சேட்டை குழந்தையுடன் பெற்றோரின் பயணம்; சுவாரஸ்யமாக அமைந்ததா? - ‘பறந்து போ’ விமர்சனம்

470

பேரன்பு படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து இயக்குநர் ராம், இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பறந்து போ’. பொதுவாக அழுத்தங்கள் நிறைந்த கனத்த இதயத்தோடு இருக்கும் படங்களை இயக்கி வரும் இயக்குநர் ராம் இந்த முறை நகைச்சுவை திரைப்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். தன்னுடைய பாணியில் இருந்து வெளியே வந்து அவர் இயக்கி இருக்கும் இந்த ‘பறந்து போ’ திரைப்படம் பார்ப்பவர்களை எந்த அளவு கவர்ந்திருக்கிறது?

மிகவும் ஹைப்பர் ஆக்டிவாக இருக்கும் சிறுவன் மிதுல் ராயன் தன் அப்பா மிர்ச்சி சிவாவிடம் தன்னை வெளியே கூட்டி செல்லும்படி அடம் பிடிக்கிறான். இவனது சேட்டைகளை தாங்க முடியாத மிர்ச்சி சிவா வேறு வழி இன்றி அவனை வெளியே கூட்டி கொண்டு செல்கிறார். இருவரும் பைக்கில் ரோட் ட்ரிப் செல்கின்றனர். இவர்கள் செல்லும் இடத்தில் எல்லாம் சிறுவன் மிதுல் செய்யும் சேட்டைகளால் தந்தை மிர்ச்சி சிவா மற்றும் தாய் கிரேஸ் ஆண்டனி படும் பாடே இந்த பறந்து போ படத்தின் மொத்த கதை. சிறுவன் மிதுல் இவர்களை பாடாய்படுத்துகிறார். அந்த சேட்டையில் இருந்து தாய் தந்தை தப்பித்தார்களா, இல்லையா? என்பது படத்தின் மீதி கதை?

பொதுவாக ராம் படங்கள் என்றாலே மனதை பிழியும் படியான படங்களாக அமைந்துவிடும். அப்படி அழுத்தங்கள் நிறைந்த படங்களாக எடுத்து கவனம் பெற்ற அவர், முழுக்க முழுக்க அப்பா மகன் பாசத்தை வைத்துக்கொண்டு ஒரு ரோட் ட்ரிப் காமெடி படமாக இந்த படத்தைக் கொடுத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அப்பா மகன் பாசம் அம்மாவின் ஏக்கம் என படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் இவர்களின் பாசத்தையும் அதே சமயம் சிறுவன் செய்யும் சேட்டையையும் உள்ளடக்கி அதற்கு ஏற்றார் போல் ஒரு கலகலப்பான ஜனரஞ்சகமான திரைக்கதை அமைத்து பார்ப்பவர்களை சிரிக்க வைத்து பல இடங்களில் சோதிக்கவும் வைத்து பின் ஒரு நிறைவான ஜாலியான படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

சிறுவனின் வாழ்வியலோடு ஒன்றி போகும்படியான திரைக்கதை அமைத்து அவனுடைய பாயிண்ட் ஆஃப் வியூவில் கதை அமைத்து அதனுடன் நம்மையும் பயணிக்கும்படி செய்து அவன் செய்யும் சில சேட்டைகள் வெறுப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பல சேட்டைகள் நம் மனதிற்கு நெருக்கமாக கலகலப்பாகவும் காமெடியாகவும் அமைந்து பார்ப்பவர்களை சிரிக்க வைத்து ரசிக்கவும் வைத்திருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மிர்ச்சி சிவா மிதுல் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோரை சுற்றியே கதை நகர்வதும் பின் சில பல கதாபாத்திரங்கள் உள்ளே வந்து செல்வதும் அது சற்றே அயற்சி கொடுத்தாலும் போக போக அதை சரி செய்யும் வகையில் அமைந்திருக்கும் காமெடி காட்சிகள் இதை அனைத்தையும் மறக்கடிக்க செய்து ஒரு நல்ல பீல் குட் படம் பார்த்த உணர்வை இந்த பறந்து போ கொடுத்திருக்கிறது.

மிர்ச்சி சிவா வழக்கம்போல் இல்லாமல் இந்த படத்தில் நன்றாகவே நடித்திருக்கிறார். சென்னை 28 படத்திற்கு பிறகு தனது தேர்ந்த நடிப்பை இந்த படத்தின் மூலம் கொடுத்து பார்ப்பவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார். இவர் அந்த சிறுவனோடு சேர்ந்து கொண்டு அடிக்கும் ஒன் லைன் காமெடிகள் மற்றும் மனைவியுடன் பேசும் கலகலப்பான வசனங்கள் அதே சமயம் குழந்தைக்காக மனம் உருகி வருத்தப்படும் காட்சிகள் என ஒவ்வொரு காட்சிக்கு ஏற்றவாறு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வெறும் காமெடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அனைத்து விதமான உணர்ச்சிகளையும் சிறப்பாக ஜஸ்ட் லைக் தட் போல் வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். இனிவரும் காலகட்டத்தில் இது போன்ற கதாபாத்திரங்களை அவர் தேர்வு செய்யும் பட்சத்தில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

நாயகி கிரேஸ் ஆண்டனி அவரது ஸ்லாங்கும் எதார்த்தமான நடிப்பும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. இவருக்கும் மிர்ச்சி சிவாவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரே காட்சியில் வந்தாலும் மனதை வருடி விட்டு செல்கிறார் நாயகி அஞ்சலி. அவரின் கணவராக வரும் அஜு வர்கீஸ் கலகலப்பாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். கௌரவத் தோற்றத்தில் வரும் விஜய் யேசுதாஸ் மனதில் பதிகிறார். பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய இடங்களில் வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் படத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து விட்டு சென்றிருக்கின்றனர். படத்தின் நாயகனான சிறுவன் மிதுல் ராயன் ஹைபர் ஆக்டிவ் நிறைந்த சிறுவனாக நேர்த்தியான நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்று இருக்கிறார். இவரது நேர்த்தியான நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. இந்த வயதில் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதற்கு இவருக்கு விருதுகள் நிச்சயம் காத்திருக்கிறது.

சந்தோஷ் தயாநிதி இசையில் குழந்தைகள் ரசிக்கும் ஹாலிவுட் கார்ட்டூன் படங்களை போல் காட்சிக்கு காட்சி 19 பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்று இருக்கின்றன. அவை அனைத்துமே எந்த ஒரு வகையிலும் படத்திற்கு பாதகமாக அமையாமல் அப்படியே கடந்து சென்று இருக்கிறது. அதுவே படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறது. என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாக நதிகள் இருக்கும் படகு போல் ஏற்ற இறக்கங்களோடு ஸ்மூத்தாக பயணிக்கிறது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தந்தை மகன் உறவை அழகாக காமெடி காட்சிகள் மூலம் சிறப்பாக கொடுத்திருக்கும் ராம் பல இடங்களில் காட்சிகள் அயற்சி ஏற்படுத்தி சற்றே நம்மை சோதிக்கும்படி அமைந்திருந்தாலும் அதைத் தாண்டி அப்பா மகன் உறவு, அம்மா மகன் உறவு என அழகான பாசப்பிணைப்போடு கலகலப்பான காமெடி காட்சிகள் மூலம் திரைக்கதை அமைத்திருப்பது அதை அனைத்தையும் மறக்கடிக்க செய்து ஒரு நல்ல ஃபீல் குட் காமெடி படம் பார்த்த உணர்வை இந்த பறந்து போ கொடுத்திருக்கிறது.

‘பறந்து போ’ - கவலைகள் பறக்கட்டும்!

director ram moviereview shiva
இதையும் படியுங்கள்
Subscribe