Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

இவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு?  பேட்ட விமர்சனம் 

சூப்பர் ஸ்டார்... இந்தப் பெயரை அடைய, அதிலேயே நிலைக்க, இன்னும் உயர உயரப் பறக்க... ரஜினிகாந்த் என்னும் நடிகர் செய்தது கொஞ்சநஞ்சமில்லை. அவருக்கு முன்னும் பின்னும் அவர் போன்ற ஒரு நடிகரை தமிழ் சினிமா கண்டதில்லை. அவருக்குப் பின் அவர் அளவுக்கு ரசிகர்கள், வர்த்தகம் கொண்ட நடிகர் இன்னும் வரவில்லை. இத்தகைய ரசிகர் கூட்டம், அவரிடமிருந்து எதிர்பார்ப்பது ஆழமான கருத்துகளோ, அழுத்தமான பொறுமையோ, யதார்த்தமோ இல்லை, தங்களால் முடியாததை தங்கள் ஸ்டார் செய்யும் அந்த கூஸ்-பம்ப் மொமெண்ட்டுகளைத்தான் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது இயக்குனர், மன்னிக்கவும் ரஜினி ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'பேட்ட'. இந்த எதிர்பார்ப்பும் இந்த பிம்பமும்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறையும், சிறகும். தனது அசைவுகளே ரசிக்கப்படும் ஒரு நடிகனுக்கு இது நேர்வது இயல்புதான். அப்படிப்பட்ட ஒருவரை, ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாரை எப்படியெல்லாம் காட்டினால் ரசிகர்கள் கொண்டாடுவார்களோ அப்படியெல்லாம் காட்டியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

 

rajini pettaஊட்டியில் ஒரு கல்லூரியில் மிகப்பெரிய சிபாரிசில் ஹாஸ்டல் வார்டனாக வந்து வேலைக்குச் சேரும் காளியாக ரஜினி. வந்தவுடன் அங்கே நடக்கும் அநியாயங்களை ஒவ்வொன்றாகத் தட்டியும் அடித்தும்  கேட்டு அதகளப்படுத்துகிறார். அந்தக்  கல்லூரியில் படிக்கும் சனந்த், மேகா ஆகாஷ் காதலுக்கு உதவி செய்கிறார். அதே கல்லூரியில் இருக்கும் பாபி சிம்ஹா தலைமையிலான கலாச்சார காவல் ரவுடி கும்பல் சனந்த் - மேகா ஜோடியைத் தாக்க, அவர்கள் பிரச்சனையில் சூப்பர் ஸ்டார் இறங்குகிறார். சனந்தை பாபி சிம்ஹா குழுவைத் தவிர இன்னொரு கூட்டமும் கொல்லத் துரத்த, அவரைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்கிறார் ரஜினிகாந்த். சனந்த் யார், அவரைக் காப்பாற்றும் ரஜினி யார்? இருவருக்கும் என்ன உறவு? அவர்களுக்கு யார் பகை? என்பதையெல்லாம் ரசிகர்களை ரஜினிஃபை பண்ணிச் சொல்லும் படம்தான் 'பேட்ட'.

உடம்பில் உள்ள நாடி, நரம்பு, ரத்தம், சதை என அனைத்திலும் ரஜினி வெறி ஊறிய ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும். அந்த அளவிற்கு இத்தனை வருட காலமாக ரசிகர்கள் ரஜினி படத்தில் எதை ரசித்தார்களோ, என்ன எதிர்பார்த்தார்களோ அதையெல்லாம் ஒன்று சேர்த்து சிறப்பாகப் படமாக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தைக்கு ஒவ்வொரு ஃப்ரேமிலும் மாஸாக அர்த்தம் சொல்லியுள்ளார். ஒரு படமாக, கதைக் கரு, அதிலிருந்து காட்சிகள் என்று உருவாகாமல், ரஜினியை எப்படியெல்லாம் காட்ட முடிவு செய்தாரோ அந்தத் தருணங்களையெல்லாம் எழுதிச் சேர்த்து ஒரு கதையை உருவாக்கியது போல இருக்கிறது பேட்ட. அதற்காக ரஜினி, நிற்க, நடக்க, அடிக்க என்றில்லாமல் ஒரு பலமான கதை, காரணங்களுடன் ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களும் கூட ரசிக்கும்படி கொடுத்துள்ளதுதான் பேட்ட ஸ்பெஷல்.

 

vijay sethupathi'ஸ்டைலா இருக்கேனா? நேச்சுரலி' என்று சிரிக்கும் ரஜினி, படத்தில் நிற்பது, நடப்பது, அடிப்பது, ஆடுவது என அத்தனையிலும் உற்சாகம். ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை ஆற்றல். மீண்டும் ஒருமுறை தனக்குத்தானே F5 அழுத்திக்கொண்டது போல வந்து நிற்கிறார். 'சேச்சே இது ரொம்ப நல்லா இருக்கு' என்று சிம்ரனுடன் ரொமான்ஸ் செய்வதிலும், 'பாம்பு பாம்பு' என அண்ணாமலை ஸ்டைலில் முனீஸ்காந்த்தை கலாய்ப்பதிலும், 'அடிச்சது யாரு...' என்று கெத்து காட்டுவதிலும், 'கொல்லணும்னா கொன்னுடனும், பேசிக்கிட்டுருக்கக் கூடாது' என்று போட்டுத் தள்ளுவதிலும் ரஜினி ரஜினிதான். தனக்கு இது ஒரு கம் - பேக் என்று தானே முடிவு செய்து நடித்தது போல இருக்கிறது அவரது எனர்ஜி. ஹாஸ்டல் வார்டன் 'காளி'க்கு இவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே என்று எழும் எண்ணத்துக்கு சரியாக பதில் சொல்கிறார் ஃப்ளாஷ்பேக் 'பேட்ட' வேலன். ரஜினிதான், அவர் யாரை வேண்டுமானாலும் எத்தனை பேரை வேண்டுமானாலும் அடிக்கலாம் என்றாலும் கூட அந்த வலிமைக்குத் தகுந்த நியாயம் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர்.

ரஜினி அணியும் ஒவ்வொரு உடை, அவரது நடை, அவர் தோன்றும் ஃப்ரேம், அமரும் தோரணை என ஒவ்வொன்றையும் செதுக்கியுள்ளார். இதனாலோ என்னவோ மற்ற எந்த கதாபாத்திரத்தையும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையோ என்ற எண்ணம் நேர்கிறது. புதிது என்று சொல்ல முடியாத கதையில், காட்சிகள் அளவுக்கு கதாபாத்திரங்கள் அழுத்தமாக இல்லை. அந்தக் குறையைத் தாண்டியும் கவனிக்கவைப்பவர் விஜய் சேதுபதிதான். ஜித்து பாத்திரத்தில் வடஇந்தியராக தன் ஸ்டைல் அசால்ட் ஹிந்தியில் கெத்து காட்டுகிறார். ஆனால் அந்தப் பாத்திரத்தின் முடிவு, பலகீனம். பிரம்மாண்ட பலூனாக ரஜினி பறக்க காத்தாடி போல் சிறிதாகிறார்கள் மற்ற அனைவரும். சிம்ரன் மட்டுமே அதில் ஸ்வீட் சர்ப்ரைஸ். ரஜினி போலவே சிம்ரனுக்கும் ரசிகராக இருந்திருப்பார் போல கார்த்திக். சமீபத்தில் இவ்வளவு அழகாக அவரைப் பார்த்ததில்லை. அப்படி இருக்கிறார் சிம்ரன். வில்லன் சிங்காரம் என்ற சிங்காராக நவாஸுதீன் சித்திக்கி. இப்படி ஒரு நடிகருக்கு இது ஏமாற்றம் தரும் பாத்திரம்தான் என்றாலும், கிடைத்த இரண்டு நல்ல காட்சிகளில் வெளுத்து வாங்கியுள்ளார். சசிகுமாருக்கு நல்ல நண்பர் பாத்திரம், அவரது இயல்போடு நடித்துள்ளார். த்ரிஷா, பாபி சிம்ஹா, சோமசுந்தரம், மகேந்திரன், முனீஸ்காந்த், ஆடுகளம் நரேன், துரைராஜ் உள்பட இன்னும் பலர் படத்தில் இருக்கிறார்கள்.

 

petta nawasuddin siddiqueநம்மவர் + பாட்ஷா நினைவுபடுத்தும் கதை, ரஜினியின் பெர்ஃபார்மென்ஸைத் தாண்டி பெரிய திருப்பங்கள் சுவாரசியங்கள் இல்லாத திரைக்கதை, நீ...ளமான இரண்டாம் பாதி, எத்தனை பேர் சுற்றி நின்று சுட்டாலும் ஒரு குண்டும் ரஜினி மேலே படாமல் இருப்பது என பல குறைகள் இருக்கும் படம்தான் இது. என்றாலும் சண்டைக் காட்சிகள் திட்டமிடப்பட்டு, உருவாக்கப்பட்ட விதம், காட்சிகளின் பலமாகத் திகழும் பின்னணி இசை என படம் ஈர்க்கிறது.

இரண்டு மணிநேரம் ஐம்பது நிமிடங்கள் ஓடும் படத்தில் படத்திற்கு இன்னொரு நாயகனாகத் திகழ்ந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இவரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்தும் மாஸ் ஹிட். திருவின் ஒளிப்பதிவு உலகத்தரம். ஊட்டியின் குளிர், மதுரையின் வெயில், உத்திரபிரதேசத்தின் புழுக்கம் என அத்தனையும் காட்சிகளின் வண்ணத்தில் சரியாகப் பதிவாகியுள்ளன. முதல் பாதியின் அழகுக்கு ஒளிப்பதிவு மிக முக்கிய காரணம். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் எஃபெக்டுகளெல்லாம் எகிறினாலும், இரண்டாம் பாதியிலும் கொஞ்சம் கத்திரியை பயன்படுத்தியிருக்கலாம். ரஜினியிசம்தான் முக்கியமாக இருந்தாலும், கலாச்சார காவலர்கள், மாட்டுக்கறி விவகாரம், ஆற்று மண் சுரண்டல், என வசனங்களாகவும் காட்சிகளாகவும் சில  இஸங்களை தாக்கியிமிருக்கிறார் கார்த்திக். ரஜினிக்கான பன்ச் வசனங்களில் சில மீம்ஸாகும் தகுதியுடன் இருக்கின்றன.

பேட்ட - இது சூப்பர் ஸ்டார் கோட்ட!!! 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்