Skip to main content

**** யூ சொல்லும் பொண்ணு... MISS யூ சொல்லும் பையன்! பியார் பிரேமா காதல் - விமர்சனம் 

லிவ்-இன்... பிரேக்-அப்... ஹேங்-அவுட்... ஒரு ஷாட் வோட்கா... **** யூ, மிஸ் யூ... இவையெல்லாம் காதலின் லேட்டஸ்ட் வொக்காபுலரி (VOCABULARY). இதையெல்லாம் கேட்டால் கடுப்பாகுபவர்கள் என்றால் உங்களுக்கல்ல பியார் பிரேமா காதல். இதையெல்லாம் இதுவரை கேட்டிராத சிறுவர்கள், குழந்தைகளுக்குமல்ல பியார் பிரேமா காதல். யாருதான்ப்பா பாக்குறது என்றால் இரண்டுக்கும் இடைப்பட்ட இளமை மனதில் வழிபவர்கள், நிகழ் கால மாற்றங்களை ஏற்றுக்கொள்பவர்கள் பார்த்தால் கொண்டாடலாம். (முரட்டு சிங்கிள்ஸ் பார்க்கவேண்டாம், வயிற்றுக்கு நல்லதல்ல).

 

pyar prema kadhalஇத்தனை பில்ட்-அப் கொடுக்குமளவுக்கு பெரிய படமா என்றால், மிக சாதாரணமான, அழகான காதல் படம்தான். நிகழ் காலத்தை அழகாக, நகைச்சுவையாக சொல்லியிருப்பதால் வேறுபடுகிறது இயக்குனர் இளனின் பியார் பிரேமா காதல். "அப்பா... நேத்து நீங்க இல்லாதப்போ ஸ்ரீ யை நான் வீட்டுக்குக் கூப்பிட்டு வந்தேன்" என்று கேசுவலாக தன் தந்தையிடம் சொல்லுமளவுக்கு முற்போக்கான இளம் பெண் சிந்துஜா (ரைஸா வில்சன்). அவரது மாடர்ன் டான்ஸ் ஃப்ரீக் தந்தையாக ஆனந்த்பாபு. "பொண்ணு வேலைக்குப் போறதா.. அதான் என் பையன் சம்பாரிக்கிறானே" என்று தங்கள் மகனுக்குப் பெண் தேடும் பாண்டியன்-ரேகா ஜோடி. அவர்களின் அடக்கமான இளையராஜா - ரஜினியை ரசிக்கும் மகன் ஸ்ரீகுமாராக ஹரிஷ் கல்யாண். ஹரிஷ் கல்யாணுக்கு காதல் அட்வைஸ் சொல்ல 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், அடி, திட்டு எல்லாவற்றையும் வாங்கிக்கொள்ளும் நண்பனாக தீப்ஸ், கடைசி வரை வாயே திறக்காமல் கவனிக்க வைத்த 'இவனே', இவர்கள் தவிர ஆஃபிஸ் பாஸ் சுப்பு பஞ்சு, இந்த சின்ன வட்டத்துக்குள், ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஹரிஷ்-ரைஸா இடையில் நடக்கும் காதல், மோதல், லிவ்-இன், பிரேக்-அப் கதைதான் படம்.

 

ppk inside'யுவன் இஸ் பேக்' என்று பல படங்கள் வரும்போதும் சொன்னார்கள். உண்மையில் இந்தப் படத்தில் சொல்லலாம், ஆனாலும் பழைய யுவன் வேற லெவல்தானே. தனது தயாரிப்பு என்பதாலோ என்னவோ இசையை அள்ளித் தெளித்திருக்கிறார் யுவன். 'ஹே பெண்ணே', 'டோப் ட்ராக்' இரண்டும் தியேட்டரில் அதிக லைக்ஸ் வாங்குகின்றன. பின்னணி இசையாக வரும் சின்னச் சின்ன பாடல்கள் யுவன் ஸ்பெஷல். இருந்தாலும் ஆங்காங்கே பின்னணி இசைக்கு பதிலாக மௌனம் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஹரிஷ், ரைஸா இருவரும் பாத்திரங்களில் மிக அழகாகப் பொருந்துகிறார்கள், எளிதாக நடித்திருக்கிறார்கள். ரைஸாவுக்கு அதீத மேக்-அப்பும் ஹரிஷுக்கு நடனமும் குறையாக இருக்கின்றன. மற்றபடி இருவருக்குமான கெமிஸ்ட்ரி நல்ல மார்க் வாங்குகிறது, ஹார்டின் ஸ்மைலீ போடலாம். நடிகர்களில் யாரும் குறைவைக்கவில்லை. நண்பனாக வரும்  தீப்ஸ், இவனே, அலுவலக ஹவுஸ்கீப்பிங் அக்கா பாத்திரங்கள் கவனிக்கவைக்கின்றன.

 

 


ராஜா பட்டாச்சார்ஜீயின் ஒளிப்பதிவில் படம் மேலும் அழகாகிறது. ஒவ்வொரு காட்சியுமே அழகிய ஃபோட்டோ ஃப்ரேம் போல இருக்கின்றது. இந்த அழகில் ஆடை வடிவமைப்பாளர்கள் மகேஸ்வரி, நிசார்க்கும் பங்கு இருக்கிறது. நடுத்தர குடும்ப இளைஞன் என்றாலும் அத்தனை சட்டைகளில் ஒன்றைக் கூட திரும்ப அணியாதது...? இன்னும் யதார்த்தத்துக்கு தூரம்தான்.

  ppk2மாடர்ன் பெண் என்றாலும் அவள் பார்வையில் உள்ள நியாயங்கள், விட்டுச் செல்லும் இளைஞன் என்றாலும் அவன் பக்கம் இருக்கும் தேவை என எல்லாவற்றையும் சமமாக சொன்னதெல்லாம் சரிதான். ஆனால், அவர்களுக்குள் ஏற்படும் பிரிவு நம்மை பாதிக்கவேயில்லையே? அந்த அளவுக்கு விளையாட்டுத்தனமாகவே சென்றதுதான் காரணம். க்ளைமாக்ஸில் இன்னும் அடுத்த படி சென்று விளையாடியிருக்கிறார்கள். மற்றபடி பியார் பிரேமா காதல்... ஒரு ஸ்வீட் அனுபவம்தான்... பெற்றோருக்கும், சிங்கிள்ஸுக்கும் கசக்கலாம். 'ஓ காதல் கண்மணி'யின் தங்கை, 'சிவா மனசுல சக்தி'யின் அக்கா இந்த 'பியார் பிரேமா காதல்'.    

 

 

                                                             

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

மிஸ் பண்ணிடாதீங்க