/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/njl.jpg)
மாதாமாதம் குறைந்தபட்சம் ஒரு நான்கு சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்கில் வெளியாகின்றன. இதில் எத்தனை படங்கள் ஜொலிக்கிறது, எத்தனை படங்கள் வந்த தடமே தெரியாமல் செல்கின்றன என்பதும் நாம் அறிந்ததே. ஆனாலும் விதிவிலக்காக அவ்வப்போது ஏதோ ஒரு படம் சிறப்பாக எடுக்கப்பட்டு பெரிய படங்களுக்கு நிகராக நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெறும். அந்தவகையில் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு சிறிய பட்ஜெட் படம் தான் 'பூ சாண்டி வரான்'.
மலேசியாவில் வாழும் தமிழர்கள் அவ்வப்போது அங்கேயே படங்களைத் தயாரித்து இயக்கி வெளியிடுவது வழக்கம். அதில் சில படங்கள் வெற்றியும் பல படங்கள் தோல்வியும் பெறும். அப்படி அங்கு வெற்றி பெற்ற பூ சாண்டி வரான் படத்தைக் கடல் கடந்து இந்தியாவிலும் வெளியிட்டுள்ளனர். இது ஒரு வழக்கமான ஹாரர் படம். ஆனால் வழக்கமாக நாம் கடந்து சென்றுவிடும் படமாக இருக்கிறதா என்றால்? இல்லை! என்றே சொல்ல வைத்துள்ளது.
நண்பர்கள் மூவர் அவுஜா போர்ட்டில் ஒரு பழங்கால நாணயத்தை வைத்து ஆவியுடன் பேச முயற்சிக்கின்றனர். அப்போது மல்லிகா என்ற ஆவி அவர்களிடம் பேசுகிறது. அப்போது நண்பர்களின் ஆசைகளை அந்த ஆவி நிறைவேற்றுவதாகக் கூறி அதற்கு பதிலாக தனக்கு ஒரு பலி கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. நண்பர்களும் அந்த ஆவி தங்களது ஆசையை நிறைவேற்றும் என்று நம்பி அதற்கான வேலையில் இறங்கும் நேரத்தில், மர்மமான முறையில் அதிலிருக்கும் ஒரு நண்பர் இறந்து விடுகிறார். அதேநேரம் இறந்ததாகக் கூறப்படும் மல்லிகா உயிரோடு இருக்கும் விஷயம் நண்பர்களுக்குத் தெரியவருகிறது. அப்போது இவர்களிடம் பேசிய அந்த ஆவி யார், அதற்கு உண்மையில் என்ன வேண்டும், நண்பர்களின் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தில் நடித்த நடிகர்கள் நமக்கு பரிட்சியம் இல்லாத புதுமுகங்களாக இருந்தாலும் கதைக்கும், கதையோட்டத்திற்கும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்துச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை விறுவிறுப்பாக எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் விக்கியின் சிறப்பான திரைக்கதை அமைப்பே ஆகும். அந்த அளவு நேர்த்தியான தொய்வில்லாத திரைக்கதை மூலம் ரசிகர்களைப் படத்தை விட்டு நகராமல் பார்த்துக் கொண்டுள்ளார். படத்தில் பாடல்கள் இல்லை, தேவையற்ற கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை. ஒரு சிறிய குழுவை வைத்துக்கொண்டு மிகவும் காம்பாக்ட் ஆன கதையைத் தயார் செய்துகொண்டு அதைச் சிறப்பாகக் கையாண்டு மினிமம் பட்ஜெட்டில் தரமான படத்தைக் கொடுத்துள்ளனர் படகுழுவினர். சிறிய படம் என்பதால் ஆங்காங்கே சில இம்மெச்சூரிட்டியான விஷயங்கள் தென்பட்டாலும் கதையும் கதையாடலும் ரசிக்கும்படி இருப்பதால் அவை எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிடுகிறது. குறிப்பாகக் கதையே படத்தின் நாயகனாக இருப்பது படத்திற்கு ப்ளஸ் ஆக மாறி இருக்கிறது.
படத்தில் வரும் மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், மல்லிகாவாக ஹம்சினி பெருமாள் என அனைவரும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர். டஸ்டின் ரிதுவான் ஷாவின் பின்னணி இசை மிரட்டல். அசலிஷம் பின் முகம்மது அலியின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் திகிலூட்டுகின்றன. குறிப்பாக அவுஜா போர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பு. மொத்தத்தில் பூ சாண்டி வரான் நாம் கவனிக்காமல் கடந்து சென்றுவிட முடியாத ஒரு சுவாரஸ்யமான ஹாரர் படம்.
பூ சாண்டி வரான் - பாஸ் மார்க்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)