Skip to main content

எப்படி இருக்கிறது தமிழ் சினிமாவின் கனவுப் படம்..? பொன்னியின் செல்வன் விமர்சனம்

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

 

Ponniyin Selvan part 1 Review actor jayam ravi

 

தமிழ் சினிமாவில் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை பல்வேறு நாயகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முயன்றும் படமாக்க முடியாத அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வெற்றிகரமாக படமாக்கி முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். அவ்வளவு பெரிய நாவலை எப்படி ஒரு படமாக சுருக்க முடியும் என்ற மிகப்பெரிய ஐயத்தை அசால்டாக முறியடித்து இருக்கிறார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வனை உருவாக்கி அதன் முதல் பாகத்தை தற்போது வெளியிட்டு இருக்கும் மணிரத்னம், நாவல் கொடுத்த அதே பரவசத்தை வெள்ளித்திரையிலும் கொடுத்துள்ளாரா...?

 

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காதல், பாசம், நட்பு, அதிகாரப் போட்டி, சூழ்ச்சி, பேராசை, வெற்றி என அனைத்தையும் வந்தியத்தேவனின் பயணங்கள் வாயிலாக காட்சிப்படுத்துகிறது படம். நோய்வாய்ப்பட்ட மன்னர் சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், அவரது மகன் ஆதித்த கரிகாலன் விக்ரம் வடக்கில் போர் புரிந்து ஒவ்வொரு நாடுகளாக கைப்பற்றி வருகிறார். இவருக்கு நண்பராகவும், போரில் உதவியாகவும் இருக்கும் வந்தியத் தேவனான கார்த்தியை சோழ நாட்டில் அரியணையை கைப்பற்ற நடக்கும் சூழ்ச்சிகளைப் பற்றி அறிந்து, அதை மன்னர் சுந்தர சோழன் மற்றும் தங்கை குந்தவையிடம் கூற தூது அனுப்புகிறார். அங்கிருந்து கிளம்பும் வந்தியத்தேவன், வழியில் சின்ன பழுவேட்டரையர் பார்த்திபன், பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நந்தினியை சந்தித்து விஷயங்களை சேகரித்துக் கொள்கிறார்.

 

பிறகு அங்கிருந்து கிளம்பும் வந்தியத்தேவன், சுந்தர சோழனையும், குந்தவையையும் சந்தித்து விஷயங்களை தெரிவித்துவிட்டு பிறகு அங்கிருந்து இலங்கையில் இருக்கும் பொன்னியின் செல்வனை சந்தித்து சோழ நாட்டுக்குள் நடக்கும் சூழ்ச்சிகள் குறித்து தெரிவிக்கிறார். இதையடுத்து ஆதித்த கரிகாலனால் கொலை செய்யப்பட்ட பாண்டிய மன்னரின் படைத்தலைவன் தலைமையிலான ஒரு படையினர் சோழ சாம்ராஜ்யத்தை முற்றிலுமாக அழிக்க சபதம் எடுக்கின்றனர். இன்னொரு புறம் பெரிய பழு வேட்டரையர் சிற்றரசர்களோடு சேர்ந்துகொண்டு சுந்தர சோழனின் அண்ணன் மகன் மதுராந்தகனை அரியணையில் அமர செய்ய திட்டமிடுகின்றார். அதேபோல் பெரிய பழுவேட்டறையர் மனைவி நந்தினியும் அதிகாரத்தின் மீது ஆசைப்படுகிறார். இப்படி இருக்கும் சூழலில் சோழ சாம்ராஜ்யத்திற்கு இவர்களால் அடுத்தடுத்து என்ன பாதகம் ஏற்படுகிறது? இவர்களின் சூழ்ச்சியில் இருந்து மன்னர் குடும்பம் தப்பித்ததா, இல்லையா? என்பதை பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் மீதி கதை.

 

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள் சோழ சாம்ராஜ்யத்தை காட்சிப்படுத்தி பிரம்மாண்டமாக மனதுக்குள் ஓட விட்டு பரவசப்பட்டுக் கொள்வர். அப்படி மனதுக்குள் கண்ட அதே பிரம்மாண்டத்தையும், அதே பரவசத்தையும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மூலம் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். ஐந்து பாகங்கள் கொண்ட இந்த கதையில் உள்ள முதல் இரண்டு பாகங்களை இப்படத்தில் சுருக்கி அதேசமயம் அதை ரசிக்கும் படியும் கொடுத்து இந்தியாவை திரும்பிப் பார்க்க செய்துள்ளார். க்ளீஷேவான ஹீரோயிசம் காட்டும் பிரம்மாண்ட சண்டை காட்சிகள், பஞ்ச் வசனங்கள், காதல் காட்சிகள் என போகாமல் தன்னுடைய ட்ரேட்மார்க் விஷயங்களை திரைக்கதைக்குள் உட்பகுத்தி, கிளாஸான ஒரு விஷுவல் ட்ரீட் கொடுத்துள்ளார் மணிரத்னம். தமிழரின் பெருமையை பேசும் இந்த நாவலை படமாக்கிய விதத்தையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை சரியான விகிதத்தில் காட்சிப்படுத்தி அவைகளை ஆழமாகவும் அதேசமயம் அழுத்தமாகவும் காட்டி பெர்ஃபார்மன்ஸ் ஓரியன்டட் மூவியாக படத்தை கொடுத்து ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்துள்ளார்.

 

குறிப்பாக எந்த ஒரு முக்கியமான காட்சிக்கும் பில்டப்புகளை கூட்டாமல் ஜஸ்ட் லைக் தட் ஆக திரைக்கதை அமைத்து காட்சிகளை எவ்வளவுக்கு எவ்வளவு ரியலிஸ்ட்டிக்காக அமைக்க முடியுமோ அந்த அளவு ரியலிஸ்டிக்காக அமைத்து காட்சிகளுக்கு உயிரூட்டி படத்தை சேஃபாக கரை சேர்த்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இருந்து பாகுபலி, கன்னட சினிமாவிலிருந்து கே ஜி எஃப் போன்ற படங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க செய்து தென்னிந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. அந்த சமயம் தமிழில் இப்படி ஒரு படம் எப்போது வெளியாகும் என்று தமிழ் ரசிகர்களுக்கு ஏக்கமாக இருந்தது. தற்போது அந்த ஏக்கத்தை மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் -1 தீர்த்து வைத்தது மட்டுமில்லாமல் ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது. இருந்தும் படத்தின் இரண்டாம் பாதியில் சற்று ஆங்காங்கே அயற்ச்சி ஏற்படுவது மட்டும் படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருந்தாலும் கதையின் ஓட்டம் இதை மறுக்கடித்த செய்து விடுகிறது.

 

இப்படத்தின் மிகப்பெரிய பலமே கதாப்பாத்திர தேர்வு தான். இதில் நடித்த அனைத்து நடிகர்களுமே அந்தந்த கதாபாத்திரமாகவே மாறி சிறப்பான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளனர். ஆதித்த கரிகாலன் விக்ரம் ஒரே நேரத்தில் கோபம், சோகம், வெறுப்பு என உணர்ச்சி பொங்கும்படியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். வந்தியத்தேவன் கார்த்தி எளிமையான நடிப்பை மிக யதார்த்தமாக வெளிப்படுத்தி பார்ப்பவர்களை சிரிக்கவும், மெய்சிலிர்க்கவும் வைத்துள்ளார். அருண்மொழி வர்மனாக  வரும் ஜெயம் ரவி பல இடங்களில் சற்றே அடக்கி வாசித்து அதே சமயம் பல வித்தைகளை சரியான நேரத்தில் அவ்வப்போது வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். பெரிய பழுவேட்டரையர் சரத்குமார், சிறிய பழுவேட்டரையர் பார்த்திபன் தங்களுக்கு இருந்த ஸ்பேசில் சரியான அளவில் ஸ்கோர் செய்துள்ளார். ஆழ்வார்கடியானாக வரும் ஜெயராம் தாங்கி தாங்கி நடந்து கொண்டு வசனம் பேசி ஜனரஞ்சகமான நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தி சென்றுள்ளார். பாண்டிய நாட்டு படைத்தலைவனாக வரும் கிஷோர் மற்றும் அவரது படையினர் சில காட்சிகளை வந்தாலும் மிரட்டி உள்ளனர். இவர்களுடன் பார்த்திபேந்திர பல்லவன் விக்ரம் பிரபு, பெரிய வேளாளர் பிரபு, மதுராந்தகன் ரகுமான், சேந்தன் அமுதன் அஷ்வின் உட்பட அனைவரும் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

 

ஆண்களுக்கு இணையான முக்கியத்துவம் பெற்ற பெண்கள் கதாபாத்திரங்களும் இப்படத்தின் நாயகர்களாக ஜொலித்துள்ளனர். குறிப்பாக வழக்கமான நாயகிகளாக இல்லாமல் மன வலிமையில் சிறந்தவர்களாக இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய் பேரழகில் மயங்க செய்து கிடைக்கின்ற கேப்பில் எல்லாம் சூழ்ச்சி அழகில் இருக்கும் பேராபத்தை அழகாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றுள்ளார். எந்த இடத்தில் எவ்வளவு உணர்ச்சிகள் தேவைப்படுகிறதோ அதனை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி, அமைதியான பெருங்கடலில் நீந்தி செல்லும் படகை போல் அழகான நடிப்பை வெளிப்படுத்தி பேரழகான வில்லத்தனம் காட்டியுள்ளார்.

 

இவருக்கு சரியான நிகரான குந்தவை கதாபாத்திரத்தில் வரும் த்ரிஷா புத்திசாலித்தனமான நடிப்பை திறன் பட செய்து காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளார். இவரது அனுபவ நடிப்பு கதாபாத்திரத்திற்குள் இருக்கும் பல்வேறு உணர்ச்சிகளை முக பாவனைகள் மூலம் அழகாக வெளிப்படுத்தி காட்டியுள்ளது. பூங்குழலியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி அப்பாவியான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். திரிஷாவின் தோழியும் கொடும்பாளூர் இளவரசியமான துலிபாலா நடிப்பில் பளிச்சிடுகிறார். ஒரு தலையாக அருள்மொழிவர்மனை காதலிக்கிறார். சிறிய காட்சியில் தோன்றினாலும் மனதில் பதியும்படி நடித்துள்ளார் நடிகை ஜெயசித்ரா. 


இப்படத்தின் இன்னொரு நாயகர்கள் பார்க்கப்படுவது ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோர். ஒவ்வொரு பிரேமையும் அழகாகவும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். அதேபோல் ஆடி, பாடி, சிலிர்ப்பூட்டி கிரங்கடிக்கும் பாடல்களாலும், பரவசமூட்டும் பின்னணி இசையாலும் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு அவரவர்களுக்கான பின்னணி இசையை சிறப்பாக அமைத்து அதை படம் முழுவதும் படர செய்து படத்திற்கு மிகப்பெரிய வலுவை சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

 

நாவலை பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் படத்தை காண திரையரங்குக்கு சென்றால் நிச்சயம் திரையில் மேஜிக் தான்.

 

பொன்னியின் செல்வன் - கௌரவம்!

 

சார்ந்த செய்திகள்