ADVERTISEMENT

கந்துவட்டி கும்பலின் நிழலுலகம்... - பொதுநலன் கருதி விமர்சனம் 

05:48 PM Feb 09, 2019 | santhosh

ADVERTISEMENT

கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து எரிந்ததை யாரும் அவ்வுளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த அளவு இந்த கந்து வட்டிக் கொடுமை தமிழகம் முழுவதும் புற்றுநோய் போல் பரவி எளிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அப்படி வாட்டி வதைக்கும் கந்துவட்டிக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்மந்தம்...?

ADVERTISEMENT

கந்துவட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்துவரும் நிழல் உலக தாதாக்கள் யோக் ஜெப்பி மற்றும் பாபு ஜெயனுக்கு இடையே கடுமையான தொழில் போட்டி நடந்து வருகிறது. இதில் யோக் ஜெப்பியின் கைத்தடியாக வரும் நடிகர் சந்தோஷ் பிரதாப் மக்களிடம் ஈவு இரக்கம் இன்றி கறாராகப் பணம் வசூலித்து வருகிறார். ஒரு பக்கம் காணாமல் போன தன் அண்ணனைத் தேடி வருகிறார் நடிகர் கருணாகரன். இன்னொரு பக்கம் நடிகர் அருண் ஆதிக் நடிகை சுபிக்ஷாவை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். மறுபுறம் பாபு ஜெயின் யோக் ஜெப்பியை கொல்லத் துடிக்கிறார். இதையடுத்து இவர்கள் அனைவரும் எப்படி ஒரு புள்ளியில் இணைகின்றனர், கந்துவட்டி கொடுப்பவர்கள் மற்றும் அந்தக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பதே 'பொதுநலன் கருதி'.

ஒரு நல்ல கதையை நான் லீனியர் திரைக்கதை மூலம் ரசிக்கவைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சீயோன். நடுத்தர வர்க்கத்தை சார்ந்த எளிய மக்கள் சூழ்நிலை காரணமாக எப்படி கந்துவட்டி கும்பலிடம் சிக்கி தங்களது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிக் கொள்கிறார்கள் என்பதையும், கந்துவட்டி கும்பலுக்குப் பின்னால் இருக்கும் நிழல் உலக தாதாக்கள் எப்படி தங்களை போலியாக மக்கள் முன் நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பதை 'ரா'வாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் சீயோன். ஒவ்வொரு காட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒரு புதுவிதமான திரைக்கதையை கையாண்டு இருப்பது சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் பல இடங்களில் குழப்பம் நிறைந்திருப்பது சற்று அயர்ச்சியை ஏற்படுத்துவதுபோல் தோன்றுகிறது. கந்துவட்டிக் கும்பலுக்குப் பின்னால் உள்ள தாதாக்களின் பிரச்சனைகளை சற்று அதிகமாகவே விவரித்திருக்கிறார்கள், குறைத்திருக்கலாம். மேலும் காட்சிகளில் காலநேரத்தை சரியாக உணர்த்தியிருந்தால் படம் இன்னும் நம்பகத்தன்மையுடன் இருந்திருக்கும். படத்தின் நாயகிகள் தேர்வு படத்திற்கு சற்று பின்னடைவாகவே அமைந்துள்ளது. இருந்தும் திரைக்கதையின் வேகம் இதையெல்லாம் ஓரளவு மறக்க செய்து ரசிக்க செய்வதையும் மறுக்கமுடியாது.

கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதிக் ஆகிய மூவரும் படத்தின் நாயகர்களாக நடித்துள்ளனர். படம் முழுவதும் தனித்தனியே வந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாயகிகள் அனுசித்தாரா, சுபிக்ஷா, லீசா ஆகியோர் இவர்களைப்போலவே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் ஏனோ கதையோடு இவர்கள் கதாபாத்திரம் ஒட்டாமல் சற்றே தள்ளி நிற்கிறது. மிரட்டல் தாதாவாக வரும் யோக் ஜெப்பி தனக்கு கொடுத்த கனமான கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். இமான் அண்ணாச்சி, முத்துராம், சுப்புரமணியபுரம் ராஜா ஆகியோர் நடிப்பில் இவர்களுக்கு நன்றாக ஒத்துழைத்துள்ளனர். ஹரி கிருஷ்ணனின் பின்னணி இசை காட்சிகள் வேகமெடுக்க உதவியுள்ளது.

பணம் படைத்தவர்கள் பணம் இல்லாதவர்களிடம் அதிகாரம் செலுத்தி, கொடுத்த பணத்தை வசூல் செய்கிறேன் என்ற பெயரில் பல குடும்பங்களை திக்கற்று திசை தெரியாமல் எப்படி வீழ்த்துகிறார்கள் என்பதையும், கந்துவட்டி கும்பலுக்குப் பின்னால் உள்ள நிழல் உலக தாதாக்கள் பற்றியும் சொல்ல வந்த தைரியத்திற்காகவே இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

பொதுநலன் கருதி - நல்ல முயற்சிக்காக ஆதரிக்கலாம்...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT