Advertisment

கல்லூரி மாணவர்களின் ஈகோ சண்டை ரசிக்க வைத்ததா? - ‘போர்’ விமர்சனம்

Por movie Review

Advertisment

இயக்குனர் மணிரத்னம் உதவியாளர் பிஜாய் நம்பியார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கியுள்ள திரைப்படம் போர். கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது?

சிறுவயதில் பள்ளியில் நண்பர்களாக இருக்கும் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஆகியோர் பின்னாளில் எதிரிகளாக மாறுகிறார்கள். கல்லூரியில் சீனியர் மாணவராக இருக்கிறார் அர்ஜுன் தாஸ். அதே கல்லூரியில் ஜூனியர் மாணவராக வந்து சேரும் காளிதாஸ் அர்ஜுன் தாஸைபழி வாங்க துடிக்கிறார். இதனால் சீனியர் கேங்குக்கும் ஜூனியர் கேங்குக்கும் முட்டல் ஏற்படுகிறது. இந்த சண்டை போக போக,ஈகோ மோதலாக மாறி இதற்கு இடையே வரும் காதல், நட்பு, துரோகம் என பிரச்சனை பெரிதாகி கடைசியில் ஒரு போராக மாறுகிறது. இந்தப் போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே இப்படத்தின் மீதி கதை.

கல்லூரியில் இருக்கும் மாணவர்களின் நட்பு, காதல், துரோகம், சண்டை என அனைத்து விதமான உணர்ச்சிகளை வைத்து படம் உருவாக்கி இருக்கும் பிஜாய் நம்பியார் அதை தன் சிறப்பான மேக்கிங் மூலம் உலகத்தரம் வாய்ந்த படமாக கொடுத்திருக்கிறார். படத்தின் மேக்கிங்கில் அதிக கவனம் செலுத்தி இருக்கும் அவர் ஏனோ திரைக்கதையில் சற்றே கோட்டை விட்டு இருக்கிறார். முழு படத்தையும் ஈகோ சண்டையை வைத்து நகர்த்தி இருக்கும் இயக்குநர் அதை இன்னும் கூட ரசிக்கும் படி கொடுத்திருக்கலாம். ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் அவர் திரைக்கதையிலும் அதே மெனக்கடலை கொடுத்து படத்தை உருவாக்கி இருந்தால், இன்னமும் கூட சிறப்பாக அமைந்திருக்கும். கூடவே கல்லூரியில் மாணவர்கள் படிக்கும்படியான காட்சிகளை காட்டிலும் போதைப்பொருள் பயன்பாடு, சண்டை, வன்முறை போன்ற காட்சிகள் படத்தில் அதிகம் வருவதும் சற்றே அயர்ச்சியை கொடுத்திருக்கிறது. மற்றபடி படத்தில் நடித்த நடிகர்களின் பங்களிப்பு படத்தின் மேக்கிங் ஆகியவை மிகச் சிறப்பாக அமைந்து படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

Advertisment

சீனியர் மாணவராக வரும் அர்ஜுன் தாஸ் படம் முழுவதும் மாஸ் காட்டி இருக்கிறார். அவருக்கு என தனி கூட்டம் அமைத்து அதற்கு நடுவே ராஜா போல் வலம் வருகிறார். மாணவராக இவர் நடிக்கும் நடிப்பை விட, லீடராக நடித்திருக்கும் நடிப்பு நன்றாக இருக்கிறது. பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். சின்ன சின்ன முக பாவனைகள் கூட எரிச்சல் ஊட்டும் படி கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார். நாயகிகள் சஞ்சனா நடராஜன் டி ஜே பானு ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். சீனியர் மாணவியாக வரும் சஞ்சனா நடராஜன் கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கிறார். முன்னாள் மாணவியாக வரும் டி ஜே பானு அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்து இருக்கிறார். மற்றபடி உடன் நடித்த மற்ற மாணவ மாணவியர் மற்றும் நடிகர்கள் ஆகியோர் அனைவரும் நிறைவான பங்களிப்பைகொடுத்திருக்கின்றனர்.

ஜிம்சி காலித், பிரிஸ்லி ஆஸ்கர் டிஸோசா ஆகியோரது ஒளிப்பதிவில் படம் உலகத்தரம். கல்லூரி சம்பந்தப்பட்ட ஃபெஸ்டிவல் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரக்காட்சிகள் தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சச்சிதானந்த சங்கரநாராயணன், ஹரிஷ் வெங்கட், கௌரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் சுமார் பின்னணி இசை ஓகே. படத்தின் இறுதியில் வரும் இளையராஜா பாடல் சிறப்பாக அமைந்திருக்கிறது.

படம் முழுவதும் வெறும் ஈகோ பிரச்சனையை மையமாக வைத்து அதனுள் காதல், நட்பு, சோகம், வெறுப்பு, சண்டை என பல்வேறு உணர்ச்சிகளை கலந்து கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் அதை இன்னமும் கூட சிறப்பாக கொடுத்து இருக்கலாம்.

போர் - சற்றே போர்

kalidas jayaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe