Skip to main content

தினம் தினம் கடக்கும் 'முறை தவறிய உறவு' செய்திகளுக்குப் பின்.... ஒரு குப்பைக் கதை!

Published on 26/05/2018 | Edited on 26/05/2018

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் ஏற்படும் விளைவை யதார்த்தமாக எடுத்துச் சொல்லும் (ஒரு குப்பை) கதை.

 

oru kuppai kathai



கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் தினேஷ், குப்பை அள்ளும் வேலை செய்து வருகிறார். தனது வேலையை மனதார நேசித்து செய்து வருகிறார். நீண்ட நாட்களாக பெண் தேடியும் சரி வர அமையாத தினேஷிற்கு ஒரு வழியாக மனிஷா யாதவ் கிடைத்து விடுகிறார். தான் கிளர்க் வேலை செய்வதாக மனிஷா யாதவிடம் பொய் சொல்லி மணமுடிக்கிறார் தினேஷ். இருவரும் மணமுடித்த பின்னர் தினேஷ் இல்லத்திற்கு வருகிறார்கள். அங்கு இருக்கும் சூழல், வாழ்க்கை, மனிஷாவிற்கு அருவருப்பாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் தினேஷ் ஒரு குப்பை அள்ளும் தொழிலாளி என்று மனிஷாவிற்குத் தெரிய வர, ஏற்படும் பிரச்சனைகளும் மனிஷா எடுக்கும் முடிவும் விளைவுகளும்தான் இயக்குனர் காளி ரெங்கசாமியின் 'ஒரு குப்பை கதை'.

 

 


குப்பை அள்ளும் தொழிலாளியாக வரும் நடன இயக்குனர் தினேஷின் இயல்பான உருவம் அந்தப் பாத்திரத்துக்கு மிக பொருத்தமாக இருக்கிறது. அவரும் முயற்சி எடுத்து அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தினேஷிற்கு நடிப்பில்  முதல் படம் என்பது போல் தெரியவில்லை. மனைவியைப் பிரிந்த சோகம், குழந்தை மீதான ஏக்கம், குடிகாரனின் உடல்மொழி, பேச்சு என ஒரு யதார்த்த நடிகனாக முயற்சி செய்திருக்கிறார், அதற்கேற்ற நல்ல கதையில் அறிமுகமாகியிருக்கிறார்.  பெரும்பாலான காட்சிகளில் முகத்தை ஒரே மாதிரியாக வைத்திருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம். மனிஷா யாதவ் மீண்டும் ஒரு முறை, அதிர்ச்சி தரும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிக்கும் பாத்திரங்களே நடிப்பவர்களின் இமேஜ் ஆக நினைக்கப்படக்கூடிய சூழலில் இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்க கண்டிப்பாக ஒரு தைரியம் வேண்டும். தன் கதாபாத்திரத்தின் கனத்தை உணர்ந்து நடித்துள்ளார். கணவன் குப்பை தொழிலாளி என தெரிந்ததும் கொடுக்கும் வெறுப்பு, சமூகத்தை மீறிய ஆசை என பக்குவமான நடிப்பு. இந்தப் படத்திலும் யோகிபாபு இருக்கிறார், சிரிக்க வைக்கிறார். தமிழ் சினிமாவில் இப்பொழுது அவரது அலை. ஜார்ஜ், ஆதிரா, கோவை பானு, செந்தில், லலிதா, சுஜோ மாத்யூஸ், கிரன் ஆர்யன் ஆகியோர் அவரவர் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப உறுத்தலில்லாமல் இருக்கிறார்கள்.

 

 

oru kuppai kathai



அனைத்தையும் மறந்து ஆசைகளின் பின்னே செல்லும் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி திசைமாறிப் போகும் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் காளி ரெங்கசாமி. ரொம்ப ஆர்ப்பாட்டமில்லாமல் நாம் தினசரி செய்திகளில் படித்துக் கடந்து போகும் 'முறை தவறிய உறவு' விவகாரத்துக்குப் பின்னால் இருக்கும் பாதிப்புகளையும், பிரச்சனைகளையும், எந்த சினிமாத்தனமும் இல்லாமல் யதார்த்தமாக சொல்லி இருக்கிறார். ஒரு பெண், தன் ஆசைகளுக்காக   கணவனை விட்டுப் பிரிந்து சென்றாலும், அதை ஆண்களின் கண்ணோட்டத்திலேயே கூறாமல் அவளுக்கு இருக்கும் உரிமையையும் நியாயமாகக் கூறி இருக்கும் விதம் நன்று. 

 

oru kuppai kathai



கதையோட்டத்தை எளிதாக யூகிக்க முடியும் வகையில் அமைந்திருக்கும் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி ஒரு எளிமையான படத்தில், வலிமையான விஷயம். அதை வாங்கி விநியோகித்திருக்கும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்க்கு 'மைனா'விற்குப் பின் ஒரு நல்ல பெயர். 'காதல்' ஜோஷ்வா ஸ்ரீதரின் பாடல்கள் கதையோடு ஒட்டியுள்ளன, ஆனால் நம் மனதோடு ஒட்டவில்லை. தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசை சில இடங்களில் அதீதம், பெரும்பாலும் அருமை. நா.முத்துக்குமாரின் வரிகள் பாடல்களுக்கு உயிரூட்டி இருக்கின்றன. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு சென்னை குப்பத்தின் அழகையும், அருவருப்பையும் நேர்த்தியாக காட்சிபடுத்தியிருக்கிறது. 

இந்த 'குப்பைக் கதை' வீண் அல்ல, நமக்கு அவசியமானது.





 

சார்ந்த செய்திகள்

Next Story

காளி பட சர்ச்சை; இயக்குநர் லீனா மணிமேகலைக்கு சம்மன் 

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

Delhi court summons Leena Manimekalai Kali film controversy case

 

பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை புதிதாக எடுத்து வரும் ஆவணப்படம் 'காளி'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியை பிடித்தவாறு இருந்தது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் மற்றும் இந்துத்துவ வாதிகள் இயக்குநர் மணிமேகலைக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். இதனிடையே டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்தனர். 

 

இந்நிலையில்  இது தொடர்பாக இயக்குநர் லீனா மணிமேகலை  நவம்பர் 1 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என  டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

'காளி' சர்ச்சை - இயக்குநருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 12/07/2022 | Edited on 12/07/2022

 

kaali poster issue - Court send Summon to director leela manimegalai

 

பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை புதிதாக எடுத்து வரும் ஆவணப்படம் 'காளி'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியை பிடித்தவாறு இருந்தது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு லீனா மணிமேகலை மீண்டும் சிவன், பார்வதி வேடமிட்ட இருவர் சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். 

 

இந்நிலையில் இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, லீனா மணிமேகலையை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனச் சம்மன் அனுப்பச்சொல்லி உத்தரவிட்டார்.