Advertisment

கள்ளக்கடத்தல் செய்யாத, துப்பாக்கி தூக்காத, உண்மையான மீனவ கிராமம்! -   'அங்கமாளி டயரீஸ்' கொடுத்தவரிடமிருந்து  'ஈ.மா.யூ'! 

'ஈ.மா.யூ .' கடந்த 2017ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அங்கமாளி டயரீஸ்' படத்தின் முலமாக கவனம் ஈர்த்த லிஜோ ஜோஷ் பெல்லிசெரி இயக்கி இருக்கும் அடுத்த படம். படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே கேரளா அரசின் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்கம், சிறந்த ஒலிவடிவமைப்பு மற்றும் சிறந்த குணசித்திர நடிகை ஆகிய மூன்று விருதுகளை வென்று பின் கடந்த மே 4 அன்று கேரளாவில் வெளியாகி வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. கேரள சினிமாவில் மற்றுமொரு பெயர்பெற்ற இயக்குனரான ஆஷிக் அபு இப்படத்தை தயாரித்திருக்கிறார் என்பதும் மகேஷிண்டே பிரதிகாரம் மற்றும் தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும் ஆகிய தேசிய விருது பெற்ற படங்களின் இயக்குனர் திலீஷ் போத்தான் இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

ee.ma.eau

விநாயகன் -செம்பன் வினோத் - திலீஷ் போத்தான்

கேரளாவில் எர்ணாகுளம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் சிறிய மீனவ கிராமமான செல்லனத்தில் வசிக்கும் வாவச்சன் மேஸ்திரி என்கிற முதியவரின் மரணமும், அந்த மரணத்தின் வழியே அந்த கிராம மக்களின் வாழ்க்கையையும் நாம் காணும்படியாக இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது. படம் முடிந்து நாம் வெளியேறும் போது உண்மையிலேயே இரண்டு மணிநேரம் செல்லனம் கிராமத்தில், அந்த இறப்பு வீட்டில் இருந்து வந்தது போன்ற உணர்வை இது ஏற்படுத்துகிறது. படத்தின் கதையில் தொடங்கி , திரைக்கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு குறிப்பாய் ஒலி வடிவமைப்பு என அனைத்தும் அவ்வளவு கச்சிதமாய் நம்மை செல்லனம் கிராமத்துக்கே அழைத்துச் செல்கிறது.

e.m.u1

Advertisment

2010ஆம் ஆண்டில் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெற்ற எழுத்தாளர் பி.எப்.மேத்யுஸ் இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளார். மேத்யுசை குறித்து படத்தின் இயக்குனர் லிஜோ பேசுகையில் ’‘மேத்யுஸ் எழுதிய 'சாவுநிலம்' என்கிற நாவலை ஒரு முறை படித்தேன். எனக்கு அதை படித்து முடித்த பொழுது நானே அந்தக் கதையில் வரும் கடற்கரை கிராமத்தில் அந்த மழையில் முழுக்க நனைந்து அங்கேயே இருந்து திரும்பி வந்தவன் போல உணர்ந்தேன்” என்கிறார்.

இன்று அனைவராலும் பாராட்டப்படும் இந்தப் படத்தின் ஒலிவடிவமைப்பு குறித்து லிஜோ பேசும்பொழுது “ஒரு முறை திருவனந்தபுரத்தில் ஒரு குறும்படப் போட்டிக்கு நடுவராக சென்றிருந்தேன். அப்போட்டியில் விருதுபெற்ற ஒரு குறும்படம் “DAYS OF AUTUM”. அக்குரும்படத்தின் ஒலிவடிவமைப்பு என்னை மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எனக்கு உண்மையிலேயே அந்தக் கதை நடக்கும் களத்திலேயே இருப்பது போன்ற உணர்வை அந்தப் படத்தின் ஒலிவடிவமைப்பு தந்தது. நான் அதற்கு முன்பு அப்படியான ஒரு அனுபவத்தைப் பெற்றதில்லை. இது போலவே என்னுடைய படத்திலும் பார்வையாளர்கள் அந்தக் கதையை, கதை நிகழும் இடத்தை அந்த காற்றை, மழையை உணர வேண்டும் என எண்ணினேன். அது ஈ.மா.யூ வில் நிகழ்ந்திருக்கிறது” என்கிறார்.

emu2

கிராமத்து எளிய மனிதர்களிடம் இருக்கும் அத்தனை குணங்களும் உணர்வுகளும் படத்தில் மிக நேர்த்தியாக கையாளப்பட்டு பார்வையாளர்களிடம் கடத்தப்படுகிறது. இக்கதைக்கு என்று பிரத்யேக கதாநாயகனோ, வில்லனோ இல்லை. ஒரு சூழ்நிலையில் அந்த கிராமத்து மனிதர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை உண்மையிலேயே படம்பிடித்துக் காட்டியது போன்ற உணர்வை படம் நமக்குத் தருகிறது.

ஒரு இறப்பை மையமாக வைத்துக்கொண்டு அதனூடே எளிய மனிதர்கள் மீது இங்கிருக்கும் அதிகார மையங்கள் என்னென்ன அழுத்தங்களைத் தருகின்றன என்பதையும் மிக அழகாக படத்தினூடே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் இன்னொரு ஆச்சர்யம் படத்தில் பின்னணி இசையே இல்லை என்பதுதான். ஆங்காங்கே பேண்டு செட்டுகள் படத்தில் வரும் காதபாத்திரங்களால் வாசிக்கபடுகிறது. அது தவிர்த்து படத்தின் முடிவில் சிறிய ஒரு இசைக்கோர்ப்பு வருகிறது. அது இல்லாமல் இரண்டு மணி நேர படத்தில் பின்னணி இசையே இல்லை என்பதை பார்வையாளர்கள் உணராதவாறு அவர்களை அந்த மனிதர்களும், அக்கிராமத்தின் காற்றும், மழையும் கட்டிப்போட்டு விடுகிறது.

emu 5

ஈஷியாக நடித்திருக்கும் செம்பன் வினோத்தும், ஐயப்பனாக வரும் விநாயகனும், சர்ச் ஃபாதராக வரும் திலீஷ் போத்தானும் மற்ற அனைவருமே அவ்வூரின் முகங்களாகவே நமக்கு தெரிகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து இந்த மலையாளப்படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரும் ஆச்சர்யத்தை இது தர காத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீனவ கிராமங்களைப்போல் ஈ.மாயூவில் வரும் செல்லனம் கிராமத்தில் யாரும் கள்ளக்கடத்தல் செய்யவில்லை. தமிழ் சினிமாவில் வரும் கடற்கரை கிராமத்து நாயகர்கள் போல் யாரும் துப்பாக்கிகளை அசால்ட்டாகக் கையாள்வதில்லை. எந்த நாயகனின் தாயும் பாலியல் தொழிலாளி இல்லை, எந்த மீன் கூடைகளுக்குள்ளும் போதை பொருட்களும் ஆயுதங்களும் பதுக்கப்படவில்லை.

படைப்பாளியின் மூளைக்குள் இருந்து தோன்றி, கடலுக்கான பின்புலம் ஏதும் இல்லாமல் சினிமாத்தனமாக இருக்கும் டெம்ப்ளேட் நாயகர்கள் போலல்லாமல், செல்லனத்து கிராம மக்கள் மீன்பிடிக்கிறார்கள், ருசியாக வாத்துக்கறி சமைத்து உண்கிறார்கள், காதலிக்கிறார்கள், பாடுகிறார்கள, சண்டைபிடித்து பின் தவறுகளை உணர்ந்து சமாதானம் ஆகிறார்கள், சீட்டு விளையாடுகிறார்கள், எந்த ஒரு பிரச்சனையையும் ஒரு கோப்பை மதுவோடு பேசி முடிக்கிறார்கள், கடல் அலைகளின் சத்தத்தோடு அவர்கள் அவர்களாகவே வாழ்கிறார்கள்.

mahanadhi nadigaiyarthilagam keerthysuresh
இதையும் படியுங்கள்
Subscribe