சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் சசிகுமார் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு இலங்கை அகதிகள் சிறையில் இருந்து தப்பித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஃப்ரீடம் படம் தயாராகியுள்ளது. முந்தைய பட வெற்றியை இந்த ஃப்ரீடம் படம் மூலம் சசிகுமார் தக்க வைத்தாரா?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ராமேஸ்வரத்தில் தங்கி இருக்கும் இலங்கை அகதிகளை வேலூர் கோட்டையில் இருக்கும் சிறையில் சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து அடைத்து வைக்கின்றனர். அவர்களை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அடித்து துன்புறுத்துவதை போலீசார் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். 43 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் சசிகுமாரும் ஒருவராக இருக்கிறார். அவரது மனைவி மற்றும் குழந்தை இராமேஸ்வர அகதி முகாமிலேயே தங்கி விடுகின்றனர். சசிகுமாருக்கு நாளுக்கு நாள் போலீசாரால் துயரம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. அவரை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என நாயகி மற்றும் அவரது மனைவி லிஜோமோல் ஜோஸ் எவ்வளவோ போராடியும் முடியவில்லை. இதனால் சிறையில் இருக்கும் சசிகுமார் மற்றும் அவருடன் இருக்கும் கைதிகள் வெளியே தப்பிக்க முடிவு செய்கின்றனர். இதற்காக அவர்கள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் என்ன? அவர்கள் சிறையை விட்டு தப்பித்தார்களா, இல்லையா? சசிகுமாரும் அவரது மனைவி லிஜோமோல் ஜோஸும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதே இப்படத்தின் மீதி கதை?
ஸ்ரீ பெரம்பத்தூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயத்தில் ராமேஸ்வரத்தில் இருந்த இலங்கை அகதிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீசார் வேலூர் கோட்டையில் உள்ள சிறையில் வைத்து அடித்து துன்புறுத்தி வந்தனர். இந்த கொடுஞ்செயல் பல ஆண்டுகள் தொடர்ந்ததை தொடர்ந்து அங்கிருந்த 43 கைதிகள் போலீசுக்கு தெரியாமல் தப்பித்து சென்றனர். அதில் 23 கைதிகள் பிடிபட்டு மீதி இருக்கும் 20 கைதிகள் பல்வேறு நாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு எதார்த்தம் மாறாமல் போலீசாரின் அராஜகங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும்படியான ஒரு திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் சத்ய சிவா.
எந்த ஒரு இடத்திலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் இருப்பதை எந்த அளவு உண்மைக்கு நெருக்கமாக காட்ட முடியுமோ அந்த அளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக காட்டி அதே சமயம் ரசிகர்களை ரசிக்க வைக்கும் நோக்கில் கொஞ்சம் சினிமாத்தனத்தையும் உட்புகுத்தி வெள்ளித் திரைக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து பார்ப்பவர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். படம் ஆரம்பித்து முதல் பாதி பொறுமையாகவும் சோதிக்கும்படியும் அமைந்து இரண்டாம் பாதி வேகமாகவும் விறுவிறுப்புடனும் சென்று இறுதியில் பரபரப்புடன் கூடிய காட்சிகளுடன் முடிகிறது.
பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வரும் அளவிற்கு ஒரு த்ரில்லர் படம் பார்த்த உணர்வை இந்த இரண்டாம் பாதி கொடுத்திருப்பது படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. குறிப்பாக போலீசாரின் அராஜகம், அரசியல், ஒரு அரசாங்கம் நினைத்தால் அகதிகளை எந்த அளவு துன்புறுத்த முடியும் அதேசமயம் உண்மையில் யார் குற்றவாளி, யார் குற்றவாளி இல்லை போன்ற விஷயங்களை இந்த படம் மூலம் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி பார்ப்பவர்களுக்கு உண்மை சம்பவத்தை அப்படியே நடந்தது போல் காட்டி இருக்கிறார் இயக்குநர் சத்ய சிவா. கதையையும் கதாபாத்திரங்களையும் சிறப்பாக தேர்வு செய்த இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கூட கவனம் செலுத்தி இருக்கலாம். படம் ஆரம்பித்து சில காட்சிகள் வேகமாகவும் பல காட்சிகள் மெதுவாகவும் நகர்வது பார்ப்பவர்களுக்கு அயர்ச்சி ஏற்படுகிறது.
சசிகுமார் தன் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்றார்போல் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து கைதட்டல் பெற்று வருகிறார். அந்த வரிசையில் இந்த ஃப்ரீடம் படமும் அவருக்கு முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்து அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று இருக்கிறார். இவரது எதார்த்த நடிப்பு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஜெய் பீம் படத்தில் எந்த மாதிரியான லிஜோமோல் ஜோஸை நாம் பார்த்தோமோ அதேபோன்று ஒரு கதாபாத்திரத்தை இந்த படத்திலும் ஏற்று நடித்து இருக்கிறார். ஆனால் இதில் சில பல மாற்றங்களை நடிப்பின் மூலம் காண்பித்து கவனம் பெற்று இருக்கிறார். இவருக்கும் அழுத்தமான கதாபாத்திரம் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் சுவேத் நாயர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். எரிச்சல் ஊட்டும் படியான இவரது நடிப்பு நன்றாக அமைந்து கைத்தட்டல் பெற்றிருக்கிறது. அந்தக் கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து வில்லத்தனத்தில் மிரட்டி கவனம் பெற்று இருக்கிறார். மற்றபடி முக்கிய பாத்திரத்தில் வரும் ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட், சத்ய மாளவிகா மற்றும் மு.ராமசாமி உட்பட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர்.
ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. பாடல்களை காட்டிலும் இவரது பின்னணி இசை படத்தை வேறு ஒரு தளத்திற்கு எலிவேட் செய்திருக்கிறது. எந்தெந்த காட்சிகளுக்கு எந்தளவு இசை தேவையோ அதை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். என்.எஸ் உதயகுமார் ஒளிப்பதிவில் சிறை சம்பந்தப்பட்ட காட்சிகளும் கடற்கரை சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கைதிகள் தப்பிக்க முயற்சி செய்யும் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அவர்களும் மனிதர்கள் தான். நம்மில் ஒருவர்கள்தான்... என்று உணர்ச்சிப்பூர்வமாக நம்மை எண்ண வைக்கும் ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதை எதார்த்தமான முறையில் படம் பிடித்து காட்டி இருக்கும் இயக்குநர் சத்திய சிவா திரை கதையில் இன்னும் கூட கவனம் செலுத்தி கொஞ்சம் விறுவிறுப்பாக அமைத்திருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். மற்றபடி சொல்ல வந்த உண்மையான விஷயத்தை சமரசம் இன்றி சொல்லியதற்காகவே இந்த படத்தை காணலாம்.
ஃப்ரீடம் - வெளிப்படை!