தமிழ் சினிமாவில் இதுவரை காதலுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்த காதலர்கள் பற்றிய திரைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. காதலுக்காக உயிரை விட்டது, நாக்கை அறுத்துக் கொண்டது, காதலுக்காக கொலை செய்தது, காதலுக்காக துடிக்கின்ற இதயத்தை கொடுத்தது என வித்தியாசமான காதல் கதைகள் தமிழ் சினிமாவை பல்வேறு ஆண்டுகளாக அலங்கரித்த வண்ணம் இருந்தன. அந்த வகையில் தற்பொழுது வித்தியாசமாக காதலுக்காக ஒரு மிகப்பெரிய விஷயத்தை காதலர்கள் தியாகம் செய்திருக்கின்றனர். அது என்ன?
மிகப்பெரிய பணக்கார வீட்டு பெண்ணான நாயகி சார்மி விஜயலட்சுமி அவர் கல்லூரியில் உடன்படிக்கும் மாணவன் தர்ஷன் பிரியன் இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கின்றனர். இந்த காதலுக்கு நாயகியின் தந்தை புதுப்பேட்டை சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் நாயகனை கொலை செய்யவும் முயற்சிக்கிறார். இதனால் அதிர்ச்சிக்குள்ளாகும் காதலர்கள் எப்படியாவது இவர்களிடம் இருந்து தப்பித்து உயிர்பிழைத்து வாழ வேண்டும் என்று எண்ணத்தோடு வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இருந்தும் நாயகியின் மாமா மனோஜ் எப்படியாவது இவர்களை கண்டுபிடித்துக் கொல்ல வேண்டும் என காதலர்களை துரத்துகிறார். வில்லன்களிடமிருந்து காதலர்கள் தப்பித்து உயிர் வாழ யாரும் எதிர்பாராத விதமாக ஒரு விபரீத முடிவு எடுக்கின்றனர். அதாவது, காதலர்கள் தங்களது காதலுக்காக தங்கள் பாலினத்தையே தியாகம் செய்ய முடிவெடுக்கின்றனர். இதன் பிறகு இவர்கள் தங்கள் பாலினத்தை மாற்றும் முயற்சியில் வெற்றி பெற்று காதலிலும் வெற்றி பெற்றார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் கதைகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் இப்படியான ஒரு வித்தியாசமான அதுவும் காதலுக்காக தன் சரீரத்தையே மாற்றும் அளவுக்கான ஒரு காதல் கதை இதுவரை எந்த சினிமாவிலும் வரவில்லை. அந்த வகையில் ஒரு புதுமையான முயற்சியாக அதுவும் புரட்சிகரமான அதேசமயம் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வித்தியாசமான முடிவை நோக்கி பயணிக்கும்படியான ஒரு படத்தைக் கொடுத்து மூக்கு மேல் விரல் வைக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜிவி பெருமாள்.
இதுவரை எந்த சினிமாவிலும் பார்த்திராத ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்த இயக்குநர் ஏனோ திரைக்கதையை பழைய பாணியிலேயே கொடுத்து சலிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக வழக்கமான பாடல் காட்சிகள், காதல் காட்சிகள், ஏழை பணக்காரர் வித்தியாசம் என நாம் ஏற்கனவே பார்த்து பழகிய விஷயத்தை கையில் எடுத்து இயக்குநர் கதை கருவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திரைக்கதைக்கும் கொடுத்து இருக்கலாம். மற்றபடி இயற்கைக்கு மாறான ஒரு விஷயத்தை நாம் வலிந்து திணித்து விபரீதமான முடிவை எடுப்பது தவறு என்பதையும் வேற்று பாலினத்தவர் வலி வேதனைகளையும் அப்படியே எதார்த்தமாக காண்பித்து கவனம் ஈர்த்திருக்கிறார். இது படத்திற்கு சற்றே பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
படத்தின் நாயகன் தர்ஷன் பிரியன் நாயகி சார்மி விஜயலட்சுமி ஆகியோரின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. நம் பக்கத்து வீட்டில் இருக்கும் நபர்கள் போல் தோற்றமளிக்கும் இவர்கள் அதற்கு ஏற்றார் போல் எதார்த்தமாக நடித்திருக்கின்றனர். வில்லனாக வரும் ஜிவி பெருமாள் வழக்கமான வில்லத்தனம் காட்டியிருக்கிறார். தந்தையாக வரும் புதுப்பேட்டை சுரேஷ் வழக்கமான ஏற்றத்தாழ்வு பார்க்கும் தந்தையாக நடித்து இருக்கிறார். டாக்டராக வரும் சகிலா மற்றும் வக்கீலாக வரும் மிலா ஆகியோர் கவனம் பெற்று இருக்கின்றனர். மற்றபடி உடன் நடித்த திருநங்கைகள் உட்பட அனைவருமே அவரவர் வேலையை செவ்வன செய்து இருக்கின்றன.
டோர்னலா பாஸ்கர் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. பாரதிராஜா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை ஓகே. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குநர் திரை கதையில் இன்னும் கூட கவனமாக இருந்திருக்கலாம். மற்றபடி படத்தின் மையக்கரு இதுவரை யாரும் யோசிக்கப்படாத ஒரு வித்தியாசமான கதையாக இருப்பதும் அதேபோல் சொல்ல வந்த விஷயத்தை தெளிவான முறையில் எது தவறு எது சரி என்பதை சரியான முறையில் கூறியிருப்பதும் படத்தை கரை சேர வைத்திருக்கிறது.
சரீரம் - விபரீதம்!