Advertisment

ஈகோ கிளாஷில் யார் வென்றது? - ‘பார்க்கிங்’  விமர்சனம்!

Parking movie review

எல்.ஜி.எம் கொடுத்த சிறு சறுக்கலைசரி செய்யும் முயற்சியில் பார்க்கிங் படம் மூலம் மீண்டும் களமிறங்கி இருக்கிறார் நாயகன் ஹரிஷ் கல்யாண். மலையாள சினிமாக்களைப் போல் ஒரு அழுத்தமான ஒன்லைனை வைத்துக்கொண்டு உருவாகி இருக்கும் இத்திரைப்படம் எந்த அளவு பார்ப்பவர்களை ஈர்த்தது..?

Advertisment

ஐடி கம்பெனியில் வேலை செய்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது கர்ப்பமான மனைவி இந்துஜாவுடன் ஒரு புதிய வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். அதே வீட்டின் கீழ் போர்ஷனில் எம்.எஸ்.பாஸ்கர் அவரது குடும்பத்துடன் நீண்ட காலமாக வாடகைக்கு வசித்து வருகிறார். கர்ப்ப காலத்தில் தன் மனைவியை அலுங்காமல், குலுங்காமல் வெளியே கூட்டிச் செல்ல வசதியாக இருக்க புதிய கார் ஒன்றை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண். வாங்கிய காரை தான் குடியிருக்கும் வீட்டின் கீழ் போர்ஷனுக்கு அருகே பார்க் செய்கிறார். அருகில் அரசு அதிகாரியாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் இருசக்கர வாகனமும் நிறுத்தி வைக்கப்படுகிறது. தினமும் கீழ் போர்ஷன் அருகே காரை பார்க் செய்வதால் தனது இருசக்கர வாகனத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதால் எம்.எஸ்.பாஸ்கருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் முட்டல் மோதல் ஏற்படுகிறது. இந்த சண்டை நாளடைவில் கைகலப்பு வரை சென்று விட போட்டிக்கு எம்.எஸ்.பாஸ்கரும் ஒரு கார் வாங்குகிறார். இருவரில் யார் அந்த இடத்தில் வண்டியை பார்க் செய்வது என்ற ஈகோ சண்டை ஏற்படுகிறது. இறுதியில் இந்த ஈகோ கிளாஷில் யார் வென்றது? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

Advertisment

மலையாள சினிமா போல் ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு ஒரு முழு நீளப் படமாக கொடுத்து அதையும் ரசிக்கும்படி கொடுத்து இருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். நமது அக்கம்பக்கத்தில் நடக்கும் சமகால பார்க்கிங் பிரச்சனையை கையில் எடுத்துள்ள இயக்குநர், அதைத்திறம்படக் கையாண்டு இரண்டு பேருக்குள் பார்க்கிங்கால் ஏற்படும் ஈகோ சண்டையை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். ஒரு கதையாக பார்க்கும் பட்சத்தில் இது சிறிய விஷயமாக பார்க்கப்பட்டாலும் உளவியல் ரீதியாக இந்த பார்க்கிங் பிரச்சனை மக்களுக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை எதார்த்தமாக காட்சிப்படுத்தி படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். முதல் பாதி முழுவதும் அடுத்தடுத்து காட்சிகள் வேகமாக நகர்ந்து இரண்டாம் பாதி சற்றே வேகம் குறைந்து இறுதியில் மறுபடி சூடுபிடித்து நிறைவாக முடிந்துள்ளது.

நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மிரட்டி இருக்கிறார். வசன உச்சரிப்புகளை காட்டிலும் முகபாவனைகளிலும், கண் அசைவுகளிலும் மிகுந்த வில்லத்தனம் காட்டி நடிப்பில் அடுத்த பரிமாணத்தை எட்டி இருக்கிறார். ஒரு பக்கம் தன் அனுபவ நடிப்பால் வில்லத்தனம் காட்டி மிரட்டிக் கொண்டிருக்கும் எம்.எஸ்.பாஸ்கருக்கு நிகராக தன் நடிப்பை சிறப்பாக கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்த்திருக்கிறார். இதுவரை சாக்லேட் பாயாக பார்த்த ஹரிஷ் கல்யாண், இந்தப் படம் மூலம் புதிய பரிமாணத்தில் பார்க்கலாம். வழக்கம்போல் தன் அனுபவநடிப்பால் வில்லத்தனத்திற்கு உயிரூட்டி இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவருக்கும் ஹரிஷ் கல்யாணுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் நீயா நானா என்று போட்டி போட்டுக் கொண்டு நடித்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றனர்.

இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் ஈகோ சண்டை படத்திற்கு பிளஸ் ஆக மாறி இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு எம்.எஸ். பாஸ்கர் மீண்டும் ஒருமுறை கவனம் ஈர்த்திருக்கிறார். நாயகி இந்துஜா வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். படத்தில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. ஆனால் கிடைக்கின்ற இடங்களில் ஆங்காங்கே சிறிது ஸ்கோர் செய்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமா ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அவரவர் கதாபாத்திரங்கள் மூலம் படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.

பாடல்களைக் காட்டிலும் சாம் சி.எஸ். பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. பொதுவாக இரைச்சலான சத்தத்துடன் கூடிய பின்னணி இசை அமைத்து எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய சாம் சி.எஸ். இந்தப் படத்தில் சற்றே அடக்கி வாசித்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறார்.ஜிஜுவின் ஒளிப்பதிவில் வீடு மற்றும் பார்க்கிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு சிறிய பார்க்கிங் பிரச்சனையை வைத்துக்கொண்டு முழு நீளத்திரைப்படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் அதை ஆங்காங்கே சில மேடு பள்ளங்களுடன் கூடிய திரைக்கதையுடன் விறுவிறுப்பாக ரசிக்கும்படி கொடுத்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார்.

பார்க்கிங் - அவசியம்!

harish kalyan moviereview ms bhaskar Parking Movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe