தமிழ் சினிமாவில் இதுவரை பல்வேறு விதமான போலீஸ் கதைகளை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் இந்த ரைட் திரைப்படம் மற்ற அனைத்து போலீஸ் கதைகளிலிருந்தும் வித்தியாசமான போலீஸ் கதையாக இருக்கிறது. அப்படி என்ன வித்தியாசமான போலீஸ் கதை? அது வரவேற்பை பெற்றதா, இல்லையா? 

Advertisment

கோவளம் காவல் நிலையத்திற்கு தன் மகனை காணவில்லை என அருண் பாண்டியன் புகார் கொடுக்க வருகிறார். வந்த இடத்தில் அந்த ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர், நாயகன் நட்டி பிரதமர் பந்தோபஸ்துக்காக சென்றுவிடுகிறார். அதனால் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் அக்சரா ரெட்டி, திருடன் டைகர் கார்டன் தங்கதுரை, ஏட்டு மூணாறு ரமேஷ் மற்றும் ஒரு பெண் போலீஸ், இரண்டு திருடர்கள் ஆகியோர் இருக்கின்றனர். அப்போது அந்த மர்மமான முறையில் ஒரு லேப்டாப் கிடைக்க அதை போலீசார் ஓபன் செய்கின்றனர். அப்பொழுது அந்த காவல் நிலையத்தை மொத்தமாக ஒருவன் அந்த லேப்டாப் மூலமாக ஹேக் செய்து போலீஸ் நிலையத்தை விட்டு யாரேனும் வெளியே சென்றால் அங்கு சுற்றி இருக்கும் அனைத்து வழிகளிலும் பாம் வைத்து அதை வெடிக்க வைத்து விடுவதாக பயமுறுத்துகிறார்.

Advertisment

140

அதனால் பயந்து போன போலீசார் அவன் பிரச்சனை என்ன? அவனது கோரிக்கைகள் என்ன? என்பதை கேட்கின்றனர். அதற்கு அந்த மர்ம நபர் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு பழைய கேசை தோண்டி எடுத்து அதற்கு தீர்ப்பு சொல்ல ஜட்ஜ் வினோதினியை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அங்கேயே குற்றவாளியை கண்டுபிடித்து அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என உத்தரவிடுகிறார். போலீஸாரும் வேறு வழியின்றி தாங்கள் வெளியே செல்ல முடியாத காரணத்தினால் அந்த கேசை விசாரிக்க முடிவெடுக்கின்றனர். அந்த கேஸ் என்ன? அதில் யார் குற்றவாளி? லேப்டாப்புக்குள் இருக்கும் மர்ம நபர் யார்? அவர் ஏன் இப்படி செய்ய வேண்டும்? இதில் நாயகன் நட்டி என்ன செய்கிறார்? காணாமல் போன அருண்பாண்டியன் மகன் கிடைத்தாரா, இல்லையா? போலீஸ் நிலையத்திலிருந்து அத்தனை நபர்களும் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே இந்தப் படத்தின் மீதி கதை.

படம் ஆரம்பித்து சிறிது நேரம் வரை மெதுவாக செல்லும் திரைப்படம் லேப்டாப் காவல் நிலையத்திற்குள் வந்த பிறகு சூடு பிடிக்க ஆரம்பித்து படு வேகமாக சென்று பல்வேறு திருப்புமுனைகளை இடையே சிறப்பான த்ரில்லர் படமாக அமைந்து பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு வர வைத்து இருக்கிறது. ஒரு வித்தியாசமான கதையை எடுத்துக்கொண்டு அதன் மூலம் நேர்த்தியான அதுவும் சுவாரசியமான விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து பார்ப்பவர்களை ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ் குமார். ஒரு மிகப்பெரிய நாயகர்கள் நடிக்கும் கமர்ஷியல் படத்துக்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்குமோ அந்த வகையான ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதன் மூலம் சிறப்பான முறையில் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் இதையே வேறு பெரிய முன்னணி நடிகர்களை வைத்து எடுத்து இருந்தால் இந்த படம் இந்நேரம் வசூல் வேட்டையாடி இருக்கும். அந்த அளவு ஒரு கமர்சியல் கலந்த விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாகிய வேண்டிய அத்தனை அம்சங்களும் கூடிய படமாக இந்த படம் அமைந்திருக்கிறது. 

Advertisment

137

மிகவும் குறுகிய காலத்தில் சின்ன பட்ஜெட்டில் இந்த படத்தை இந்த அளவு சுவாரசியமாக கொடுத்த இயக்குநர் படத்தின் ஆரம்பத்திலும் இறுதி கட்டத்திலும் இன்னமும் கூட முயற்சி செய்து சிறப்பான முறையில் நேர்த்தியான படமாக இந்த படத்தை கொடுத்து ஆங்காங்கே இருக்கும் சில ஏற்ற இறக்கங்கள் மற்றும் தொய்வுகளை சரி செய்திருக்கலாம். அதே போல் ஆரம்பகட்ட காட்சிகள் ஏதோ கடமைக்கு வைத்தது போல் இருப்பதையும் அதனுள் இருக்கும் கதை சொல்லலில் வரும் கதை மாந்தர்களின் செயல்பாடுகளும் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய விஷயங்களாக இருப்பது சற்றே அயற்சியை கொடுத்திருந்தாலும் படம் போகப் போக விறுவிறுப்பாக அமைந்து ஒரு நல்ல த்ரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்திருப்பது படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. இருந்தும் தன் முதல் படத்தில் இயக்குநர் இந்த அளவு திருப்புமுனைகள் கொடுத்து விறுவிறுப்பாக பணத்தை கொடுத்து இருப்பது சிறப்பு. 

படத்தின் நாயகன் நட்டி ஆரம்பத்தில் தலைமறைவாக இருந்து கொண்டு பிற்பகுதியில் தலைகாட்டி மாஸ் காட்டி இருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்தில் சிறப்பாக கொடுத்து தன் வழக்கமான நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகன் அருண் பாண்டியன், வயதான கதாபாத்திரமாகவே இருந்தாலும் அதை சிறப்பாக திறன் பட கையாண்டு கவனம் பெற்று இருக்கிறார். அவரது வசன உச்சரிப்பு மற்றும் அவரது டோன் ஆகியவை சில இடங்களில் நம்மை நெளிய வைத்திருப்பதை தவிர்க்க முடியவில்லை. சப் இன்ஸ்பெக்டராக வரும் அக்ஷரா ரெட்டி சிறப்பான முறையில் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். மூணாறு ரமேஷ் மற்றும் தங்கதுரை சம்பந்தப்பட்ட காட்சிகள் சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது.

139

அதேபோல் வீரம் பட குழந்தை நட்சத்திரம் தற்பொழுது நாயகியாக இருக்கும் யுவினா அழகாக இருக்கிறார், அளவாக நடித்திருக்கிறார், அதோடு பார்ப்பவர்களையும் கவர்ந்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். அவரது காதலராக நடித்திருக்கும் நடிகர் நடிப்பில் புதுமுகம் என்ற உணர்வைத் தர மறுத்திருக்கிறார். அதேபோல் ஜட்ஜ் ஆக வரும் வினோதினி வழக்கமாக எப்படி கவனம் பெறும்படி நடிப்பாரோ அதேபோல் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கின்றனர். கதை ஓட்டத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். 

பத்மேஷ் ஒளிப்பதிவில் காவல் நிலையம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குணா சுப்பிரமணியம் இசையில் பாடல்கள் சுமார் பின்னணி இசை ஓகே. ஒரு கமர்சியல் படத்துக்கே உரித்தான விஷயத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் அதை இன்னமும் திறன் பட கையாண்டு இருந்தால் படத்தில் இருக்கும் பல்வேறு லாஜிக் ஓட்டைகள் காணாமல் போய் இருக்கும். அதேபோல் பெரிய நடிகர்கள் பெரிய செட்டப் என இந்த படத்தை எடுத்திருக்கும் பட்சத்தில் அதுவும் பல்வேறு ஓட்டைகளை மறக்கடிக்க செய்து மிகப் பெரிய ஹிட் படமாக இது அமைந்திருக்கும். இருந்தும் படத்தின் ஆரம்ப கட்டங்கள் நம்மை நெளிய வைத்தாலும் போகப்போக வேகம் எடுக்கும் திரைப்படம் விறுவிறுப்பான திருப்புமுனைகள் நிறைந்த வித்தியாசமான போலீஸ் த்ரில்லர் படமாக இந்த ரைட் படம் அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. 

ரைட் - போகலாம் ஒரு ரைட்!