Skip to main content

காமெடியனா? கதாநாயகனா? யாரிந்த ‘சபா நாயகன்’ - விமர்சனம்!

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
saba nayagan movie review

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனிக்கத்தக்க படங்களாகக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வரும் நாயகன் அசோக் செல்வன். அடுத்ததாக சபாநாயகன் படம் மூலம் இளைஞர்களைக் கவர களத்தில் குதித்துள்ளார். ஆட்டோகிராப், பிரேமம் படப் பாணியில் முப்பருவ காதல்களை உள்ளடக்கிய படமாக வெளியாகி இருக்கும் சபா நாயகன் எந்த அளவு ரசிகர்களை ஈர்த்தான்..?

தனியார்ப் பள்ளி ஒன்றில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவரான  அசோக் செல்வன், உடன் படிக்கும் கார்த்திகாவை சின்சியராக காதலிக்கிறார். எப்படியாவது கார்த்திகாவிடம் தன் காதலை சொல்ல முயற்சி செய்து, செய்து, செய்து, செய்து கடைசியில் பள்ளி முடியும் வரை இதயம் முரளி போல் காதலை சொல்லாமலேயே கடந்து விடுகிறார். இதைத் தொடர்ந்து இன்ஜினியரிங் கல்லூரியில் சேரும் அசோக் செல்வன், அங்கு உடன் படிக்கும் சாந்தினி சௌத்ரியை காதலிக்கிறார். இவர்களது காதலும் ஒன்று சேராமல் பிரிந்து விடுகிறது. இதையடுத்து யூடியூப் புகழ் தீபா மீது காதல் வருகிறது. அந்தக் காதலும் புட்டுக்கொள்ள இறுதியில் வேலை தேடி சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் மீண்டும் பள்ளிப் பருவ காதலியான கார்த்திகாவை சந்திக்கிறார். இந்த முறை இதயம் முரளி போல இல்லாமல் எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று அவர் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே சபா நாயகன் படத்தின் மீதிக் கதை.

வழக்கமாக முதல் படம் எடுக்கும் இயக்குநர்கள் அவர்களுடைய டார்கெட் ஆடியன்ஸாக இளைஞர்களை மையப்படுத்தி படம் எடுப்பார்கள். இது வெற்றி பெறுவதற்கு ஒரு சுலபமான வழியாகப் பார்க்கப்படுகிறது. அறிமுக இயக்குநர் சி.எஸ். கார்த்திகேயனும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அவரும் இதே பார்முலாவை பயன்படுத்தி இந்தப் படத்தைக் கொடுத்து அதன் மூலம் படத்தை கரைச் சேர்த்திருக்கிறார். பள்ளிப் பருவ காதல், கல்லூரி பருவ காதல், அதற்கு பிந்தைய பருவ காதல், வேலைக்குச் செல்லும் பருவ காதல் எனப் பல பருவ காதல்களை அழகாகவும் நேர்த்தியாகவும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தி டீன் ஏஜ் ரசிகர்களிடையே கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஒரு கதையாக பார்க்கும் பொழுது நாம் ஏற்கனவே பார்த்து பழகிய வழக்கமான கதையாக தெரிந்தாலும், அதேபோல் திரைக்கதையும் நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய திரைக்கதை அம்சமாக இருந்தாலும், மொத்த படமாக பார்க்கும்பொழுது அவை ரசிக்கும்படி அமைந்து படத்திற்கு பாஸ் மார்க் வாங்க வைத்துள்ளது. இருந்தும் கல்லூரி மற்றும் அதற்குப் பிந்தைய பருவ காதல் காட்சிகளை ரசிக்கும் அளவிற்கு பள்ளிப் பருவ காதலர்கள் அந்த அளவுக்கு ரசிக்கும்படி அல்லாமல் சற்று அயர்ச்சியைக் கொடுப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

தனது சமீபகால படங்களை மிகச் சரியாகத் தேர்வு செய்து, அதற்கு ஏற்றார்போல் ரசிகர்களுக்கு பிடித்தார்போல் நடித்து ரசிக்க வைத்து வருகிறார் நாயகன் அசோக்செல்வன். அதை இந்தப் படத்திலும் சரிவர செய்து ரசிக்க வைத்துள்ளார். தனக்கு என்ன வருமோ அதை சரியாகப் பிடித்துக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் அமையும் கதைகளை இன்றைய காலத்திற்கு ஏற்ப திரைக்கதைக்கு அடாப்ட் செய்து நிறைவான நடிப்பை நேர்த்தியாகக் கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றிருக்கிறார். வளர்ந்து வரும் நடிகர்களில் இவருக்கு தற்போது வெற்றி முகமே. நாயகியாக மூன்று பேர் நடித்திருக்கின்றனர். பள்ளிப் பருவ காதலி கார்த்திகா, கல்லூரி பருவ காதலில் சாந்தினி சவுத்ரி, அதற்குப் பிந்தைய காதலில் youtube புகழ் தீபா, கடைசிக் கட்ட காதலில் மேகா ஆகாஷ் ஆகியோர் பங்கு பெற்று நடித்திருக்கின்றனர். இவர்கள் அனைவருமே அவரவருக்கான போஷனில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கின்றனர்.

குறிப்பாகப் பள்ளிப் பருவ காதல் கார்த்திகாவும் வேலை தேடும் பருவக் காதல் மேகா ஆகாஷும் போட்டி போட்டுக் கொண்டு நடித்து படத்திற்கு வலுச் சேர்த்திருக்கின்றனர். அந்தப் போட்டியில் கார்த்திகாவின் கை சற்று ஓங்கி இருக்கிறது. அந்த அளவு பக்கத்து வீட்டுப் பெண் போல தோற்றம் கொண்ட பெண்ணாக அழகான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி பல காட்சிகளில் கவர்கிறார். இவரது எளிமையான முகம் அளவான மேக்கப் போன்றவை அவரது கதாபாத்திரத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. போலீசாக நடித்திருக்கும் மைக்கேல் தங்கதுரை, மறைந்த நடிகர் மயில்சாமி, உடுமலை ரவி ஆகியோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து வலுச் சேர்த்திருக்கின்றனர்.

அசோக் செல்வன் அக்காவாக வரும் விவியசந்த் சப்போர்ட்டிங்கான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். முக்கியமாக அசோக் செல்வனின் நண்பராக நடித்திருக்கும் அருண்குமார் மிகச் சிறப்பாக நடித்து கவனம் பெற்றிருக்கிறார். இவரது எதார்த்தமான நடிப்பு படத்திற்கு வலுச் சேர்த்திருக்கிறது. இப்படம் மூலம் அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை சிறப்பு. குறிப்பாக காதல் காட்சிகளுக்கு சிறப்பாக பின்னணி இசை கொடுத்து ரசிக்க வைத்துள்ளார். பாலசுப்பிரமணியம், பிரபு ராகவ், தினேஷ் புருஷோத்தமன் ஆகியோர் ஒளிப்பதிவில் காதல் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பாடல் காட்சிகளைக் காட்டிலும் காதல் காட்சிகளை நன்றாக கையாண்டிருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய ஒரு காதல் கதையாக இப்படம் இருந்தாலும் அவை ரசிக்கும்படி அமைந்து டீன் ஏஜ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்திருக்கிறது சபா நாயகன் திரைப்படம். படம் ஆரம்பித்து பள்ளிப் பருவ காதல் காட்சிகளில் இன்னும் கூட சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கலாம். இருந்தும் அதை சரிக் கட்டும் விதமாக மற்ற காதல்கள் கலகலப்பாகவும் ரசிக்கும்படி அமைந்து படத்தை கரைச் சேர்த்திருக்கிறது.

சபாநாயகன் - கலகலப்பானவன்!

சார்ந்த செய்திகள்