அருவி, வாழ் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிராமிஸிங்கான இயக்குநராக நம்பப்பட்ட அருண்பிரபு இந்த முறை விஜய் ஆண்டனியுடன் கூட்டு சேர்ந்து சக்தித் திருமகன் மூலம் மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறார். அரசியல் கலந்த விறுவிறுப்பான பிரம்மாண்ட படமாக உருவாகி இருக்கும் இந்த சக்தித் திருமகன் ரசிகர்களை திருப்தி படுத்தியதா, இல்லையா?
தலைமை செயலகத்தில் புரோக்கராக பணி புரியும் விஜய் ஆண்டனி அங்கு இருந்து கொண்டு பல்வேறு அரசியல் புள்ளிகளுக்கு பல்வேறு டீலிங்குகளை முடித்துக் கொடுக்கிறார். இதனால் அங்கு பவர்ஃபுல் மனிதனாக வலம் வரும் அவர், தான் நினைத்ததை தன் ஸ்மார்ட் வொர்க் மூலம் செய்து வருகிறார். இவரைப் போன்றே டெல்லி அரசியலில் பெரிய புரோக்கராக இருக்கும் ‘காதல் ஓவியம்’ பட நாயகன் சுனில் அடுத்ததாக ஜனாதிபதியாக திட்டம் போடுகிறார். இதற்கிடையே விஜய் ஆண்டனி, இவரது குடும்ப விஷயத்தில் தலையிட்டு இருப்பதும், இல்லீகளாக பல ஆயிரம் கோடி சொத்துக்களை சுருட்டி இருப்பதும் சுனிலுக்கு தெரிய வருகிறது. இதையடுத்து விஜய் ஆண்டனிக்கும் சுனிலுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கும் சுனிலுக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன? சுனிலின் ஜனாதிபதி கனவை தகர்க்க நினைக்கும் விஜய் ஆண்டனி முயற்சி நிறைவேறியதா? என்பதே சக்தித் திருமகனின் மீதி கதை.
இதுவரை தமிழ் சினிமாவில் பெரிதும் தொடப்படாத ஜனாதிபதி அரசியலை முன்னிறுத்தி ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். அருவி படம் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இவர் இந்த முறை சக்தித் திருமகன் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்து இருக்கிறார். படம் ஆரம்பித்து முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்து அடுத்தடுத்த காட்சிகள் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு வரவழைத்து ரசிக்க வைத்திருப்பதும் இரண்டாம் பாதியில் கதைக்குள் சென்ற பிறகு ஓரளவு விறுவிறுப்பாக கதை சொல்லி இறுதி கட்டத்தில் மீண்டும் வேகம் கூட்டிய பரபரப்பான கிளைமாக்ஸுடன் முடித்திருப்பதும் ஒரு அதிரடி அரசியல் ஆக்சன் படம் பார்த்த உணர்வை இந்த சக்தித் திருமகன் கொடுத்திருக்கிறார்.
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும் திருப்புமுனைகளும் இரண்டாம் பாதியிலும் அதே அளவு கொடுத்திருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பான படமாக அமைந்திருக்கும். இரண்டாம் பாதியில் தெளிவாக கதைக்குள் செல்லும் திரைப்படம் போகப்போக அழுத்தமான காட்சிகளாலும் பிளாஷ்பேக் சம்பந்தப்பட்ட காட்சிகளாலும் விரிந்து சற்றே விறுவிறுப்பை குறைத்திருக்கிறது. அதனுள் பேசிய பல்வேறு அரசியல் விஷயங்கள் பார்ப்பவர்களுக்கு சில குழப்பம் ஏற்படுத்தும் படியாக இருப்பது படத்திற்கு சற்று மைனஸ். மற்றபடி கதை சொன்ன விதமும் அதை எடுத்த விதமும் படத்திற்கு பிளஸ். குறிப்பாக பரபரப்புடன் விறுவிறுப்பாக எழுதப்பட்ட காட்சி அமைப்புகள் இதற்கு பக்கபலமாக இருக்கிறது.
இந்த கதைக்கு என்ன தேவையோ வழக்கம் போல் அதேபோன்று ஒரு நடிப்பை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி. கதைக்கேற்றார் போல் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பையே படத்துக்கு கொடுத்து பார்ப்பவர்களையும் அப்படியே கடந்து செல்லும் விடும்படி ரசிக்க வைத்திருக்கிறார். படத்தில் அவரது சாணக்கியத்தனமே அதிகமாக தென்படுவது அவர் கதாபாத்திரத்திற்கு வலு கொடுத்திருக்கிறது. படம் ஆரம்பத்தில் இவரது அதிரடி ஆக்சன் நிறைந்த விறுவிறுப்பான காட்சி அமைப்புகள் இறுதி கட்டத்தில் வேறு விதத்தில் வெடிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் கொடுக்கும்படி சாதாரணமாக முடிந்திருக்கிறது. இருந்தும் ஏதோ இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்திருப்பார்களோ என்று ஒரு பக்கம் தோன்றவும் வைத்திருக்கிறிருக்கிறது.
வலதுசாரி அரசியலை மையமாகக் கொண்டு வேலை செய்யும் வில்லன் சுனில், தனது நடை உடை பாவனை மிடுக்கு என நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு படத்தில் வரும் அவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகியாக வரும் திருப்தி ரவீந்தரா தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பொதுவாக அருண் பிரபு படங்களில் வரும் நாயகிகள் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது திருப்தியும் இணைந்து இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் வாகை சந்திரசேகர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்று இருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் இவரது காட்சிகள் தாக்கத்தை கொடுத்திருக்கிறது. முக்கிய வேடத்தில் வரும் செல் முருகன் சிறப்பான நடிப்பின் மூலம் மனதில் பதிகிறார். இவருடன் இணைந்து பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மற்ற இன்ன பிற இதர நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்து படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான முறையில் வேலை வாங்கி இருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு.
விஜய் ஆண்டனி இசையில் வழக்கம்போல் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. அதுவே படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. ஷெல்லியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம். எந்தெந்த காட்சிகளுக்கு எந்த அளவு நேர்த்தி வேண்டுமோ அதை சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்து படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார். அதற்கு முத்தாய்ப்பாக ரேமண்டின் படத்தொகுப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. அதுவே குறிப்பாக இரண்டாம் பாதி படத்தை தாங்கி பிடித்து இருக்கிறது.
ஒரு அரசியல் களத்தில் இப்படி எல்லாமா நடக்கும். அதுவும் இந்த அளவு எக்ஸ்ட்ரீம் சென்று ஒரு நாயகனால் செய்ய முடியுமா? போன்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது. அதில் பல்வேறு லாஜிக் மீறல்கள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தும் ஒரு கமர்சியல் கலந்த அரசியல் அதிரடி படமாக உருவாகி இருக்கும் இந்த சக்தித் திருமகன் ஆரம்ப முதல் இறுதி வரை சில இடங்களில் மட்டும் தொய்வு இருந்தாலும் பல இடங்களில் விறுவிறுப்பான காட்சி அமைப்புகள் மூலம் பரபரப்பாக நகர்வது படத்தையும் காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறது. புதுமையான கதைக்களம், ஜனாதிபதி அரசியல் என இதுவரை கண்டிராத கதையை பேசியிருக்கும் இப்படம் ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்திருக்கிறது.
சக்தித் திருமகன் - மேதாவி!