Advertisment

அரங்கம் அதிர விசில் பறந்ததா? - ‘கூலி’ விமர்சனம்

69

மாநகரம், கைதி வெற்றிகளுக்கு பிறகு முன்னணி நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ பட வெற்றியின் மூலம் உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது விறுவிறுப்பான திரைக்கதையும் கேங்ஸ்டர் கதைக்களமும் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. இதனாலேயே இவரது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அடுத்தடுத்து இவரது இயக்கத்தில் வெளியான மாஸ்டர், லியோ ஆகிய படங்கள் இவரை தமிழில் முன்னணி இயக்குநராக மாற்றியது. இவர் தற்பொழுது இன்னும் ஒரு படி மேலே போய் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்துடன் கைகோர்த்து ‘கூலி’ படத்தை உருவாக்கி இருக்கிறார். இருவரும் இணைந்து படம் பண்ணுவதாக அறிவிப்பு வெளியான நாள் முதல் எதிர்பார்ப்பு வானளவு எகிறிய நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி இருக்கிறது.  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படங்கள் மூலம் பெற்ற வரவேற்பை காட்டிலும் கூலி படத்திற்கு அதிக வரவேற்பை பெற்றாரா, இல்லையா?

Advertisment

சென்னையில் மேன்ஷன் நடத்தி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் தன் நண்பர் சத்யராஜ் மறைவுக்காக விசாகப்பட்டினம் செல்கிறார். சென்ற இடத்தில் சத்யராஜ் இயற்கையாக மரணிக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்ற உண்மை ரஜினிக்கு தெரிய வருகிறது. தன் நண்பன் சத்யராஜை கொலை செய்தவர்களை பழி தீர்க்க முடிவெடுக்கும் ரஜினிகாந்த் விசாகப்பட்டினம் ஹார்பரில் கள்ளக் கடத்தல் செய்து வரும் வில்லன் நாகார்ஜுனாவின் கூடாரத்திற்குள்ளேயே செல்கிறார். சென்ற இடத்தில் அவர் கொலையாளியை கண்டுபிடித்து பழிதீர்த்தாரா, இல்லையா? சத்யராஜின் மரணத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? அதற்கும் ரஜினிக்கும் என்ன தொடர்பு? என்பது கூலி படத்தின் மீதி கதை. 

72

லோகேஷ் கனகராஜ் வழக்கம்போல் தனக்கே உரித்தான விறுவிறுப்பான ஒரு கேங்ஸ்டர் படத்தை கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறார். அவரது பாணியிலேயே இந்த படத்தை உருவாக்கி இருக்கும் அவர் சென்டிமென்ட் கலந்த கேங்ஸ்டர் திரில்லர் படத்தை கொடுத்து தியேட்டரில் ஆரவாரத்தை உண்டாக்கி இருக்கிறார். ரஜினி படம் என்றாலே பஞ்ச் வசனங்கள் ஆக்ஷன் காட்சிகள் ஆகியவைக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இந்த படத்தில் பஞ்ச் வசனங்களை மட்டும் தவிர்த்து ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் சிறப்பான முறையில் ரஜினிக்கே உரித்தான மாஸ் படத்தை கொடுத்து தியேட்டரை விசில் சத்தத்தால் நிறம்ப செய்திருக்கிறார். அதேபோல் மற்ற ரஜினி படங்களை காட்டிலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் கொஞ்சம் நடிப்பிலும் கான்சென்ட்ரேட் செய்து அதை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருப்பது படத்தில் இன்னொரு சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒரு வகையில் ரஜினிகாந்த் படமாகவும் இன்னொரு வகையில் லோகேஷ் படமாகவும் ஒருசேர உருவாக்கி இந்த படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது படக்குழு. 

Advertisment

லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களை காட்டிலும் இந்த படம் அவரது பாணியிலேயே இருந்தாலும் விக்ரம் படம் கொடுத்த பரவசத்தை எதிர்பார்த்து செல்பவர்களுக்கு சற்றே ஏமாற்றம். அதே சமயம் இதற்கு முன்பு வெளியான லியோ படத்தை விட இந்த படம் சிறப்பான முறையில் அமைந்து கிட்டத்தட்ட கமல் படம் வேறு ரஜினி படம் வேறு என்ற பிம்பத்தை தெளிவாக காண்பித்திருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க ரஜினிக்கான படமாக மாறி ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் ரஜினி படமாக அமைந்து பார்ப்பவர்களுக்கு விருந்தளித்து இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இந்த படத்திற்கு செல்லும் பட்சத்தில் இந்த படம் நிச்சயமாக அனைவரையும் பரவசப்படுத்தும். அதேபோல் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது இந்த கால 2கே இளசுகளையும் கவரும் வகையில் பாடல்களும் திரைக்கதை அமைப்பும் சிறப்பான முறையில் அமைந்து இருப்பது, அதேபோல் நான்கு தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்திருப்பது சொற்ப நபர்களுக்கு ஏமாற்றம் அளித்திருந்தாலும் மற்றவர்களுக்கு இது ஒரு தரமான கேங்ஸ்டர் படமாகவே அமைந்திருக்கிறது. 

68

நாயகன் ரஜினிகாந்த் வழக்கம் போல் படம் முழுவதும் தனது சூப்பர் ஸ்டாரிசத்தை பரவச் செய்து ரசிகர்களுக்கு விருந்து அளித்திருக்கிறார். மற்ற படங்களை காட்டிலும் வெறும் கமர்சியல் அம்சங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான நடிப்பையும் அதே சமயம் ரசிகர்களுக்கான மாஸ் எலிமெண்ட்ஸ்களையும் ஒருசேர கொடுத்து அதகளப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பார்ப்பவர்களை சில்லறையை சிதற வைத்திருக்கிறார். இந்த வயதிலும் அவரது ஈடுபாடு பார்ப்பவர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக அமைந்திருக்கிறது. படத்தின் நாயகியாக வரும் ஸ்ருதிஹாசன் படம் முழுவதும் ரஜினியுடன் பயணித்து தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். 3 படத்திற்குப் பிறகு நீண்ட நாட்களுக்குப் பின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அதையும் சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார். இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் அவர் அடுத்த ரவுண்டு வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. 

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் சௌபின் சாகிர் மிக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார். இவரது துடுக்கான நடிப்பும் மிடுக்கான நடையும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நன்றாக என்டர்டைன்மென்ட் செய்திருக்கிறார். தனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பான முறையில் செய்யும்படியான நடிப்பை இந்த படத்திலும் கொடுத்திருக்கிறார். பல்வேறு காட்சிகளில் வித்தியாச வித்தியாசமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி அதே சமயம் சிறப்பான முறையில் நடனமும் ஆடி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவரும் தமிழில் ஒரு ரவுண்டு வர அதிக வாய்ப்பு இருக்கிறது. வில்லன் நாகர்ஜுனா இதுவரை பார்த்திராத ஒரு நாகர்ஜுனாவாக படத்தில் மிளிர்கிறார். தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி அதன் மூலம் வில்லத்தனம் காட்டி கவர்ந்திருக்கிறார். சார்லி, கண்ணா ரவி, காளி வெங்கட் ஆகியோர் குணச்சித்திர நடிப்பில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றனர். 

67

ரஜினியின் நண்பராக வரும் சத்யராஜ் நல்ல அப்பாவாகவும் நல்ல நண்பராகவும் நடித்து சிறப்பு செய்திருக்கிறார். சத்யராஜின் மகள்களாக வரும் ரெபா, மோனிகா ஆகியோர் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். மற்றபடி முக்கிய பாத்திரத்தில் வரும் லொள்ளு சபா மாறன், தமிழ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து விட்டு சென்று இருக்கின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் சிறப்பாக செய்து படத்துக்கும் பக்கபலமாக அமைந்திருக்கின்றனர். கண்ணா ரவியின் காதலியாக வரும் தெலுங்கு நடிகை ரட்சிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதகளப்படுத்தி இருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி தனக்கென முத்திரை பதித்திருக்கும் அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கௌரவத் தோற்றத்தில் வரும் உபேந்திரா கொடுத்த வேலையை சிறப்பாக செய்து தியேட்டரில் விசில் சத்தத்தையும் கைதட்டல்களையும் தெறிக்க விட்டிருக்கிறார். அதேபோல் மற்றொரு கெஸ்ட் ரோலில் வரும் ஆமீர் கான் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து கலகலப்பூட்டி சென்றிருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவரது கேமியோ வேறு ஒரு வகையில் ரசிக்க வைத்திருக்கிறது. ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு விட்டு சென்றிருக்கும் பூஜா ஹெக்டே தியேட்டரை நடனமாட வைத்திருக்கிறார்.

வழக்கம்போல் தனது துள்ளலான இசை மூலம் படத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறார் அனிருத். படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே ஹிட் ரகம். குறிப்பாக மோனிகா பாடல் மற்றும் சிக்கிடு பாடல் குத்தாட்டம் போட வைத்திருக்கிறது. அதேபோல் பின்னணி இசையிலும் சிறப்பான முறையில் இசையை கொடுத்து படத்திற்கு உயிர்நாடியாக அமைந்து படத்தையும் உலகத்தரம் வாய்ந்த படமாக மாற்றி இருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகனாக இவரது இசை பார்க்கப்படுகிறது. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் இரவு நேர ஹார்பர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் படத்தின் நீளம் படத்தை பெரிதாக பாதிக்காத அளவுக்கு சிறப்பான முறையில் கத்திரி போட்டு இருக்கிறார். அன்பறிவ் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. 

66

பெரிதாக எதிர்பார்ப்புகள் வைக்காமல் லோகேஷ் கனகராஜ் படமாக எண்ணி அதேசமயம் இதில் ரஜினி என்ன செய்திருக்கிறார் என எண்ணிக்கொண்டு படம் பார்க்க செல்பவர்களுக்கு இந்த படம் நிச்சயமாக ஏமாற்றம் அளிக்காமல் நல்ல விறுவிறுப்பான கேங்ஸ்டர் திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுக்கும். படத்தின் மேக்கிங் மற்றும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை கருவுக்கு இன்னமும் முக்கியத்துவம் கொடுத்து அதே சமயம் ரஜினிக்கான மாஸ் எலிமெண்ட்ஸ்களை இன்னமும் கூட கூட்டி இருந்தால் இன்னமும் இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கும். 

கூலி - ஆரவாரமானவன்!

Actor Rajinikanth Coolie lokesh kanagaraj Movie review
இதையும் படியுங்கள்
Subscribe