Advertisment

பொன்னியின் செல்வன் 2 - விமர்சனம்!

ponniyin selvan 2 review

Advertisment

முதல் பாகத்தில் நந்தினியை மறக்க முடியாத ஆதித்த கரிகாலன், ஒவ்வொரு நாடுகளாய் கைப்பற்றி தனது எதிரிகளை அழித்து வெறியை ஒரு பக்கம் குறைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இலங்கையில் இருக்கும் அருள்மொழி வர்மனை குந்தவையின் ஆணைக்கிணங்க அழைத்து வரச் சென்றிருக்கும் வந்தியத்தேவன், இன்னொரு பக்கம் வீரபாண்டியரை கொன்றதற்காக பாண்டியர்களை பழிவாங்க சதி செய்து கொண்டிருக்கும் நந்தினி.மற்றொரு பக்கம் சிற்றரசர்கள் ஒன்று கூடி மதுராந்தகனை அரியணையில் அமர வைக்கபோடும் சதித்திட்டம் எனக் கதை சூடுபிடிக்க ஆரம்பிக்கும் சமயத்தில், இலங்கையில் இருந்து தஞ்சைக்குஅருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும்வரும் கப்பல்கடலில் மூழ்கி விடுகிறது. இதன் பிறகு தன் தம்பியைகடலில் மூழ்கச் செய்த நந்தினியை பழி தீர்க்க ஆதித்த கரிகாலன் தன் படைகளுடன் கிளம்புகிறார். அதோடு முதல் பாகம் முடிவடைகிறது. இதன்பின் என்ன நடந்தது என்பதை பொன்னின் செல்வன் இரண்டாம் பாகம் விளக்குகிறது.

கடலில் சிக்கிய வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன் ஆகிய இருவரையும் ஊமை ராணி காப்பாற்றுகிறார். இதை அறிந்து கொண்ட நந்தினி பாண்டியர்களோடு சேர்ந்து கொண்டு சதி செய்து சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன் ஆகியோரை பௌர்ணமி அன்று ஒரே நேரத்தில் கொலை செய்ய திட்டமிடுகிறார். இதை அறிந்து கொண்ட வந்தியத்தேவன் விஷயத்தை சோழர்களிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து இந்த கொலை சதியில் இருந்து யாரெல்லாம் தப்பித்தார்கள்? இறுதியில் மன்னராக யார் முடி சூடியது? என்பதே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் மீதி கதை.

முதல் பாகத்தில் அனைவரின் அறிமுகக் காட்சியையும் முழுப் படமாக விவரித்த இயக்குநர் மணிரத்னம். இரண்டாம் பாகத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்படி திரைக்கதை அமைத்து ரசிகர்களை சோழ தேசத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார். காட்சிக்கு காட்சி கூஸ்பம்ப் கொடுக்கும்படியான மொமண்ட்ஸ்கள் நிறைய இருந்தாலும் அப்படியான கமர்சியல் விஷயங்களை எதையும் செய்யாமல் ஜஸ்ட் லைக் தட் கதையோடு டிராவல் செய்து, நாம் ஏதோ அந்த சோழ தேசத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டு அங்கு நடக்கும் சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் காட்சிகளை கொடுத்து உலகத்தரம் வாய்ந்த ஃபீல் குட் சரித்திர படத்தை கொடுத்து இந்தியாவை திரும்பிப் பார்க்க செய்துள்ளார் இயக்குநர் மணிரத்தினம். ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அவரவர்களுக்கான ஸ்பேஸை சரியான இடங்களில் கொடுத்து அவர்களிடம் சிறப்பான நடிப்பை வாங்கி காட்சிகளுக்கு மட்டும் அல்லாமல் திரைக்கதைக்கும் உயிரூட்டி மனதுக்கு நெருக்கமான ஒரு காவியத்தை கொடுத்துள்ளார்.

Advertisment

ponniyin selvan 2 review

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைப் படிக்கும் பொழுது எந்த அளவு படிக்க படிக்க ஒரு சுவாரஸ்யம் ஏற்படுமோ அதே சுவாரசியத்தை முடிந்தவரை எவ்வளவு கொடுக்க முடியுமோ அதை கொடுத்து அதே சமயம் மிகைப்படுத்தாமல், காட்சிகளையும் கெடுக்காமல் ஸ்மூத்தான திரைக்கதையோடு காட்சிகளை அமைத்து நிறைவான படமாக பொன்னியின் செல்வனை கொடுத்து கைதட்டல் பெற்றிருக்கிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிக்காதவர்களுக்கும் இப்படம் பிடிக்கும்படி, புரியும்படி கொடுத்திருக்கிறார். அதேசமயம் நாவலை படித்தவர்களுக்கும் அந்தந்த காலகட்டம் எப்படி இருந்திருக்கும் அவர்களின் நிலைப்பாடு, குணாதிசயம், அந்த நிலப்பரப்பு, அவர்களுக்குள் இருந்த பகை, காதல், நட்பு, நேசம், துன்பம், துரோகம் என அத்தனை விஷயங்களையும் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி திரையில் மேஜிக் நிகழ்த்தி இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். மனதிற்கு மிகவும் நிறைவான திரைப்படமாகவும் இப்படம் அமைந்திருக்கிறது. இருந்தும் படத்தில் ஆங்காங்கே மிஸ் ஆகும் மாஸ் எலிமெண்ட்ஸ்கள் மட்டும் படத்திற்கு சற்று வேகத்தடையாக அமைந்திருக்கிறது. அதற்கு பதிலாக படத்தில் வரும் அழுத்தம் நிறைந்த உணர்ச்சிபூர்வமான காட்சிகள் மாஸ் எலிமெண்ட்ஸை மறக்கடிக்க செய்ய முயற்சி செய்துள்ளது.

ஆதித்த கரிகாலனாக விக்ரம் கடும் கோபக்காரனாகவும், பாசமிகு அண்ணனாகவும், நெகிழும் காதலனாகவும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக இவரும் நந்தினி (ஐஸ்வர்யாராயும்) சந்தித்துக் கொள்ளும் காட்சி டாப் நச். பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி) ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார். அரசனுக்கே உண்டான அழகும், தெளிவும், மிடுக்கான தோற்றமும், நடையும், முடியும், வசன உச்சரிப்பும் என அத்தனை விஷயங்களிலும் துல்லியமான நடிப்பை தேவையான இடங்களில் எவ்வளவு உபயோகித்தால் நன்றாக இருக்குமா அந்த அளவு சிறப்பாக உபயோகித்து ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றுள்ளார். படத்தின் நடுவே ஆங்காங்கே அவ்வப்போதுதோன்றினாலும் இவரின் கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்திருக்கிறது. பொன்னியின் செல்வன் என்ற கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக ஜெயம் ரவி அமைந்துள்ளார். தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஜனரஞ்சகமான நடிப்பையும், ஆத்மார்த்தமான நட்பையும், உருகி உருகி செய்யும் காதலையும், பெண்களிடம் செய்யும் சேட்டையையும், சரிவர கலவையில் கொடுத்து கலகலப்பு ஊட்டி உள்ளார் வங்தியத்தேவன் கார்த்தி. கார்த்தி வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக நகர்ந்து திரைக்கதைக்கு வேகம் கூட்டி உள்ளது. அதேபோல் இந்த மொத்த படத்தையும் வந்தியத்தேவன் என்ற ஒரு கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு தன் தோல் மேல் சுமந்து இருக்கிறார் கார்த்தி. அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தொடர்பு ஏற்படும்படியான இந்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

அழகிலும் சரி, நடிப்பிலும் சரி, வசன உச்சரிப்பிலும் சரி, பார்வையிலும் சரி, எங்கு எந்த அளவு நடிப்பு தேவையோ அதை சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுத்து மொத்த படத்தையும் தாங்கி பிடித்துள்ளார் நந்தினி ஐஸ்வர்யா ராய். ஒரு அழகான விஷப்பாம்பு எப்படி எல்லாம் தன் முன் இருப்பதை மயக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொத்துகிறதோ, அதுபோல் தனக்கான நேரத்திற்காக காத்திருந்து ஒவ்வொரு காயாக நகர்த்தி சோழ தேசத்தை பழிவாங்கும் எண்ணத்தோடு வாழ்ந்து மறையும் கதாபாத்திரத்தை மிக எதார்த்தமாகவும், எளிதாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் நடித்து கவர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். இவருக்கு சரியான போட்டியாக நெக் அன் நெக் நின்று கிடைக்கின்ற கேப்புகளில் எல்லாம் கோல் போட்டு தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் குந்தவை த்ரிஷா. நந்தினியின் சூழ்ச்சி எந்த அளவுக்கு கூர்மையாக இருக்கிறதோ அதே அளவு குந்தவையின் அறிவும் கூர்மையாக இருந்து ஒவ்வொரு இடங்களாக தகர்த்தெறியும் அறிவு நிறைந்த குந்தவை கதாபாத்திரத்தை அனுபவ நடிப்பால் அழகாக செய்து இருக்கிறார் திரிஷா. ஐஸ்வர்யா ராய் போல் இந்த வயதிலும் இவ்வளவு அழகாகவும் இருக்கிறார். பூங்குழலியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி பார்ப்பவர்களை கவர்ந்து இழுத்து இருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் இவரின் கனமான கதாபாத்திரம் மனதில் பதிகிறது. அதேபோல் இளவரசி வானதியாக வரும் சோபிதாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஆழ்வார்க்கடியான் நம்பி ஜெயராம், கார்த்தியை போல் படம் முழுவதும் வருகிறார். கிடைக்கின்ற இடங்களில் எல்லாம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து ரசிக்க வைத்துள்ளார். அதேபோல் பெரிய பழுவேட்டரையராக வரும் சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக வரும் பார்த்திபன், மதுராந்தகன் ரகுமான், செம்பியன் மாதேவி ஜெயசித்ரா, பாலாஜி சக்திவேல், சுந்தர சோழர் பிரகாஷ்ராஜ், ஊமை ராணி ஐஸ்வர்யா ராய், பார்ப்பேந்திர பல்லவன் விக்ரம் பிரபு, பெரிய வேளாளர் பிரபு, பாண்டிய நாட்டின் ரவி தாசன் ஆக வரும் கிஷோர், சேர்ந்தன் அமுதன் உள்ளிட்ட பலர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து இக்காவியம் சிறப்பாக வர உதவி புரிந்துள்ளனர்.

ponniyin selvan 2 review

மணிரத்தினத்திற்கு பிறகு இப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இன்னொன்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். தன்னுடைய டிரேட் மார்க் ஒளிப்பதிவு மூலம் இப்படத்தை உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். இவரின் தேர்ந்த காட்சி அமைப்புகளும் அழகான ஃபிரேம்களும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. குறிப்பாக இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேற லெவலில் காட்சி அமைத்து திரையில் மேஜிக் நிகழ்த்தி இருக்கிறார். முதல் பாகத்தில் அதிக பாடல்கள் இருந்தது அவை ரசிக்கும் படியும் இருந்தது. இந்த பாகத்தில் பாடல்கள் குறைவு, கிடைக்கின்ற கேப்புகளில் சிறிய பாடல்களாக தூவி இருக்கிறார் இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான். அவை ஒருபுறம் செவிக்கு தேனாய் பாய்ந்து கொண்டிருக்க இன்னொரு புறம் பின்னணி இசை மூலம் பார்ப்பவர்களுக்கு கூஸ் பம்ப் கொடுத்திருக்கிறார். இவரின் நேர்த்தியான இசைக் கோர்ப்பும், அக்காலகட்டத்தின் இசைக் கருவிகளை பயன்படுத்திய விதமும், தேவைப்படும் இடங்களில் இவர் கொடுத்த பின்னணி இசையும் படத்தை உலக தரத்திற்கு எடுத்துச் சென்று ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் இன்னொரு நாயகனாக மாறியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர்கள் இருவருக்கும் இணையாக சரியான டஃப் கொடுத்து கலை இயக்கம் மூலம் நம்மை சோழ தேசத்திற்கே கொண்டு சென்று இருக்கிறார் கலை இயக்குநர் தோட்டா தரணி. இவரின் ஒவ்வொரு செட் அமைப்புகளும் அவ்வளவு லைவாக அமைந்து நம்மை சோழ தேசத்திற்குள் உலா வரச் செய்துள்ளது.

இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் கூட முயன்று எடுக்க முடியாத ஒரு படத்தை வெற்றிகரமாக ரசிக்கும்படி கொடுத்ததற்காகவே முதலில் இயக்குநர் மணிரத்தினத்திற்குபாராட்டுக்கள். அதேபோல் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள கதையாடலையும் காட்சி அமைப்புகளையும் இன்றைய டெக்னாலஜியின் மூலம் நம் கண் முன் காட்சிப்படுத்தி அதை சிறப்பாகவும் கொடுத்திருக்கிறார். அதேபோல் இன்றைய தலைமுறையினர் பொன்னியின் செல்வன் நாவலைப் பற்றி பெரிதாக தெரியாதவர்கள் கூட இப்படத்தை பார்த்து நாவலில் உள்ள சுவாரசியத்தை இப்படம் மூலமும் பெற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். இதன் மூலம் நம் தமிழரின் வரலாறு இன்றைய தலைமுறையினரிடமும் போய் சேர்ந்திருக்கிறது. இதுவே மணிரத்னம் செய்த மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சரித்திர படங்கள் வர இது ஒரு பிள்ளையார் சுழியாகவும் அமைந்திருக்கிறது. இப்படியான மிக முக்கிய காரணங்களுக்காகவே பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்ப்பது தமிழர்களின் கடமையாக மாறி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2 - வெற்றி முழக்கம்!!

jayam ravi aiswarya rai trisha actor vikram actor karthi manirathnam Ponniyin Selvan 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe