Advertisment

அப்படி என்னதான் பண்ணியிருக்கார் பார்த்திபன்? ஒத்த செருப்பு சைஸ் 7 - விமர்சனம்

திரைத்துறையில் இருப்பவர்களுக்குள்ளேயே திரைப்படங்களை அணுகும் முறை வேறுபடும். ஒரு சிலருக்கு அது பிசினஸ், ஒரு சிலருக்கு அது கலை, ஒரு சிலருக்கு அது பணி. ரசிகர்கள் திரைப்படங்களை அணுகும் விதமும் சிலருக்கு பொழுதுபோக்கு, சிலருக்கு சக்தி வாய்ந்த ஊடகம், சிலருக்கு கலை என ஒருவருக்கொருவர் மாறுபடும். பார்த்திபன், திரைப்படத்தை ஒரு கலையாக, வெற்றி தோல்விகளை பற்றிக்கவலைப்படாமல் அதில் தான் நினைத்தவற்றையெல்லாம் சோதித்துப் பார்க்கும் களமாக, புதுப்புது விஷயங்களை செய்யும் இடமாக நினைத்து இயங்குபவர். அவரை ரசிப்பவர்களும் அந்த வகை ரசிகர்களே. கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் வெற்றிகரமாக ஒரு சோதனை முயற்சியை செய்துஒரு சிறு பின்னடைவுக்குப் பிறகு தற்போது 'ஒத்த செருப்பு' மூலமாக மீண்டும் ஒரு புதுமையான முயற்சியை செய்துள்ளார். அதன் வெற்றி எந்த உயரத்தில் இருக்கிறது?

Advertisment

oththa serupu parthiban

ஆரம்ப காலகட்டத்திலிருந்து தொன்னூறுகள் வரைக்கும் கூட தமிழ்திரைப்படங்களில் பொதுவாக வழக்கமான சில சம்பிரதாய விஷயங்கள் பின்பற்றப்பட்டன. அவற்றை உடைப்பதென்பது அரிதாகவே நிகழும். உதாரணமாக பிரபல நாயகர்கள் நடிக்கும் படங்களில்க்ளைமாக்சில் அவர்கள் மரணமடைவது போன்ற முடிவு, வாய்ஸ் ஓவர் வைத்து கதை சொல்வது, பாடல்கள் இல்லாமல் படம் எடுப்பது போன்ற விஷயங்கள் பெரும் பிழையாகப் பார்க்கப்பட்ட காலம் உண்டு. புதுமை, புதிய முயற்சி போன்றவை கதை அளவிலேயே எடுக்கப்பட்டன. படத்தின் அமைப்பு, சொல்லும் ஃபார்மேட் போன்றவற்றில் அதிக சோதனை முயற்சிகள் நடந்ததில்லை. கமல்ஹாசன் போன்ற வெகு சிலர் மட்டுமே அவ்வப்போது முயன்று வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய வகை திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இத்தகைய முயற்சிகளை தனது ஆரம்ப கட்டத்திலேயே அவ்வப்போது செய்து வந்த பார்த்திபன், இப்போது 'ஒத்த செருப்பு' மூலம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். அவரின் இந்த சிந்தனைக்கும்தேடலுக்கும் ஆர்வத்துக்கும் உழைப்புக்கும் சினிமா மீதான காதலுக்கும் நம் சல்யூட்.

ஒருவரே எழுதி இயக்கி நடித்து தயாரித்திருக்கும் வகையில் இந்தப் படம் உலகின் முதல் முயற்சி, இந்தியாவின் மிக முக்கியமான முயற்சி. இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே நடித்து சில படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், நடிப்பவரே எழுதி இயக்கியிருப்பது இதுவே முதல் முறையாம். இப்படி ஒரு எண்ணத்தை செயலாக்கி சாத்தியப்படுத்தத் தேவையான தொழில்நுட்ப அணியை மிக சிறப்பாக ஃபார்ம் செய்ததிலேயே பார்த்திபனின் பாதி வெற்றி நிகழ்ந்துவிட்டது. ராம்ஜியின் ஒளிப்பதிவு, அந்த ஒற்றை அறைக்குள் அத்தனை நிறங்கள், அத்தனை கோணங்கள், அத்தனை அசைவுகள், அதிர்வுகள் என மிகச் சிறப்பாக விளையாடியுள்ளது. ஒருவர் மட்டுமே நடித்துள்ள இந்தப் படத்தில் பல பாத்திரங்களை நாம் உணர்கிறோம், கற்பனை செய்கிறோம். அதற்கு ராம்ஜியின் ஒளிப்பதிவும் சத்யாவின் பின்னணி இசையும் ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவும் முக்கிய காரணங்கள். ஒரு திரைப்படத்தில்ஒலிப்பதிவின் பங்கு என்ன என்பதை பெரும்பாலும் அறிந்திராத நம்மை 'ஒத்த செருப்பு' அந்த முக்கியத்துவத்தை உணர வைக்கிறது. சத்யா, தனது பின்னணி இசையில் சத்தங்களை குறைத்து, உணர்வுகளை அதிகப்படுத்தியுள்ளார். அதிக இடத்தை ஆக்கிரமிப்பது மட்டுமே சிறந்த பின்னணி இசையல்ல, அமைதியாகவும் படத்தைத்தாங்க முடியுமென காட்டியுள்ளார். தான் மட்டுமே நடித்துள்ள இந்தப் படத்துக்கு பிற பாத்திரங்களின் வசனங்களை அவர்கள் இருப்பது போன்றஉணர்வை தரும் வகையில் எழுதி அதை சரியாக டப்பிங் செய்து பிழையில்லாமல் முழுமையாக உருவாக்கியதே இயக்குனர் பார்த்திபனின் முக்கிய சாதனைதான்.நடிகர் பார்த்திபன், இந்தப் படத்தில் முழுவதுமாக வியாபித்திருக்கிறார்.

Advertisment

parthiban oththa serupu

சரி, இந்த முயற்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கதை என்ன? மாசிலாமணி என்ற மிக சாதாரண மனிதர்... ஒரு கிளப்பில் பாதுகாவலராகப் பணிபுரியும் ஒருவர்... நோய்வாய்ப்பட்ட தன் சிறு மகனை ஒரு கங்காருவைப் போல பொத்தி வைத்து வளர்க்கும் ஒருவர்... திடீரென ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார். அவரிடம் நடக்கும் விசாரணைதான் படம். புதிய முயற்சி என்ற அடையாளம் மட்டுமல்லாமல் சுவாரசியமான கதையையும் கொண்ட படமாக 'ஒத்த செருப்பு' வந்திருக்கிறது. ஒருவராலேயே சொல்லப்பட்டாலும் திருப்பங்களும் முடிச்சுகளும் கதையை சுவாரசியமான திரைக்கதையாக மாற்ற சிறப்பாக உதவியுள்ளன. "நைட் எல்லாம் தூங்காம என்ன பண்ணுவீங்க? - முழிச்சிருப்பேன்" போன்ற பார்த்திபன் ப்ராண்ட் குறும்பு வசனங்களும் "உறவுகள் இப்படி இத்துப் போறத விட அத்துப் போறது நல்லது" போன்ற அர்த்தம் நிறைந்த வசனங்களும் அவ்வப்போது வந்து நம்மை மகிழவும் நெகிழவும் வைக்கின்றன.

சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. படத்தின் அடிப்படை கதை, ஒழுக்கம் பற்றிய வரையறையையும் தொட்டுச் செல்கிறது. அது சற்றே நெருடலாகவும் அணுகப்பட்டிருப்பது, ஆங்காங்கே சிறு தொய்வுகள் இருப்பது என குறைகள் இருக்கின்றன. என்றாலும், திரைமொழியில், திரைப்படங்கள் எனும் ஊடக வடிவத்தில், எடுக்கப்பட்டிருக்கும் இந்த முக்கிய முயற்சி நமக்கு ஒரு புதிய அனுபவமாகவே இருக்கிறது. ஒன்பது வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரியை கொண்டாடியது போல, பத்து வேடங்களில் கமல்ஹாசன் நடித்த தசாவதாரத்தை கொண்டாடியது போல, இன்னும் பல புதிய முயற்சிகளை அங்கீகரித்தது போல பார்த்திபனின் இந்த முயற்சியையும் ரசிகர்கள் அங்கீகரிக்கலாம். அதற்குரிய அம்சங்களை சிறப்பாகக் கொண்டுள்ளது 'ஒத்த செருப்பு சைஸ் 7'.

Oththa Serupu Size 7 parthiban moviereview
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe