன். கோர்ட்டுக்கு உள்ளே சென்று வாதாடாமல் வெளியே இருந்து கொண்டு வரும் நபர்களுக்கு கேஸ் போடுவதற்கான முன் வேலைகளை செய்து கொண்டு பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சரவணனிடம் உதவியாளராக புதுமுகம் நம்ரிதா வந்து சேருகிறார். சரவணனின் நுட்பமான அறிவைக் கண்டு வியந்த நம்ரிதா அவரிடம் இணைந்து கொண்டு வேலை செய்கிறார்.

இந்த நிலையில் சரவணனை சுற்றி இருப்பவர்களும், அவரின் குடும்ப உறவுகளும் அவரை கையாலாதவர் என எண்ணி அவரை கிண்டல் செய்து மனரீதியாக துன்புறுத்துகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கான ஆளான அவர் தான் யார் என நிரூபிக்க ஒரு பொதுநல வழக்கு தொடர்கிறார். ஒரு நாள் நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருவர் தனக்கு நீதி கிடைக்காத சோகத்தில் அனைவரின் முன்பும் தீக்குளித்து இறந்து விடுகிறார். அவருக்காக அந்த வழக்கை தான் கையில் எடுக்கும் சரவணன் அதை பொதுநல வழக்காக கோர்ட்டில் சமர்ப்பித்து அந்த கேசை கையில் எடுத்து வாதாட ஆரம்பிக்கிறார். இதன் பிறகு அந்த எரிந்து போன நபர் யார்? அவருக்கு நடந்த பிரச்சனை என்ன? அந்தப் பிரச்சனைக்கான தீர்வு சரவணன் பெற்று தந்தாரா, இல்லையா? என்பதே இந்த சட்டமும் நீதியும் வெப்சீரிஸின் மீதி கதை.

தமிழில் முதல்முறையாக முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவை மையப்படுத்தி ஒரு வெப் சீரிசை கொடுத்து அதையும் ஒவ்வொரு எபிசோடுகளையும் ரசிக்கும்படி கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார்கள் இதன் இயக்குனர் குழு சூரிய பிரதாப், பாலாஜி செல்வராஜ் அண்ட் டீம். தமிழ் சினிமாவில் அதிகம் பரீட்சயம் இல்லாத நோட்டரி பப்ளிக் வக்கீல் வாழ்க்கை கதையை மையமாக எடுத்துக்கொண்டு அவர் ஏன் கோர்ட்டுக்குள் செல்லாமல் வெளியே இருந்து கொண்டு இந்த வேலையை செய்கிறார். பிறகு அவருக்கு இருக்கும் நுட்பமான அறிவைக் கொண்டு மீண்டும் கோர்ட்டுக்குள் நுழையும் அவர் ஒரு வழக்கை எந்த அளவு தன் அனுபவம் மூலம் வேகமாகவும் அதே சமயம் விவேகமாகவும் கையாளுகிறார் என்பதை நேர்த்தியாக காட்சிப்படுத்தி அதனுள் கதைகளுக்கு ஏற்ற போல் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து ஒவ்வொரு எபிசோடுகளும் குறுகிய எபிசோடுகளாக சுருக்கி பார்ப்பவர்களுக்கும் பயிற்சி ஏற்படாதவாறு சிறப்பான வெப் சீரிஸ் ஆக இந்த சட்டமும் நீதியும் வெப் சீரிஸ் அமைந்திருக்கிறது. 

Advertisment

படம் ஆரம்பித்தது முதல் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்த்தி இருக்கும் இயக்குனர்கள் குழு அதை சற்றே மிஸ் ஆனாலும் சீரியல் போல் ஆகிவிடும் என தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் கவனமாக காட்சி அமைப்புகளை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தார் போல் அமைத்து இருப்பது புத்திசாலித்தனம். குறிப்பாக வாழ்வில் விரக்தி அடைந்த ஒரு வழக்கறிஞர் எந்த அளவு கவனமுடன் ஒரு வழக்கை கையாள்வார் என்பதை நுட்பமாகவும் அதேசமயம் எளிய மனிதர்களுக்கும் பிடித்தார் போல் எளிமையாக காட்சி அமைப்புகளை உருவாக்கி அதனுள் கதையும் கதாபாத்திரங்களும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களுக்கு ஒரு பீல் குட் படம் பார்த்த உணர்வை இந்த சட்டமும் நீதியும் கொடுத்திருக்கிறது. மிகவும் குறைவான நேரமே ஓடும் இந்த வெப் சீரிஸ் என்பதால் இதை முழு நீள திரைப்படமாகவும்  வெள்ளித்திரையில் கொடுத்திருக்கலாம்.

மிகவும் ஒரு முதிர்ச்சியான கதாபாத்திரத்தை கையில் எடுத்திருக்கும் சித்தப்பு சரவணன் அதை திறன் பட கையாண்டு அதே சமயம் இந்த படத்திற்கு தான் முதன்மையான நடிகர் என்பதையும் உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் ஹீரோ மெட்டீரியலாகவும் ஒருசேர நடித்து நடிப்பில் வேறு ஒரு பரிமாணத்தை கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். மிகவும் அவமானப்பட்டு நொறுங்கிப் போகும் ஒரு வயதான நபர் எப்படி தன் வாழ்வில் மீண்டும் கம்போ கொடுத்து ஜெயிக்கிறார் என்பதை தன் கதாபாத்திரத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இதுவரை நாம் தமிழ் சினிமாவில் பார்த்த சரவணன் அல்லாமல் வேறு ஒரு சரவணன் இந்த படம் மூலம் நாம் காணலாம். அந்த அளவு காட்சிக்கு காட்சி தனது முதிர்ச்சியான அனுபவ நடிப்பின் மூலம் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இந்த தொடரையும் வெற்றி பெற செய்து கைதட்டலும் பெற்று இருக்கிறார்.

படத்தின் நாயகியாக அதேசமயம் சரவணனுக்கு அசிஸ்டெண்டாக மட்டுமே இருக்கும் நடிகை நம்ரிதா பாத்திரம் அறிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இதுவரை மற்ற மொழி படங்களில் மட்டும் நடித்த முதல்முறையாக தமிழில் இந்த சீரிஸ் மூலம் அறிமுகமாக இருக்கிறார். அறிமுகமான முதல் தொடரிலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். குறிப்பாக இவரது ஸ்லாங் அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்தி இருக்கிறது. அது கதாபாத்திரத்திற்கு அழகாகவும் அமைந்திருக்கிறது. முக்கிய பாத்திரத்தில் வரும் விஜயஸ்ரீ, குப்புசாமி, இனியா ராம் உட்பட பல்வேறு புதுமுக நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து இந்த தொடருக்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.

Advertisment

கோகுல கிருஷ்ணன் ஒளிப்பதிவில் கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விப்பின் பாஸ்கர் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. பின்னணி இசையும் காட்சிகளை நன்றாக எலிவேட் செய்திருக்கிறது. 

ஒரு கையாலாத வழக்கறிஞர் என முத்திரை குத்தப்பட்ட நபர் எப்படி தான் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் என்பதை நம்பர் ஒன் வழக்கறிஞர் ரோடு மோதி ஜெய்த்து நிரூபித்து காட்டுகிறார் என்ற ஒற்றை வரி கதையை வைத்துக்கொண்டு அதனுள் நல்ல கதை கருவையும் சேர்த்து சுவாரசியமாக அதே சமயம் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து உருவாகி இருக்கும் இந்த கோர்ட்டு டிராமா சட்டமும் நீதியும் வெப் சீரிஸ் நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்க தவறவில்லை. அதற்கு முத்தாய்ப்பாக இதன் நீலமும் கை கொடுத்திருக்கிறது. 

சட்டமும் நீதியும் - நியாயம் வெல்லும்!