Skip to main content

சிரிக்க, அழ, நெகிழ...வரவேற்பை பெற்றதா? - "ஜோ" விமர்சனம்!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

rio raj joe movie review

 

போற போக்கில் நாம் செய்த ஒரு உதவி பின்னாளில் அது எந்த வடிவில் நம்மை வந்து காக்கிறது? நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு முழு நீள காதல் திரைப்படம். சிரிக்க, அழ, நெகிழ வைத்திருக்கும் இந்த ஜோ திரைப்படம் எந்த அளவு வரவேற்பு பெற்றுள்ளது? 


நாயகன் ரியோ ராஜ் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறார். அதே கல்லூரியில் நாயகி  மாளவிகா மனோஜும் சேருகிறார். ரியோவுக்கு கேரள பெண்ணான மாளவிகாவை கண்டதும் காதல் ஏற்படுகிறது. நாயகி மாளவிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார் நாயகன் ரியோ ராஜ். ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது. இருவரும் தீவிரமாக காதலிக்கின்றனர். கல்லூரியும் நான்கு வருடங்கள் முடிந்து விடுகிறது. இருவரும் அவரவர் ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். இவர்கள் காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வர கேரள பெண்ணான மாளவிகா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதையடுத்து காதலன் ரியோ உடன் சேர முடியாத ஏக்கத்தில் நாயகி மாளவிகா தற்கொலை செய்து கொள்கிறார்.

 

இதன்பிறகு நாயகன் ரியோ ராஜ்-க்கு திசை தெரியாமல் பாட்டிலும் கையுமாக திரிந்து கொண்டிருக்கிறார். இப்படியே போனால் தன் மகன் வாழ்க்கை வீணாகிவிடும் என்று எண்ணிய ரியோ பெற்றோர் அவருக்கு இன்னொரு நாயகி பவ்யாவை திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் முட்டல் மோதலாகவே இருக்கிறது. ரியோவுக்கோ காதல் தோல்வியில் இருந்து மீள முடியாத சோகம். இன்னொரு நாயகி பவ்யாவுக்கோ அவரது இளம் வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவம். இதனால் இருவருக்குள்ளும் விரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து இந்த விரிசலையும், தன் வாழ்வில் நடந்த துயரத்தையும் சரி செய்ய ரியோ களம் இறங்குகிறார். எடுத்த முயற்சியில் ரியோ வெற்றி பெற்றாரா, இல்லையா? மற்றொரு நாயகி பவ்யா வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் என்ன? ரியோவின் காதல் தோல்விக்கு மருந்து கிடைத்ததா இல்லையா? என்பதே இந்த படத்தின் மீதி கதை.

 

ad


இது ஒரு கதையாக பார்க்கும் பட்சத்தில் நாம் ஏற்கனவே பார்த்து பழகி, அதேபோல் நமது அனைவரின் வாழ்விலும் கண்டிப்பாக ஏதோ ஒரு வடிவில் நடந்த ஒரு காதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் சற்று கலகலப்பாக ஆரம்பித்து போகப் போக காதல் ரசம் சொட்ட சொட்ட நெகிழ செய்து முதல் பாதி நம்மை கனத்த இதயத்தோடு கண்கலங்க செய்து கலங்கடிக்கும் இன்டர்வல் காட்சியோடு முடிவடைகிறது. இரண்டாம் பாதி புதிய வாழ்வியல் தொடக்கம் நிறைந்த காட்சிகளோடு ஆரம்பிக்கும் படம் போகப் போக மிகவும் பாசிட்டிவான போக்கில் சென்று முடிவில் யாரும் எதிர்பாராத திருப்பத்தோடு ஒரு நிறைவான ஃபீல் குட் திரைப்படமாக ஜோ திரைப்படம் அமைந்திருக்கிறது. குறிப்பாக யாரும் எதிர்பாராத வகையில் அமைந்திருக்கும் கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து படத்தையும் கரை சேர்த்து இருக்கிறது. நாம் ஏற்கனவே பலமுறை பார்த்து பழகிய காதல் படத்தை போல் இது இருந்தாலும், காட்சிகளும் திரைக்கதை அமைப்பும் பிரஷ்ஷாக அமைந்து, அதற்கு வலு சேர்க்கும் விதமாக படத்தின் இசையும் அமைந்து எந்த இடத்தில் சிரிக்க வேண்டுமோ, எந்த இடத்தில் அழ வேண்டுமா, எந்த இடத்தில் நெகிழ வேண்டுமோ அந்தந்த இடங்களில் அந்தந்த உணர்ச்சிகளை சரிவர கலவையாக கொடுத்து, ஒரு முழு நீள பீல் குட் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹரிஹரன் ராம்.

 

rio raj joe movie review

 

நாம் வாழ்க்கையில் என்றோ ஒருநாள் போற போக்கில் செய்த ஒரு உதவி பின்னாளில் நம் வாழ்க்கையை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று அறியாத சூழ்நிலையில், அந்த உதவி நம் வாழ்க்கையே புரட்டிப் போடும் அளவிற்கு வேறு ஒரு திசைக்கு நம்மை பயணிக்க செய்து, அந்த வாழ்க்கை நமக்கு பிடித்த மாதிரியாக மாறும் என்ற பாஸிட்டிவான உணர்வை இந்தப் படம் கொடுத்து, தியேட்டரில் கைதட்டல் பெற்று வரவேற்பை பெற்றுள்ளது. நம் வாழ்வில் ஒரு தோல்வி வந்தால் அது நல்லதுக்கே என்ற நல்ல மெசேஜை இந்த படம் மூலம் கொடுத்து கவனிக்க வைத்துள்ளார் இயக்குநர் ஹரிஹரன் ராம். வழக்கமான கெட்டப்பில் வரும் ரியோ ராஜ் வழக்கத்துக்கு மாறான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு நல்ல நடிகர் என்பதை இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எந்த வகையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ அதை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவருடன் சரிசம போட்டியாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை மாளவிகா மனோஜ். கேரள நாயகிக்கான சரியான தேர்வாக மாளவிகா அமைந்திருக்கிறார். இவரது தெளிவான நடிப்பும் அழகான வசன உச்சரிப்பும், நேர்த்தியான முக பாவனைகளும் இவரது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. குறிப்பாக இவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது.

 

இரண்டாம் பாதியில் வரும் நாயகி பவ்யாவும் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் இல் இவரது கதாபாத்திரம் கொடுக்கும் டிவிஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி இருக்கிறது. ரியோ ராஜ் உடன் நடித்திருக்கும் நண்பர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கின்றனர். ரியோவின் நெருங்கிய நண்பராக வரும் அன்பு தாசனை காட்டிலும் இன்னொரு நண்பராக வரும் நடிகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் அனுபவமான நடிப்பில் நெகிழ செய்துள்ளார் மூத்த நடிகர் சார்லி. இவரது கதாபாத்திரம் பிற்பகுதி கதைக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

 

rio raj joe movie review

 

இசையமைப்பாளர் சித்து குமார் பேச்சிலர் படத்திற்கு பிறகு இந்த படத்தில் சிறப்பான இசையை கொடுத்து மெய்சிலிர்க்க வைத்துள்ளார். இந்தப் படத்தின் இன்னொரு நாயகனாக இசை மாறி இருக்கிறது. நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட டூயட் பாடல் காட்சி சிறப்பாக அமைந்திருக்கிறது. அதேபோல் பின்னணி இசையையும் பல இடங்களில் சிறப்பாக கொடுத்து நம்மை நெகிழ செய்திருக்கிறார். பல இடங்களில் கண் கலங்கவும் வைத்திருக்கிறார். ராகுல் ஒளிப்பதிவில் கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் காதல் காட்சிகளும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரின் வாழ்விலும் காதல் தோல்வி என்பது ஏதோ ஒரு நேரத்தில், ஏதோ ஒரு வகையில் நம்மை கடந்து சென்று இருக்கும். அதற்காக நாம் நம் வாழ்வை தொலைத்துக் கொள்வதில் எந்த பலனும் இல்லை. அதைத் தாண்டி நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த சில பல நன்மைகள் நம்மை ஏதோ ஒரு வகையில், நாம் தடுமாறும் நேரத்தில் நம்மை காத்து சரியான பாதைக்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையை இந்த படம் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஜோ அனைவரையும் நெகிழ செய்து நம்பிக்கை கொடுத்திருக்கிறான்.

 

ஜோ - நம்பிக்கை!

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இசையமைப்பாளர் தேர்வு என் விருப்பம் தான் - ‘ஜோ’ பட அனுபவம் பகிரும் ரியோ ராஜ்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
 Joe Movie Actor Rio Raj Interview

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகர், பிறகு வெள்ளித்திரையில் நடிகராக வலம் வருபவர் ரியோ ராஜ், சமீபத்தில் வெளியான ஜோ படத்தின் அனுபவம் பற்றி நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோ படக்குழு சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ஒரே நேரத்தில் வந்தவர்கள். அந்த விதத்தில் அனைவரும் இணைந்து ஒரு வெற்றிப் படத்தில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சின்னத்திரையிலிருந்து பெரிய திரை நோக்கி வந்த போது எல்லோருக்கும் இருப்பது போல பல கஷ்டங்கள், சிக்கல்கள் அதெல்லாம் ஒரு வெற்றியைப் பார்த்த பிறகு சரியாகிடும். 

என் பார்ட்னர் கூட முதல் நாள் முதல் காட்சியின் போது என்னை திரையில் பார்த்ததும் ரொம்ப எமோஷனல் ஆனாங்க, அது படம் பார்த்து வந்த அழுகை இல்லை. அதற்கு பின்னால் இருந்த என்னுடைய ஒரு நீண்ட போராட்டம் இருக்கு, அதை நினைத்து அழுதாங்க, அந்த வீடியோ கூட இணையத்தில் வைரல் ஆனது. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு போனால் ரிலாக்ஸா உணர வைக்கிற ஒரு இடமாக வீடு எல்லாருக்கும் அமைய வேண்டும். எனக்கு அப்படி ஒரு பார்ட்னர் அமைந்திருப்பது பாக்கியம் தான்.   

ஜோ படத்தின் கதை கேட்டு முடித்ததுமே சித்துகுமார் தான் இசையமைப்பாளராக இந்த படத்திற்கு இருக்க வேண்டும் என்பது நான் கேட்டுக்கொண்டது. குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே சித்துகுமாரின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அத்தோடு மிகவும் திறமையானவருக்கு ஜோ படத்தின் மூலம் இந்த வெற்றி கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.  

Next Story

“ஜோ பட பாடல் இவர் எழுதப்போறாருன்னு சொன்னதும் நம்பவில்லை” - இசையமைப்பாளர் சித்துகுமார்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Joe Movie Music Director Siddhu Kumar Interview

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக இசையமைப்பாளர் சித்து குமாரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவரளித்த பதில்கள் பின்வருமாறு..

ஜோ படத்தின் பாடல்கள், பிண்ணனி இசை முடிந்து பைனல் அவுட்புட் எடுக்கும் போது இரு ஒரு கம்போசராக எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப திருப்தியாக இருந்தது. திரையரங்கில் என்ன ரிசல்ட் வரும் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. பெரும் வெற்றியைக் கண்ட பிறகு இன்னும் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மனதினை பக்குவப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். 

ராஞ்சனா, ரப்னே பனா ஜோடி போன்ற பாலிவுட் படங்களின் இசைக்கோர்வை எப்போதும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும், அது நான் இசையமைக்கும் போது இன்ஸ்பிரேசனாகவும், ரொமாண்டிக் மூட் செட்டுக்கும் பயன்படும். சர்வதேச இசையமைப்பாளர்களின் இசை அதிகம் கேட்பேன், உறவுகள் தொடர்கதை பாடலை அடிக்கடி கேட்பேன், அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலாகவும் எப்போதுமே இருக்கிறது.

ஜோ படத்திற்கு இசையமைக்கும் போது படத்திற்கு அப்பாற்பட்டு போய்விடக்கூடாது, அது படத்துடனேயே பயணிக்க விரும்பியே வேலையை ஆரம்பித்தேன். உருகி பாடல் தான் முதலாவதாக ஆரம்பமானது அதற்கடுத்த பாடலுக்கான வரிகள் கூட நாயகன் ரியோ தான் எடுத்துக் கொடுத்தாரு, அவர் பாடல் எழுதப்போறேன்னு சொன்னதும் நம்பவில்லை, அப்புறம் அதை தவிர்க்கும்படியாக இல்லாமல் சிறப்பாக இருந்ததால் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் ஆகிவிட்டது.