Skip to main content

யாரைத் தொட்டார்... யாரை விட்டார்... சேஃப் ஸோனில் ஆர்ஜே.பாலாஜி? - எல்.கே.ஜி விமர்சனம் 

சென்னை வெள்ளத்தின் போதும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போதும், தன்னார்வமாக கலந்துகொண்டு உதவி செய்தும், போராட்டம் செய்தும் பிரபலமான ஆர்ஜே.பாலாஜிக்கு ஆதரவும் விமர்சனங்களும் ஒரு சேர எழுந்தன. தொடர்ந்து பல்வேறு மேடைகளில் சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்திய பாலாஜி, சமூக ஊடக இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். பின் நகைச்சுவை நடிகராக சில படங்கள், இப்போது தன் நண்பர்களுடன் இணைந்து ஒரு படத்தை எழுதி நடித்திருக்கிறார். போஸ்டர்களாலும் நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் என எதிர்பாரா நடிகர்களாலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எல்.கே.ஜி எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருக்கிறதா?

 

rj balaji lkgலால்குடி கருப்பையா காந்தி... சுருக்கமாக எல்.கே.ஜியாக வரும் ஆர்ஜே.பாலாஜி லால்குடியில் வார்டு கவுன்சிலராக இருக்கிறார். உதவாக்கரை அரசியல்வாதியாகிவிட்ட தன் அப்பா நாஞ்சில் சம்பத் போல தான் ஒரு போதும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஆர்ஜே.பாலாஜி எப்படி கவுன்சிலராக இருந்து தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆகிறார் என்பதை கொஞ்சம் நக்கல் நையாண்டி கலந்தும் திடீர் திடீரென சீரியஸாகவும் சொல்லி இந்த நிலைக்கு யார் காரணமென பாலபாடம் சொல்கிறது ஆர்ஜே.பாலாஜி மற்றும் நண்பர்கள் எழுதி பிரபு இயக்கியுள்ள எல்.கே.ஜி.

தற்காலத்து அரசியல் நிகழ்வுகளை ஆட்சி அதிகாரம் செல்லும் இடங்களை, மக்களையும் மீறி கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி தீர்மானிக்கின்றன என்பதை கொஞ்சம் அரசியல் நையாண்டியோடும் கொஞ்சம் சீரியஸாகவும் சொல்லியிருக்கிறார்கள். இன்றைய அரசியலில் சோஷியல் மீடியாவின் பங்கு என்ன என்பதையும், அது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் விளக்கமாகப் படமாக்கியுள்ளனர். பல இடங்களில் சரியாக இருந்தாலும் சில இடங்களில் கொஞ்சம் மிகைப்படுத்திக் காட்டுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக அரசியல்வாதிகள் செய்யும் கிறுக்குத்தனங்கள் எப்படி மீடியாக்களில் டிரெண்ட் ஆகிறது, இன்றைய சூழலில் நடக்கும் போராட்டங்கள் சோஷியல் மீடியா வழியே எந்த அளவு மக்களை போய்ச் சேருகிறது, அதுமட்டுமின்றி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நினைத்தால் எந்த ஒரு அரசியல்வாதியையும் எளிதாக வாழ வைக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பதையெல்லாம் அப்பட்டமாக நகைச்சுவையாகக் காட்டியுள்ளார்கள்.

 

priya anand lkgநாம் தினமும் சோசியல் மீடியாவில் வாட்ஸ்-அப்பில் பார்க்கும் விஷயங்களை எல்லாம் ஒன்றாகத் தொகுத்து அதைத்தான் கதையாகச் சொல்லியிருக்கின்றனர். என்றாலும் அதை தொகுத்த விதம் சரியாக, பெரும்பாலும் சலிப்பேற்படுத்தாத வண்ணம் இருக்கிறது. ஒரு சீரியஸ் ஃபேஸ்புக் லைவ் பண்ணும்போது கீழே கமெண்டில் 'தளபதி 63' அப்டேட் கேக்கும் ரசிகர், செய்தி தொலைக்காட்சியில் குறுக்கே வந்து 'தல வாழ்க' என்று கத்திவிட்டுப் போகும் ரசிகர் என கரண்ட் மனநிலையை காமெடி செய்திருப்பது ரசிக்க வைக்கிறது. பிரச்சனைகளை மட்டும் காமெடி செய்துவிட்டுப் போகாமல் தீர்வு என்று ஒன்றையும் முன்வைக்கிறார்கள். இரண்டுமே பெரும் சிந்தனையில் விளைந்தவை அல்ல, சாதாரணமாவைதான், ஆனால் மறுக்க முடியாதவை.

கடந்த சில ஆண்டுகளாக நடந்த அரசியல் காமெடிகளை எல்லாம் ஒன்று விடாமல் காட்சிப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள இயக்குனர் அணி, கொஞ்சம் படத்தில் நடித்த கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆர்ஜே.பாலாஜி தொடங்கி நாஞ்சில் சம்பத், ராம்குமார், ஜே.கே.ரித்தீஷ் என முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பும் பாத்திரங்களும் நேர்த்தி குறைவாக, திடீர் மாற்றங்கள் அடைபவையாக இருக்கின்றன. நாஞ்சில் சம்பத்தை இன்னும் நன்றாகப் பயன்படுத்தி இருந்திருக்கலாம். அவருடைய பேச்சின் ரசிகர்கள் படத்திற்கு வந்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஆர்ஜே.பாலாஜி தனக்கே உண்டான சர்காஸ்டிக் நடிப்பை படம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தனக்கு எது சிறப்பாக வருமோ அதற்கேற்ப புத்திசாலித்தனமாக கதையையும், காட்சிகளையும் உருவாக்கி சேஃப் ஸோனில் பயணித்துள்ளார். பிரியா ஆனந்த்துக்கு முக்கியத்துவமுள்ள பாத்திரம், தனக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். மயில்சாமி, சந்தானபாரதி இருவரும் நடிப்பால் எளிதாய் கவர்கிறார்கள்.

 

nanjil sampath lkg'தமிழனென்றால் இதை ஷேர் செய்யவும்' ரக விஷயங்கள் பலவற்றை கதையில் சேர்த்துள்ளனர் பாலாஜி மற்றும் நண்பர்கள். மேலோட்டமான அரசியல் கருத்துகளும் இருக்கின்றன. அவை மட்டுமே ஒரு முழுமையான அரசியல் படத்தைத் தந்துவிட முடியாது என்றாலும் பல இடங்களில் 'நாமும் இந்தக் காமெடியை செய்தோம்' என்று ரசிகர்களை நினைக்க வைத்த வகையில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த டீம். அரசியல் நையாண்டியில் ஓரளவு அனைத்து கட்சிகளையும் விட்டுவைக்கவில்லையென்றாலும் ஆபத்தான இடங்களில் அதிகம் விளையாடாமல் தள்ளி நின்றிருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸின் இசையில் 'எத்தனை காலம்தான்' பாடலும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கும் ரகம். விது அய்யனாவின் ஒளிப்பதிவு கலகலப்புக்கும் பரபரப்புக்கும் ஏற்ற பளீர் வெளிச்சத்தில் படமாக்கியுள்ளது.

நாள் முழுவதும் சோசியல் மீடியாவிலேயே வாழ்பவர்களுக்கு இந்தப் படம் ரொம்பவே ரசிக்கும்படியாக இருக்கும். இதையெல்லாம் தள்ளிவைத்து நிஜ உலகில் வாழ்பவர்களுக்கு இந்தப் படம் ஓரளவு ரசிக்கும்படியாகவும் உள்ளது.

எல்.கே.ஜி - அரசியலில் ஒரு காமெடி பாடம். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்