ADVERTISEMENT

ஆணும் பெண்ணும் அளவாகப் பழகினால்... பப்பி சொல்லும் பாடம்! பப்பி - விமர்சனம்

12:10 PM Oct 21, 2019 | santhosh

அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து வரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் வெளிவந்துள்ள 'பப்பி' படம் ஹாட்ரிக் ஹிட்டானதா?

ADVERTISEMENT

ADVERTISEMENT

வயசுக் கோளாறினால் ஆபாசப் படங்கள் மேல் நாட்டம் கொண்ட இன்ஜினியரிங் மாணவராக நாயகன் வருண். வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்து மாட்டி, கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இருந்தும் இதை பற்றியெல்லாம் கவலைப்படாத அவரோ எப்படியாவது திருமணத்திற்கு முன்பே எப்படியாவது யாருடனாவது உடலுறவு கொண்டுவிட வேண்டும் என்ற ஆசையோடு இருக்க, அவருக்கு கூடவே இருக்கும் நண்பர் யோகிபாபு உதவி புரிகிறார். இதற்கிடையே வருண் வீட்டின் மேல் போர்ஷனில் புதிதாகக் குடி வருகிறது நாயகி சம்யுத்தா ஹெக்டே குடும்பம். யோகிபாபு தரும் ஐடியா வேலை செய்கிறது. வருண் - சம்யுக்தா உறவு எல்லை மீறுகிறது. தொடரும் விளைவுகள் என்ன, இந்தக் கதைக்கும் 'பப்பி' என்ற டைட்டிலுக்கும் என்ன சம்மந்தம் என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

முழுக்க முழுக்க இளைஞர்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் டீனேஜ் பருவத்தில் இளைஞர்களுக்கு வயசுக்கோளாறினால் ஏற்படும் பாதிப்பை எப்படி கையாளவேண்டும் என்பதை சற்று ஜாலியாக இரட்டை அர்த்த வசனங்களோடு சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். இருந்தும் எங்கும் முகம் சுழிக்க வைக்கும் ஆபாச காட்சிகள் வைக்காமல் இயக்கியுள்ளார் 'முரட்டு சிங்கிள்' என்ற இயக்குனர் நட்டு தேவ். எந்த ஒரு பெரிய ட்விஸ்ட்டும் வைக்காமல் இளைஞர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே ஜாலியாக கதையை நகர்த்தி கடைசியில் தாய்மையின் மகத்துவத்தை சொல்லி சென்டிமெண்டாக படத்தை முடித்துள்ளார். படம் முழுவதும் 'வேற' மாதிரி கொண்டுபோய் இறுதியில் ஒரு நல்மெசேஜ் வைத்துவிட்டால் நல்ல படம் என்று வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறதா?

சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் வருண் இதில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். டீனேஜ் பையன்களுக்கே உண்டான துடுக்கான நாட்டி பாயாக நடித்துள்ளார். 2K கிட்ஸ் காலத்து இளம்பெண்ணுக்குள் சற்றே 90ஸ் கிட்ஸ் மனநிலையை மிக்ஸ் செய்த கதாபாத்திரத்தில் நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே குறையில்லாமல் நடித்துள்ளார். இந்தப் படத்திலும் யோகிபாபு இருக்கிறார்; படம் முழுவதும் வருகிறார்; கலகலப்பூட்டுகிறார்; ஒரு படி மேலே போய் அழவும் வைத்துள்ளார். தாய்மையின் உன்னதத்தை புரியவைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பப்பி' என்ற நாய் சில இடங்களில் சிறப்பாக நடித்துள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி, நித்யா, வெங்கடேஷ், ரிந்து ரவி ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்துள்ளனர். தரண்குமாரின் பின்னணி இசை இளைஞர்களை கவர்ந்துள்ளது. தீபக் குமார் பாடியின் ஆக்டிவான ஒளிப்பதிவில் காட்சிகள் வேகம்.

டபுள் மீனிங் வசனங்கள், யூத் சேட்டைகள் என ஜாலியாக ஆரம்பிக்கும் படம் போகப் போக செண்டிமெண்ட் ரூட்டிற்கு மாறி காதல், பாசம், தாய்மை என நிறைவாக முடிந்துள்ளது. 'ஆதலால் காதல் செய்வீர்' படம் சொன்ன பாடத்தை இளைஞர்களுக்குப் பிடித்த வகையில், ஒரு உயிரைக் கொல்வது என்பது எவ்வளவு தவறானது, இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் இருக்க ஒரு ஆணும் பெண்ணும் எப்படி கட்டுப்பாட்டுடன் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வையும், பப்பி நாய் மூலமாக தாய்மையின் உன்னதத்தையும் தெளிவாக காட்ட முயற்சி செய்துள்ளது 'பப்பி'.

பப்பி - ஜாலியான பாடம்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT