கதைக்குள் கதை ஒர்க் அவுட் ஆனதா? - ‘ஓஹோ எந்தன் பேபி’ விமர்சனம்

400

நடிகர் விஷ்ணு விஷால் தன் தம்பியை ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகனாக அறிமுகம் செய்திருக்கிறார். இந்த படத்தில் அவரே தயாரிப்பாளராகவும் மாறி அதே சமயம் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருக்கிறார். இப்படி பல விஷயங்கள் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பை எகிற செய்த நிலையில் அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் இப்படம் பூர்த்தி செய்ததா, இல்லையா? 

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் அறிமுக நாயகன் ருத்ரா, நடிகர் விஷ்ணு விஷாலை பார்த்து அவரிடம் முதல் படம் பண்ணுவதற்காக தன்னுடைய வாழ்க்கை கதையை கூறுகிறார். இவர் சிறு வயது முதல் தற்போது இருக்கும் நிலை வரை காதலித்த நபர்கள் மற்றும் நாயகி மிதிலாவுடன் நடந்த பிரேக்கப் வரை சொல்லி கதையை முடிக்கிறார். அடுத்து என்ன ஆனது என நாயகன் விஷ்ணு விஷால் கேட்க, அதற்கு ருத்ரா இவ்வளவு தான் இப்போது வரை வாழ்வில் நடந்துள்ளது என்றும் அடுத்த என்ன ஆகும் என்பது இனிமேதான் தெரியும் என்றும் பதிலளிக்கிறார். இந்த கதையை கேட்ட விஷ்ணு விஷாலுக்கு மிகவும் பிடித்துவிட்டதாக சொல்லி, ருத்ராவை மீண்டும் போய் அவரது காதலியை சந்திக்க சொல்கிறார். மேலும் அந்த சந்திப்பிற்கு பிறகு என்ன நடக்கிறதோ அதையே முழு கதையாக மாற்ற சொல்லி அனுப்பி விடுகிறார். இதைத்தொடர்ந்து பிரிந்து சென்ற மிதிலாவை மீண்டும் சந்திக்க வெளியூர் செல்கிறார் ருத்ரா. போன இடத்தில் மிதாலியை சந்தித்து உடைந்து போன காதலை மீண்டும் ஒற்ற வைத்தாரா, இல்லையா? முழு கதையை உருவாக்கி விஷ்ணு விஷாலிடம் சொல்லி படம் எடுத்தாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

399

விஷ்ணுவர்தனிடம் உதவியாகவும் இருந்து கொண்டு அதே சமயம் அவர் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த பிரபலமான நடிகரும் விளம்பர பட இயக்குநருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் அறிமுக நாயகன் ருத்ராவுடன் இணைந்து கொண்டு தானும் தமிழ் சினிமாவில் இயக்குநராக இந்த ஓஹோ எந்தன் பேபி மூலம் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படமே ரொமான்டிக் படமாக தேர்வு செய்திருக்கும் இயக்குநர் கிருஷ்ணகுமார் அதை இந்த கால 2-கே இளைஞர்களுக்கு ஏற்றவாறு நேர்த்தியாக எடுத்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். பள்ளிப் பருவ காதல் முதல் அனுபவக் காதல் வரை ஒவ்வொரு காதல் பருவங்களையும் கடக்க செய்து இந்த கால இளைஞர்களை அப்படியே கண்முன் நிறுத்தி அதன் மூலம் ஒரு ஜென்சி காதல் கதையை இக்கால இளைஞர்கள் ரசிக்கும் படி கொடுத்து அதற்கு ஏற்றார் போல் ரெப்ரெஷ்ஷிங்கான காதல் காட்சிகளையும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். 

இந்த மாதிரியான கதைக்களங்கள் நாம் ஏற்கனவே பார்த்து பழகியபடி இருந்தாலும் காட்சி அமைப்புகள் புதுமையாகவும் பிரஷ்ஷாகவும் இருப்பது படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகள் என்ன நடக்கப் போகிறது என்பது முன்பே யூகிக்கும்படி இருந்தாலும் கதாபாத்திர தேர்வு நடித்த நடிகர்களும் ஃபிரஷ்ஷாக இருப்பதும் அதற்கு ஏற்றார் போல் ரொமான்டிக் காமெடிகளும் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதும் படத்திற்கு பக்கபலமாக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. இந்த கால இளைஞர்களை மனதில் வைத்துக் கொண்டு படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் மற்ற ரசிகர்களும் ரசிக்கும்படி குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இந்த படத்தை எடுத்திருந்தால் இந்த படம் இன்னும் நன்றாக பேசப்பட்டு இருக்கும். 

398

அறிமுக நாயகன் ருத்ரா அறிமுக நாயகன் போல் இல்லாமல் தேர்ந்த நடிகர் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவரின் துறுதுறு நடிப்பு யதார்த்த வசன உச்சரிப்பு மற்றும் முகபாவணிகள் ஆகியவை பிரஷ்ஷாக இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய நாயகன் கிடைக்க உதவி இருக்கிறது. ஏற்கனவே பாலிவுட்டில் மிகவும் பிரபலமான மிதிலா பால்கர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். மிகவும் பப்லியான பெண்ணாக நடித்திருக்கும் இவர் அழகான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவர் நடித்திருக்கும் வெப் தொடர்களில் எப்படி நடிப்பாரோ அதேபோன்ற ஒரு நடிப்பையே இந்த படத்திலும் கொடுத்து ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு இன்னொரு புதிய நாயகி கிடைத்து விட்டார்.

ருத்ராவின் நண்பராக வரும் நடிகர் மிகச் சிறப்பாக நடித்து வழக்கமான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல் மிதிலாவின் தங்கையாக வரும் நடிகையும் சிறப்பான முறையில் நடித்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் கருணாகரன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் அவரவருக்கு ஏற்ப சிறப்பாக நடித்து கலகலப்பூட்டி இருக்கின்றனர். இவர்களின் கதாபாத்திரம் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கின்றனர். 

397

ஜென் மார்டின் இசையில் பாடல்கள் துள்ளலாக அமைந்திருக்கிறது. இந்த கால இளைஞர்களுக்கு ஏற்ப ஜென்சி பாடல்களை கொடுத்து கவர்ந்திருக்கிறார். அதேபோல் பின்னணி இசையும் காதல் காட்சிகளுக்கு ஏற்றார் போல் சிறப்பாக அமைந்து அதே சமயம் காமெடி காட்சிகளுக்கு சிறப்பாக இசையமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் காட்சிகள் மிகவும் கலர்ஃபுல்லாகவும் ரிஃப்ரெசிங் ஆகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக எக்ஸ்டீரியர் காட்சிகள் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் அவை கதை ஓட்டத்திற்கும் நன்றாக உதவி இருக்கிறது. 

விளம்பரப் படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கிருஷ்ணகுமார், இந்த படத்தில் ஜோசியராக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் அதையும் சிறப்பாக செய்து படத்தையும் விளம்பர படங்கள் போல் கலர்ஃபுல்லாகவும் சிறப்பான முறையில் அழகாகவும் அனைத்தையும் காட்டியிருக்கிறார். இவை அனைத்தையும் சிறப்பாக செய்த இயக்குநர் கிருஷ்ணகுமார் காட்சிகளுக்குள் இருக்கும் கதை கருவையும் ஆன்மாவையும் திரைக்கதை வேகத்தையும் இன்னும் கூட சிறப்பாக அமைத்திருக்கலாம். மற்றபடி இந்த கால ஜென்சி-களுக்கே உரித்தான ஒரு கதை அமைப்பை வைத்துக்கொண்டு அவர்களுக்கு பிடித்தவாறு இந்த படத்தை கொடுத்திருப்பது படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. 

ஓஹோ எந்தன் பேபி -  வர்ணஜாலம்!

actor vishnu vishal Movie review
இதையும் படியுங்கள்
Subscribe