முன்னாள் வன்னியர் சங்க தலைவரும் எம்எல்ஏவும் ஆன காடுவெட்டி குரு வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் படையாண்ட மாவீரா. கனவே கலையாதே, மகிழ்ச்சி ஆகிய படங்களை இயக்கிய வா.கௌதமன் இயக்கி நடித்து இருக்கும் இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளதா, இல்லையா?

Advertisment

தனது ஊர் மக்களுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் பாதுகாவலனாக திகழும் வா.கௌதமன் போலீஸ் முதல் அரசாங்கம் வரை அவர் சார்ந்த மக்களுக்காக பகைத்துக் கொண்டு மல்லு கட்டுகிறார். இதனால் அவர் மீது பல்வேறு வழக்குகள் பாய்கிறது. இன்னொரு பக்கம் அவரின் எதிரிகள் அவரை காலி செய்ய திட்டம் தீட்டுகின்றனர். ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்கி எம்எல்ஏ ஆன பிறகும் கூட இந்த அச்சுறுத்தல் தொடர்ந்து வர இறுதியில் அவர் என்னவானார்? என்பதே படையாண்ட மாவீரா படத்தின் மீதி கதை. 

190

மறைந்த முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் கற்பனை கலந்து பழிவாங்கல் கதையாக கமர்சியல் கலந்த திரைப்படமாக இதை உருவாக்கி அதில் நடித்திருக்கிறார் வா கௌதமன். இது ஒரு பயோபிக் படமாக மட்டுமல்லாமல் அதை மக்கள் ரசிக்கும்படி ஜனரஞ்சகமான முறையில் கமர்சியல் படமாக கொடுக்கும் முயற்சியில் இருந்த இயக்குனர் அதில் சற்றே சறுக்கி இருக்கிறார். கதை சொன்ன விதத்தில் எந்தவித புதுமையும் இல்லாமல் அரைத்த மாவையே அரைப்பது போன்ற ஹைதர் அலி காலத்து திரைக்கதை அமைத்து அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். படத்தில் ஆங்காங்கே சில இடங்கள் மட்டும் ஓரளவு ரசிக்கும்படி இருப்பது ஆறுதலாக அமைந்திருக்கிறது. 

வா.கௌதமன் நாயகனாக புத்துணர்ச்சியுடன் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு சாயலில் பல்வேறு நடிகர்கள் தென்படுகின்றனர். எடுத்துக்கொண்ட கதையும் கதாபாத்திரத்தையும் கூறியிருக்கும் இயக்குனர் அதை இன்னமும் சிறப்பான முறையில் செய்து இருக்கலாம். நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா வழக்கமான நாயகியாகவே வந்து செல்கிறார். இவரின் தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரகனி சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதியும்படி தனது வழக்கமான நடிப்பால் கவர்கிறார். சமுத்திரகனியின் மனைவியாக வரும் சரண்யா பொன்வண்ணன் அனுபவ நடிப்பின் மூலம் மிளிர்கிறார். பொதுவாக காமெடி வேடத்தில் நடிக்கும் ரெடீம் கிங்ஸ்லி இதில் கொஞ்சம் குணச்சித்திர வேடமும் ஏற்று இருப்பது ஆறுதல். அதையும் சிறப்பான முறையில் அவர் செய்திருக்கிறார். மற்றபடி உடன் நடித்த மன்சூர் அலிகான், ஆடுகளம் நரேன், மது சூதனன் ராவ், இளவரசு உள்ளிட்ட பலர் அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்று இருக்கின்றனர். 

Advertisment

188

ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் சி எஸ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் அதிரடி ஆக்சன் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.காடுவெட்டி குருவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து அதனுள் கற்பனை கதைகளை கலந்து சொல்ல வந்த விஷயத்தை ஓரளவு உணர்ச்சிபூர்வமாக சொன்ன இயக்குனர் காட்சிகளில் மற்றும் திரைக்கதையில் இன்னமும் கூட புதுமைகளை புகுத்தி இருக்கலாம். 

படையாண்ட மாவீரா - சூடு ஓகே சுகர் கம்மி!